அண்மைய செய்திகள்

recent
-

சுவிஸ் நாட்டின் லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக ஈழத்து தமிழ் பெண்.

சுவிட்சர்லாந்தின் புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக ஈழத்து தமிழ் யுவதி சுபா உமாதேவன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் முன்னனி பத்திரிகையின் இணைப்பிதழில் அட்டைப்படக் கட்டுரையுடன் சுபா உமாதேவனை சிறப்பித்துள்ளது. தமிழகத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் விற்பனையில் முதலிடம் வகிக்கும் ‘தினத்தந்தி’ பத்திரிகை தனது ஞாயிற்றுக்கிழமை இணைப்பிதழான ‘தேவதை’யின் கட்டுரையின் தொகுப்பு இதே👇 -

 சுபா உமாதேவன்

 இலங்கையின், கிளிநொச்சியில் பிறந்த சுபா, பெற்றோருடன் இரண்டு வயதுக் குழந்தையாக சுவிட்சர்லாந்து நாட்டுக்குப் புலம்பெயர்ந்தார். தலை நகர் பேர்னில் வளர்ந்து, உயர்கல்வியில் சர்வதேச அரசியல் படித்தார். பல மொழிகள் கற்றாலும், தமிழ் மீது தனி ஆர்வம் கொண்டவர். யுனெஸ்கோவில் பணியாற்றிய இவர், உலக செஞ்சிலுவைச் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார். பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றும் அவரிடம் பேசியபோது... "என்னுடைய அப்பா உமாதேவன், அம்மா அமிர்தராணி, தம்பி திலிபன். அப்பா எனக்கு அடிக்கடி கூறிய ஊக்கமொழி 'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்' என்பதே, எனக்கு அரசியல் மீதான ஆர்வம் அப்பா மூலமும், தமிழ் ஆர்வம் அம்மாவின் மூலமும் உருவாகியது. அரசியல், சர்வதேச விவகாரங்கள் மற்றும் ஸ்பானிஷ் மொழியில் இளங்கலைப் பட்டங்கள் படித்தேன்.

 பின்பு ஜெனீவாவில், சர்வதேச சட்டம் மற்றும் விவகாரங்களில் முதுகலை முடித்தேன். பல மொழி களில் படித்து இன்று தமிழ், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகள் சரளமாகப் பேச பழகி இருக்கிறேன். சுவிஸ் நாட்டின் லுசேர்ன் (Luzern) பல்கலைக்கழகத்தில் நான் ஆலோசகராக இருப்பது தமிழராக எனக்கு கிடைத்த பெருமை. யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தில் 2007-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை கொள்கை வகுக்கும் குழுவில் பணியாற்றினேன். பிறகு பதவி உயர்வு மூலம் சில காலம் ஜப்பான், துருக்கி மற்றும் சில ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடு களில் தலைமைப் பொறுப்பில் பணி யாற்றினேன். 2015-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பிளான் இன்டர்நேஷனல் என்ற சிறுவர் களுக்கான அமைப்பில் சுவிஸ் தலைமை உங்கள் பணி அனுபவங்களில் உணர்வது? யுனெஸ்கோ பணியில், ஆப்பிரிக்க நாடுகளின் பள்ளி களில் தாய்மொழிக் கல்வியின் அவசியம் குறித்து கல்வி அமைச்சகத்துடன் ஆய்வு மேற்கொண்டேன்.

