ரோஹிங்கியாக்களை குறிவைத்து இயங்கிய போலி ஆவணக் கும்பல்கள் சிக்கின..........
மலேசியாவில் ரோஹிங்கியா இன மக்களை குறிவைத்து இயங்கிய 2 போலி ஆவணக் கும்பல்கள் மலேசிய குடியேற்றத்துறையின் நடவடிக்கையில் சிக்கியுள்ளன.
இரண்டு ஆண்டுகளாக செயல்பட்ட வந்ததாகக் கூறப்படும் இந்த கும்பல்களின் செயல்கள் மார்ச் 2019ல் குடியேற்றத்துறையின் கவனத்திற்கு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. மார்ச் 2019ல் மலேசியாவின் Kedah பகுதியில் ரோஹிங்கியா அகதிகள் வந்திறங்கியதைத் தொடர்ந்து இக்கும்பல்களின் செயல்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளன.
ஐ.நா. அகதிகள் அடையாள அட்டை, மலேசிய ரோஹிங்கியா அமைப்பின் அட்டை, குடியேற்றத்துறை சான்று என இக்கும்பல்கள் ஆண்டுக்கு 14,000 போலி ஆவணங்களை தயாரித்தாகவும் ஆவணத்திற்கு ஏற்ப 500 இந்திய ரூபாய் முதல் சுமார் 3000 ரூபாய் (30 முதல் 150 மலேசிய ரிங்கட்டுகள்) வரையிலும் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 15 மியான்மரிகளும் ஒரு வங்கதேசியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாடகைக்கு இடம் வழங்கிய மலேசிய நபர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இச்சோதனை நடவடிக்கையின் போது, பாதுகாப்பு வழங்குவதற்கான கடிதங்கள், ஐ.நா.அகதிகள் ஆணையத்திடம் மருத்துவ உதவிகள் கோரும் கடிதங்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஐ.நா. அகதிகள் ஆணையத்திடம் இருந்து அகதிகளுக்கான சான்று ஆவணம் வாங்கும் வரை சம்பந்தப்பட்ட அகதிகள் மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்படாமல் இருக்க இக்கடிதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இச்சோதனையில் கைது செய்யப்பட்ட அனைவரும் Lenggeng பகுதியில் உள்ள குடியேற்றத் தடுப்பு மையத்தில் சிறைவைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment