தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை முதலில் உறுதிப்படுத்துங்கள்-ரெலோ அமைப்பின் மன்னார் மாவட்டக் கிளை.
இவ்விடையம் தொடர்பாக தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் மன்னார் மாவட்டக் கிளை இன்று வியாழக்கிழமை (8) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதம கொரடா மற்றும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் போன்ற பதவிகள் வழங்குவது தொடர்பான கூட்டம் நேற்றைய தினம் புதன் கிழமை (7) கொழும்பில் நடை பெற்றது.
இதில் கூட்டமைப்பின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாகி இருந்தார்கள்.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ரெலோ மற்றும் ,புளொட் அமைப்பிற்கு பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை.
கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் பதவிக்கு தமிழரசு கட்சியினை சேர்ந்த யாழ் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கு வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன் மொழிய சாள்ஸ் சூநிர்மலநாதன் வழி மொழிந்துள்ளார்.
ஆனால் பிரதம கொரடா பதவி தொடர்பான இழுபறி நிலையில் முடிவெதுவும் எட்டப்படாமல் கூட்டம் குழம்பியுள்ளது.
நாங்கள் பதவிக்காக ஆசைப்பட்டு இந்த விடயத்தை கூறவில்லை. கூட்டமைப்பில் உள்ள பங்காளி கட்சியினருக்கும் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதையே இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் இருவரும் நீண்டகால போராட்டம் மற்றும் பாராளுமன்ற அனுபவங்கள் கொண்டவர்கள்.
குறித்த இரண்டு பதவிகளுக்கும் இவ்விருவரும் பொருத்தமானவர்கள்.
தமிழ் மக்களின் உரிமை சார்ந்து செயற்படக் கூடிய இரண்டு பதவிகளை தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கு வழங்குவது பங்காளி கட்சியினரை உதாசீனம் செய்வதாகவே நாங்கள் உணர்கின்றோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இந்த முடிவுகளை உடனடியாக மாற்ற வேண்டும்.
ஒரு கட்சிக்குள் உள்ளவர்களை முன்மொழிந்து வழிமொழிவது என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு கட்சியாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் இன்னும் பதிவு செய்யப்படாமல் ஒரே கட்சி சார்ந்தவர்களை அனைத்து பதவிகளுக்கும் முன் மொழிவதை ஏற்க முடியாது.
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகளில் வன்னியை பொறுத்தமட்டில் நம்பிக்கைக்குரிய கட்சியாக தமிழீழ விடுதலை இயக்கம் இருப்பது நடந்து முடிந்த தேர்தலில் அறிந்து கொள்ள முடியும்.
எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் நண்மை எதிர்கால அரசியல் கருதி ஒற்றுமையாக செயற்பட வேண்டும். வெறுமனே தமிழரசு கட்சி மாத்திரம் அதிகார தோரணையில் செயற்படாமல் பங்காளி கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டுள்ள பதவிகள் தொடர்பாக நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் மன்னார் மாவட்டக் கிளை சார்பாக கேட்டுக்கொள்ளுகின்றோம்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை முதலில் உறுதிப்படுத்துங்கள்-ரெலோ அமைப்பின் மன்னார் மாவட்டக் கிளை.
Reviewed by Author
on
October 08, 2020
Rating:
Reviewed by Author
on
October 08, 2020
Rating:


No comments:
Post a Comment