புதிய விவசாய புரட்சி அவசியம்: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உரை
சிறுநீரக நோயானது இலங்கையில் பல தசாப்தங்களாக விவசாய சமூகத்தினரிடையே காணப்படும் பாரிய பிரச்சினையாக உள்ளதெனவும் அதிகளவிலான இரசாயன உர பாவனையே இதற்கு பிரதான காரணம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையிலேயே இரசாயன உர இறக்குமதியை குறைப்பதற்கும் இயற்கை விவசாயத்தை வலுவாக ஊக்குவிப்பதற்கும் தமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை பரவலாக பாராட்டப்பட்ட போதிலும் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் எதிர்நோக்கியுள்ளதாகவும் இரசாயன உரங்களுக்கு ஆதரவளிப்போருக்கு மேலதிகமாக, விளைச்சலை அதிகரிப்பதற்கான எளிதான வழிமுறையாக உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதற்கு பழக்கப்பட்ட விவசாயிகளாலும் இந்த எதிர்ப்புகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் வளமான விவசாய பாரம்பரியத்தை நோக்கும் போது, இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார். இதேவேளை, “COP: 26 ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம்” தொடர்பான அரச தலைவர் மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (01) உரை நிகழ்த்தவுள்ளார்.
காலநிலை மாற்றம் மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக நாடுகள் திட்டமிடும் வழிமுறைகள் தொடர்பாக கலந்துரையாடும் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நேற்று ஆரம்பமானது.
இந்த மாநாடு எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி வரை ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளது.
நவம்பர் 1 மற்றும் 2ஆம் திகதிகள் உலகத் தலைவர்கள் மாநாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
“காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தின் தீர்மானமிக்க சந்தர்ப்பங்கள்” என்ற தொனிப்பொருளில் இம்மாநாடு நடைபெறுகின்றது.
197 நாடுகளின் அரச தலைவர்கள், அரச பிரதிநிதிகள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25,000 பேர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
புதிய விவசாய புரட்சி அவசியம்: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உரை
Reviewed by Author
on
November 01, 2021
Rating:

No comments:
Post a Comment