 யுனிசெப் (UNICEF) போன்று குழந்தைகள் உரிமைக் காகப் பணிபுரியும் அமைப்பில் பணியாற்றியபோது கென்யா, உகாண்டா, மாலி, சிரியா, நைஜர், வியட்நாம், இந்தோனேசியா, சுரினாம், பொலிவியா, இந்தியா போன்ற நாடுகளில் குழந்தைகளின் கல்வி, பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமை, பொருளாதார உதவி என மக்களின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தலைமை யேற்றுப் பணியாற்றினேன். இந்தப் பணிக் காலத்தில் சிறுவர்களுடன் சந்தித்த மறக்க முடியாத சம்பவங்கள் உள்ளன. உகாண்டா நாட்டில் 14 வயது சிறுமியுடன் உரையாடினேன். அவள் ஆதரவில்லாமல் தெருவில் வாழ்ந்த காலத்தில் நாங்கள் மீட்டோம். ஒரு கல்வி நிறுவனத்தில் சிகை அலங்காரம் கற்றுக் கொண்டிருந்தாள்.

 சுயதொழில் தொடங்குவது அவளது கனவு. 'தன் மகளை நன்றாக வளர்க்க வேண்டும்' என்றாள். 14 வயது குழந்தைக்கே ஒரு குழந்தையா? என அதிர்ந்தேன். என் கண்கள் கலங்கின. உங்களது பிற துறை ஆர்வம், ஈடுபாடுகள் என்ன? எனக்கு நடனம் பிடிக்கும். பரதநாட்டியம் முறைப்படி பயின்றேன். புத்தகம் வாசித்தல் மிகவும் பிடிக்கும். சிறு வயதில் அம்புலிமாமாவில் ஆரம்பித்து இப்போது அம்பை வரை படிக்கிறேன், பேச்சிலும் ஆர்வம் உண்டு. ஆப்பிரிக்க நாட்டில் சுயதொழில் செய்யும் பெண்களோடு... பின்தங்கிய மக்களுக்கு புத்தகபைகள் வழங்கியபோது.. அண்மையில் லண்டன் ibc Tamil தமிழ்த் தொலைக்காட்சியில் 'நிமிர்ந்து நில்' என்ற நேர்காணல் நிகழ்வைத் தொகுத்து வழங்கினேன். உங்களது சாதனைகள்? சென்ற ஆண்டு செஞ்சிலுவைச் சங்கத்தின் இயக்குநர் குழுவுக்குத் தேர்வானது பெருமைக்குரியது. 

தங்கள் உயிரைப் பணயம் வைத்து போர் மற்றும் வன்முறையில் இருந்து மக்களைக் காக்கும் பணியில் ஈடுபடும் ஒரு நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருப்பது பெருமை. முக்கியமான முடிவுகள் எடுக்கும் உயர் பதவியில் இருப்பதே சாதனைதான். இன்னும் நிறைய பேர் என்னைப் போல உயர் பதவிகளுக்கு வர வேண்டும். அவர்களை ஊக்குவிக்க பெண்கள் தினத்தில் சர்வதேச மாநாட்டை நடத்தியது மனநிறைவைத் தந்தது, மறக்க முடியாத சம்பவங்கள்? ஆபத்தான ஆயுதப் போராட்டத்தில் மாலி, நைஜர், பர்க்கினா பாஸோ பகுதியில் பல வன்முறைகள் நடந்தன. ஒரு சூழலில் உயிர் தப்புவேனா? இல்லையா? என்ற நிலை ஏற்பட்டது. அந்த நெருக்கடியான சூழலிலும் அங்கே மக்கள் காட்டிய அன்பு, அக்கறை ஆச்சரியம் அளித்தது. 

கென்யாவில் ஒரு முறை எங்களுடைய வாகனம் பழுதானபோது, ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று 'உகாளி என்ற களி போன்ற உணவைப் பரிமாறினார்கள். ஒரு பெண்ணாக நீங்கள் உணர்வது, கூறுவது? பெண் என்பதில் பெருமைதான். 'தன்னால் முடியாது' என்ற கருத்திலேயே பெரும்பாலான பெண் பிள்ளைகள் வளர்கிறார்கள். அவர்கள், ஒரு போதும் தங்கள் நம்பிக்கையைக் கெடுக்கும் குரல்களை நம்பக்கூடாது. நீங்கள் என்றும் நீங்களாகவே இருங்கள். லட்சியம் என்ன? இன்று நான் இருக்கும் நிலை, நான் கனவு கூட காணாதது. எனக்குக் கிடைத்த தனித்துவமான வாய்ப்பை, மாற்றங்கள் உண்டாக்குவதற்குப் பயன்படுத்துவேன். அதை நோக்கிப் பயணிப்பதே எனது லட்சியம் நாட்டின் போர்ச்சூழல் காரணமாக நம்மவர்கள் தேசத்தை விட்டு பலநாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள். 

