பிரான்சின் அமைச்சரான ஆடு மேய்க்கும் பெண்!
ஏழை நாடு ஒன்றில் பிறந்த Najat Vallaud-Belkacemஐ சிண்ட்ரெல்லா கதையில் வருவது போல், ஒரு தேவதை இளவரசியாக்கி அழைத்து வந்து அரண்மனையில் விடவும் இல்லை, வீட்டு வேலை செய்தவரை எந்த இளவரசனும் காதலித்து திருமணம் செய்து இளவரசியாக்கவும் இல்லை.
வறுமையில் வாடிய குடும்பத்தில் வாழ்ந்த Najat, பிழைப்பதற்காக வேறொரு நாட்டுக்கு புலம்பெயரவேண்டிய சூழல்.
அங்கேயும் மொழிப்பிரச்சினை, கலாச்சார வேறுபாடுகளால் முட்டுக்கட்டைகள். மதமும் கலாச்சார வேறுபாடுகளும் அவரை ஒதுக்கியே வைத்திருந்தன.

ஆனால், அவ்வளவு தடைகளையும் தாண்டி, அத்தனை போராட்டங்களையும் புறந்தள்ளி, இன்று பிரான்சின் கல்வி அமைச்சராக சாதித்து வருகிறார் Najat.
அது மட்டுமல்ல, வரலாற்றையே மாற்றி எழுதி, புலம்பெயர்ந்தோர் சமுதாயத்தில் முதல் பெண் அமைச்சர், இளம் வயதில் கல்வி அமைச்சரானவர் என்ற பெருமைகளையும் பெற்றுள்ளார் Najat.
மொராக்கோ நாட்டின் எல்லையோரமாக அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் Najat Vallaud-Belkacem.
ஏழு பிள்ளைகள் உள்ள ஏழைக் குடும்பத்தில் இரண்டாவது மகளாக பிறந்ததால், குடும்பச்சுமையை பகிர்ந்துகொள்வதற்காக ஆடு மேய்க்கும் வேலைக்குச் சென்றார் Najat.
தந்தை பிரான்சில் கூலி வேலை செய்து வந்தார். Najatக்கு ஐந்து வயதாகும்போது, அவரையும் அவரது மூத்த சகோதரி மற்றும் தாயையும் பிரான்சுக்கு அழைத்துக்கொண்டு வந்தார் அவரது தந்தை. பிழைப்பதற்காக வந்த நாடு வாழ்க்கையையே மாற்றிவிட்டது.
எல்லாவற்றிற்கும் மேல், Najatக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்த விடயம், அவர் பிரான்சில் பள்ளிக்கு செல்லலாம் என்பதுதான்.
ஆனால் பள்ளி அவர் எதிர்பார்த்ததுபோல் கைநீட்டி அவரை வரவேற்கவில்லை. அங்கும் மொழிப்பிரச்சினை, வேறு கலாச்சாரத்தை சேர்ந்தவர் என்பதால் பிள்ளைகள் ஒதுக்கி வைத்ததோடு, கேலிக்கும் உள்ளானார் Najat.
ஆனாலும் மனம் தளரவில்லை Najat. ஒரே வருடத்தில் பிரெஞ்சு மொழியை கற்றார்.
ஒவ்வொரு வகுப்பாக தேர்ச்சி பெற ஆரம்பித்தார். எல்லாரும் தூங்கும் நேரத்திலும் நள்ளிரவு வரை அவர் அறையில் விளக்கு எரியும், அப்படி படித்தார்.

பள்ளிக்கல்வியை முடித்ததும், பாரீஸில் அரசியல் படித்தார், பட்டமும் பெற்றார், முதுகலைப் பட்டமும் பயின்றார்.
2004இல் உள்ளூர் கவுன்சிலுக்கு போட்டியிட்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். அப்புறம் ஏறுமுகம்தான், 2012இல் மகளிர் உரிமைகளுக்கான அமைச்சரானவர், 2014இல் கல்வி அமைச்சரானார்.
அப்போதும் மக்கள் விமர்சித்தார்கள், மதத்தையும் அவர் உடையணியும் விதத்தையும் குறை சொன்னார்கள்.
எதையும் காதில் வாங்கிகொள்ளவில்லை Najat, வேலையில் மட்டும் கவனம் செலுத்தினார். கடைசியாக அவர் புலம்பெயர்ந்தவர் என்பது பிரதான பிரச்சினையாயிற்று.
ஆனால் எல்லா புலம்பெயர்தோருமே பிரச்சினையைக் கொடுப்பதில்லை என்று கூறிய Najat, அவர்களும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்காற்ற முடியும் என்றார்.
அத்துடன் விடவில்லை, பிரான்சில் எல்லோருக்கும் சம உரிமை உள்ளது என்றும் உறுதியாகக் கூறினார் Najat.
கடைசியாக, ஒரு வழியாக விமர்சனங்கள் எல்லாம் ஓய்ந்தன, அவர்களது விமர்சனங்கள் எல்லாம் தவறு என்பதை தனது செயல்களால் இன்றும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார் வெற்றிப்பெண் Najat.
பிரான்சின் அமைச்சரான ஆடு மேய்க்கும் பெண்!
Reviewed by Author
on
November 14, 2019
Rating:
No comments:
Post a Comment