இரண்டு குழந்தைகளுடன் ஏரியில் குதித்த தாய் – குழந்தை உயிரிழப்பு!
சந்திரிகா ஏரியில் குதித்து தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) பதிவாகியுள்ளது. 32 வயதான தாய் தனது 5 மற்றும் 11 வயதுடைய குழந்தைகளுடன் சந்திரிகா ஏரியில் குதித்துள்ளார். சம்பவத்தில் 5 வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன், 11 வயது குழந்தை உயிர் பிழைத்துள்ளது. தாய் கவலைக்கிடமான நிலையில் எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த தாய் சூரியவெவ பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் அவரிடம் இருந்து 2000 ரூபாய் பணமும் கையடக்கத் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
32 வயதான தாய் சுரங்கிகா மதுமாலி இன்று பிற்பகல் தனது இரண்டு குழந்தைகளுடன் சந்திரிகா ஏரியில் குதித்ததை அடுத்து 11 வயது சிறுவன் சம் துஷ்மந்த நீந்தி கரைக்கு வந்து உதவி கோரி சத்தமிட்டுள்ளார்.
அதன்படி பிரதேசவாசிகள் மற்றும் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் உயிர்காப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தாயையும் 5 வயது குழந்தையையும் மீட்டுள்ளனர்.
சம்பவ இடத்திலேயே அடிப்படை சிகிச்சை அளித்து தாயின் உயிரைக் காப்பாற்ற பொலிஸார் முயற்சித்துள்ளனர்.
அத்தோடு, தாய் மற்றும் 5 வயது குழந்தையான நெத்தும் நெத்மல் ஆகிய இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் பிற்பகல் 1.45 மணியளவில் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் குழந்தைகளின் தந்தை ஹம்பேகமுவ பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இரண்டு குழந்தைகளுடன் ஏரியில் குதித்த தாய் – குழந்தை உயிரிழப்பு!
Reviewed by Author
on
July 01, 2022
Rating:
Reviewed by Author
on
July 01, 2022
Rating:


No comments:
Post a Comment