மன்னார் நகர பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் -பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு
இவ்வருடத்திற்கான 2 வது மன்னார் நகர பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் மன்னார் நகர பிரதேச செயலாளர் .எம். பிரதீபன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் மன்னார் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (4) காலை இடம்பெற்றது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், திலகநாதன் ,காதர் மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன் போது பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் ஒதுக்கீடுகள் குறித்து ஆராய பட்டதோடு பல்வேறு திட்டங்கள் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும் மன்னார் பிரதேச செயலக ரீதியாக கலந்துரையாட பட வேண்டிய விடையங்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் மன்னார் பிரதேச செயலக பிரிவில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் காணி மண் அகழ்வு, காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் குறித்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், இதற்கு மாவட்டத்தில் உள்ள உரிய திணைக்கள அதிகாரிகள் துணை போவதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
எனினும் இவ்விடயம் தொடர்பாக மக்களை பாதிக்கும் திட்டங்கள் குறித்து துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான உபாளி சமரசிங்க தெரிவித்தார்.
மேலும் மன்னார் நகரில் சட்ட விரோதமாக முன்னெடுக்கப்பட்டு வரும் கடலட்டை பண்ணைகளை அகற்றவும், மக்கள் குடியிருக்கும் காணிகளுக்கு அனுமதி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட வேண்டும் எனவும் குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த கூட்டத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், திணைக்கள தலைவர்கள் ,பொது அமைப்புக்கள், படை உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment