விடுதலை செய்யப்பட்ட தலிபான் கைதிகள்.........
தலிபான் கைதிகள் விடுதலை விவாகரத்தில், ஆபத்தானவர்கள் என கருதப்பட்ட 400 தலிபான் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக,
இதுவரை காலமும் தயக்கம் காட்டி வந்த ஆப்கானிஸ்தான் தற்போது நீண்ட
பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்களை விடுவிக்கத் தொடங்கியுள்ளது.
இதன்படி முதற் கட்டமாக நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) எண்பது கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் மீதான தாக்குதல்களில் இவர்கள் தொடர்புடையவர்கள் எனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் 19 ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான ஒரு நிபந்தனையாக இந்த
விடுதலை அமைந்துள்ளது. முழுமையாக அனைவரும் விடுதலையான சில நாட்களில், கட்டாரில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
400 தலிபான் கைதிகளில் சுமார் 44 கிளர்ச்சியாளர்களும் அடங்குவர். அவர்கள் அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் உயர்மட்ட தாக்குதல் நடத்தியதில் தொடர்புடையவர்கள்.
அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெற அனுமதிக்கும் அமெரிக்காவிற்கும் தலிபானுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, போராளிகளுக்கும் அமெரிக்க ஆதரவுடைய அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கான நிபந்தனையாக 5,000 தலிபான் கைதிகள் ஆப்கானிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான
உடன்படிக்கை பெப்ரவரி மாதம் டோஹாவில் கையொப்பமானது.
இதன் அடிப்படையில், காபூல் அதிகாரிகள் 4,600 கைதிகளை விடுவித்தனர். ஆனால் இறுதி 400பேரை விடுதலை செய்ய அவர்கள் தயங்குகினர். அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்று அதிகாரிகள் கருதினர்.
இறுதி 400பேரை விடுதலை செய்ய ஆயிரக்கணக்கான ஆப்கானிய மூத்த அதிகாரிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் அவர்களை விடுதலை செய்ய அவர்கள் தீர்மானித்தனர். இதற்கமைய தற்போது கைதிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுகின்றனர்.
இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புடைய அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.
அதன் பிறகு ஆப்கானுக்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டன. அதன் பிறகான பல மோதல்களில் இதுவரை 2,400 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் இராணுவத்தினர்,
பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

No comments:
Post a Comment