இஸ்ரேலில் என்ன நடக்கிறது; மக்கள் கிளர்ந்தெழுந்தது ஏன்?
இஸ்ரேல் மக்களும் எதிர்க்கட்சியினரும் இணைந்து கடந்த இரண்டரை மாதங்களாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்.
இஸ்ரேலின் டெல் அவிவ் உட்பட நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடத்திக்கொண்டிருக்கும் மாபெரும் போராட்டங்கள் பல உலக நாடுகளையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
எதற்காக இந்த போராட்டம்?
இஸ்ரேலில் நீதித்துறை அமைப்பை மாற்றியமைப்பதற்கான பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) ஈடுபட்டு வருகிறார்.
நீதித் துறையின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும், நீதித்துறை அதிகாரத்திற்கும் அரசாங்கத்தின் அதிகாரத்திற்கும் சமநிலையை மீட்டெடுக்கவும் நீதித்துறையில் மாற்றம் கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் மேற்கொண்ட முயற்சிகள் தான் தற்போது அவருக்கு எதிராக திரும்பி இருக்கிறது.
என்ன அந்த மாற்றங்கள்?
1. இஸ்ரேல் உச்ச நீதிமன்றத்தின் சட்டங்களை மறுபரீசிலனை செய்து, அதன் அதிகாரத்தைக் குறைப்பது. (நீதிமன்ற உத்தரவுகளை நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை மூலம் மீறலாம்)
2. உச்ச நீதிமன்றம் உட்பட நீதிபதிகளை நியமிக்கும் குழுவில் அரசின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது. இதன்மூலம், யார் நீதிபதியாக வேண்டும் என்பது குறித்து தீர்க்கமான முடிவை அரசாங்கம் எடுக்கும் சூழல் உருவாகும்.
3. இஸ்ரேல் அமைச்சர்கள் தங்கள் சட்ட ஆலோசகர்களின் ஆலோசனைக்கு கீழ்படிய வேண்டிய அவசியமில்லை.
சீர்திருத்த நடவடிக்கைகளில் முதற்கட்டாமாக பதவியில் இருக்கும் பிரதமரை ‘பதவிக்கு தகுதியற்றவர்’ என்று அறிவிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதியின் அதிகாரத்தை நீக்கும் சட்டம், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
கிளர்ந்தெழுந்த மக்கள்...
நீதித் துறையின் மீதான இந்த சீர்திருத்த மாற்றங்கள் நாட்டின் ஜனநாயகத்தை படுகுழிக்கு தள்ளிவிடும் என்ற நிலைபாட்டில்தான் தற்போது இஸ்ரேல் மக்களும், நாட்டின் எதிர்க்கட்சிகளும் வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
12 வாரங்களாக தொடரும் இப்போராட்டத்தில், நாட்டின் வர்த்தக தலைநகரான டெல் அவிவில் இந்த வாரம் 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீதியில் கூடி போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும், அரசின் மீது கொண்ட அதிருப்தியின் காரணமாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரும் பணிக்கு வர மறுத்துள்ளதால், நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறிக்கு உள்ளாகும் சூழல் உருவாகி இருக்கிறது.
இதற்கிடையில், நாட்டில் நடக்கும் போராட்டங்கள் கவலைக்குரிய நிலையை ஏற்படுத்தி இருப்பதாக நெதன்யாகுவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் Yoav Gallant தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தான் கூறிய கருத்துக்காக Gallant-ஐநெதன்யாகு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். நீக்கப்பட்ட Gallant அரசாங்கத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் பிரபலமான அமைச்சர்களில் ஒருவர். அமைச்சர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டிருப்பது கூடுதலான இஸ்ரேலியர்களை தெருக்களில் இறங்கி போராட வழிவகுத்திருக்கிறது.
போராட்டக்கார்கள் மீது போலீஸாரும், இராணுவமும் நடத்திய தடியடி தாக்குதலில் பலர் காயமடைந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எனினும், தங்கள் போராட்டத்தை கைவிடாது மக்கள் தொடர்ந்து வருகிறார்கள்.
எனினும், நாடு உடைபட அனுமதிக்கப் போவதில்லை எனவும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சீர்திருத்தங்களால் நீதித்துறை கட்டமைப்பு பலவீனம் அடையாது என்றும் உறுதியாகக் கூறியுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் போராட்டக்காரர்களுடன் இஸ்ரேல் அரசு முன்னெடுக்கும் பேச்சுவார்த்தை மிக முக்கியமானது.
இதனை மையமாக வைத்துதான் நெதன்யாகுவின் பதவி தீர்மானிக்கப்படவுள்ளது.

No comments:
Post a Comment