தாக்குதலை நடாத்திய பொலிசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! உக்ரைன் யுத்தத்தை பெரிதாக நோக்கும் ஐநா எமக்கான தீர்வை வழங்க வேண்டும்- ஈஸ்வரி
கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மட்டுவில் பகுதியில் பொலிசாரின் தாக்குதலில் காயமடைந்து வீட்டில் சிகிச்சையில் உள்ள மரியசுரேஷ் ஈஸ்வரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மட்டுவில் என்னும் பகுதியில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வருகை தருவதாக அறிந்து அவரிடம் தான் எங்களுடைய உறவுகள் கையளிக்கப்பட்டார்கள் என்பதை தெரிந்து அவரிடம் நீதி கேட்ப்பதற்காக சென்ற போது திட்டமிட்டு மறிக்கப்பட்டு நாங்கள் முல்லைத்தீவிலிருந்து வாகனத்தில் செல்லும்போது இங்குள்ள புலனாய்வாளர்கள் எங்களுடைய பேருந்துகளை படமெடுத்து இருந்தார்கள் அதை நான் கவனித்திருந்தேன்
அவ்வாறு நாங்கள் சென்று கொண்டிருந்தபோது மட்டுவில் அம்மன் கோயிலுக்கு முன்பாக எங்களுடைய பஸ் மறிக்கப்பட்டிருந்தது
மறித்த போது பஸ் சாரதியை இறக்கி மிரட்டிய போது பஸ்சில் இருந்து கீழே இறங்கி நாங்கள் தான் வாடகைக்கு அழைத்து கொண்டு வந்தோம் என கூறிய போது அந்த இடத்தில் இருந்த பொலிஸ் பெரியவர் என்னை கன்னத்தில் அறைந்தார் அடித்தவுடன் எனக்கு தலையே சுற்றியது இயலாத நிலைமை ஏற்பட்டிருந்தது
அந்த நிலையில் அவர்கள் எங்களுடைய பேருந்தினுடைய இரண்டு கதவுகளையும் அடைத்து அம்மாமாரை உள்ளே சிறைப்பிடித்து இருந்தனர் எங்களுடைய பேருந்தை கொண்டு சென்று எரிக்குமாறு பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார் அந்த வேளையில இவ்வாறு பேருந்தை கொண்டு செல்ல விடக்கூடாது என்பதற்காகவே நான் அந்த பஸ்சுக்கு பின்புறமாக குறுக்கே விழுந்து பேருந்தை எடுக்க விடாமல் தடுத்தேன்
இவ்வாறான நிலையிலேயே நாங்கள் அவர்களுடன் வாக்குவாதப் பட்ட நிலைமையில் பொலிசார் என் மீது சரமாரியான தாக்குதல்களை நடத்தி எனது ஆடைகளை களைய முற்பட்டு சப்பாத்து கால்களாலும் என் மீது தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர் அந்த இடத்தில் தான் நான் காயப் பட்டிருந்தேன் இவ்வாறு 20ஆம் திகதி பிரச்சனை முடிந்து வீடு வந்த போது எனக்கு சத்தி இயலாத நிலைமை ஏற்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தேன் 22ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று வைத்தியசாலை சென்ற நிலையில் எனக்கு கழுத்து மற்றும் கை பகுதிகளில் இயலாத நிலை உள்ளதை மீண்டும் வைத்தியசாலை உறுதிப்படுத்தி இப்போது சிகிச்சையில் உள்ளேன் 30 ஆம் திகதி மீண்டும் வைத்தியசாலைக்கு வருமாறு பணித்தனர்
நாங்கள் எங்களுடைய உறவுகளை தேடியே இந்த போராட்டத்தை மேற்கொள்கிறோம் நாங்கள் நீதி கேட்டு போராடுகின்றோம் அவர் இங்கு வரும் போது நாங்கள் அவரிடம் நீதி கேட்டு செல்வதற்கு எங்களுக்கு உரிமை இருக்கின்றது
ஆனால் நாங்கள் அவரிடம் வழியில் நின்று நீதி கேட்பதற்காகவே சென்றிருந்தோம் இவ்வாறான நிலையில் இந்த பொலிசாரால் செய்யப்பட்ட அட்டகாசம் பாதிக்கப்பட்ட பெண் என்ற அடிப்படையில் எங்களுடைய உடுப்புகளை கூட இழுத்து ஒரு அசிங்கமான செயற்பாட்டை புரிந்திருக்கிறார்கள் இது நீங்கள் ஊடகங்கள் ஊடாக நேரடியாக கண்டிருப்பீர்கள் இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்த விடயங்களைச் செய்த பொலிசார் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எமக்கான நீதி வேண்டும் நான் கூலி வேலைக்கு சென்று எனது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துகிறேன் இன்று இவ்வாறு இயலாத நிலையில் இருக்கின்ற போது நான் என்ன செய்வது எனக்கு நீதி இல்லை எனக்கு ஒரு சித்திரவதை செய்யப் பட்டிருக்கின்றது இதற்கு ஒரு நீதி இல்லை ஒரு தீர்வு வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்
49 ஆவது கூட்டத்தொடர் ஐநாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது எனவே இதுவரை கிடைத்த தகவலின்படி அதிலும் எந்தவிதமான தீர்வுகளும் இல்லை அவர்களும் எங்களை திரும்பி பார்ப்பதும் இல்லை உக்ரைன் சண்டையை விட மோசமான நிலைப்பாடு இங்கிருக்கின்றது உக்ரைன் மீது இவ்வளவு தூரம் அக்கறை காட்டுபவர்கள் எமது தமிழ் மக்கள் மீது அக்கறை காட்டவில்லை எமக்கான நீதி பெற்றுத் தரப்படவேண்டும் சர்வதேசத்தில் உள்ள சமூகத்தில் உள்ளவர்களும் சரியான பாதையில் சென்று எங்களுடைய மக்களுக்கு நீதி தருவதற்கு உரிய தரப்புகளிடம் சர்வதேசத்தில் கதைக்க வேண்டும் எனவும் எனக்கு நடந்தவாறு இவ்வாறு இன்னுமொருவருக்கு நடக்கக்கூடாது என்பதையும் எனக்கு தாக்குதல் மேற்கொண்ட பொலிசார் என்னிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எங்களுடைய உறவுகளுக்கான நீதியும் பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
சண்முகம் தவசீலன்
தாக்குதலை நடாத்திய பொலிசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! உக்ரைன் யுத்தத்தை பெரிதாக நோக்கும் ஐநா எமக்கான தீர்வை வழங்க வேண்டும்- ஈஸ்வரி
Reviewed by Author
on
March 27, 2022
Rating:

No comments:
Post a Comment