புலம்பெயர் தமிழர்கள் தங்களுடைய வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தனிமனிதர்களாக நிகழ்த்திய வாழ்க்கைப் போராட்டம் என்பது, இறுதி யுத்தத்திற்கு ஒப்பானது அல்லது அதனையும் விட மேலானது என்றே சொல்ல வேண்டும். இன்று நம் புலம் பெயர் சமூகமானது ஒரு சில தேசங்களின் வளங்களையும் விட அதிகமான பொருளாதார நிறைவு கொண்ட சமூகமாக வளர்ந்து வருகிறது. ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட புலம்பெயர் மக்களின் கல்வி,பொருளாதாரம் என்பன சில தேசங்களின் மொத்தச் சொத்தையும் விட அதிகமாக இருக்கும் என்பதற்கு ஆதாரம் அவசியமில்லை. டாலர்களாக, பவுண்களாக, ஈரோக்களாக, பிராங்குகளாக இவர்களின் வருமானம் 20 ஆண்டுகளில் நான்கு மடங்குகளாக அதிகரித்துள்ளது. புலபெயர் தமிழர்களின் பொருளாதார முன்னேற்றம் இப்படியென்றால் கல்வி, தலைமைத்துவ முன்னேற்றங்களும் அதற்கு ஈடாக மிக உச்சங்களைத் தொடுகின்றன.

 அப்படிப் புலம்பெயர்ந்தவர்களில் ஒருவர்தான் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுபா உமாதேவன். அத்துடன் , ஐந்து மொழிகளில் சரளமாக உரையாற்றும் இவர் , பல மில்லியன் பணத்தை நிர்வகிக்கும் ஒரு சர்வதேச நிறுவனத்தின் நிறைவேற்றும் பணிப்பாளராகப் பணியாற்றுகிறார். அதுமட்டுமல்லாது சுபா உமாதேவன், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் முக்கிய பொறுப்பிலிருந்து சில நாடுகள் மற்றும் போராட்ட இயக்கங்களுடனான பேச்சுவார்த்தையில் இராஜதந்திரியாகக் கலந்து கொள்கிறார். இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தது போல் எமது சமூகத்திலிருந்து தோன்றிய சுபா உமாதேவன் தற்போது சுவிட்சர்லாந்தின் புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இதற்கான ஏனைய ஆலோசகர்கள் Coop , Css போன்ற மிகப் பெரும் நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரி என்றால், சுபா உமாதேவனின் உயரம் என்னவென்று சொல்லத் தேவையில்லை. இந்நிலையில் தமிழகத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் விற்பனையில் முதலிடம் வகிக்கும் ‘தினத்தந்தி’ பத்திரிகை தனது ஞாயிற்றுக்கிழமை இணைப்பிதழான ‘தேவதை’யின் அட்டைப்படக் கட்டுரையுடன் சுபா உமாதேவனின் உயரங்களைப் பேசியதானது,புலம்பெயர் தமிழர்களின் உயர்வுகளுக்கு தமிழகத்திலும் கிடைக்கும் அங்கீகாரமாகும். இந்நிலையில் புலம் பெயர் தமிழர்களை பெருமைப்படவைத்த சுபா உமாதேவனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர். இவர் பல சிகரங்களை தொட தமிழகரம் இணைய வானொலியும் வாழ்த்துகிறது.
                          





சுவிஸ் நாட்டின் லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக ஈழத்து தமிழ் பெண். Reviewed by Author on February 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.