சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு பிணை!
இன்றைய விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் வழக்கினை நெறிப்படுத்திய அரச சட்டவாதி லாபீர் நெறிப்படுத்தலுடன் சஹ்ரானின் மனைவியினால் ஏற்கனவே வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில் ஆட்சேபனை எழுப்பப்பட்டு பிரதிவாதியின் சட்டத்தரணிகளினால் நீண்ட நேர சமர்ப்பணங்கள், விண்ணப்பங்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும் சஹ்ரானின் மனைவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் அது தொடர்பில் எடுக்கப்பட்ட வாக்குமூலங்களும் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டதுடன் வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன.
தொடர்ந்து பிணைக்கோரிக்கை மற்றும் ஏன் பிணை வழங்கப்பட வேண்டும் என பிரதிவாதி சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பங்களை சுட்டி காட்டி சமர்ப்பித்தனர்.
இதன்போது சுமார் 4 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட விடயத்தை விசேட காரணியாக ஏற்றுக்கொண்டும், இதர காரணங்களை முன்வைத்தும் பிணை வழங்கப்பட வேண்டும் என விசேட கோரிக்கையை பிரதிவாதியின் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியதை அடுத்து பிணை கோரிக்கை மன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.
இதன் போது 25,000 ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணைகளில் செல்ல அனுமதித்த நீதிபதி, பிரதிவாதி வெளிநாடு செல்லவும் பிணையாளர்கள் வெளிநாடு செல்லவும் தடை உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என உத்தரவிட்டார்.
சுமார் 4 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட விடயத்தை விசேட காரணியாக ஏற்றுக்கொண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நீல் இத்தவல, சட்டத்தரணி ஹிஜாப் இஸ்புல்லா விவகாரத்தில் வழங்கிய தீர்ப்பை மையப்படுத்தி கல்முனை மேல் நீதிமன்ற நீதவான் ஜயராம் ட்ரொக்ஸி பிணை தொடர்பான அறிவிப்பை அறிவித்திருந்தார்.
காலை முதல் மாலை வரை இராணுவ மேஜர் ( சஹ்ரான் ஹாஷிமின் மனைவி மற்றும் பிள்ளையை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தவர் ) ஒருவரிடம் சாட்சியங்கள், குறுக்கு விசாரணைகள், வாக்குமூலங்கள் பெறப்பட்டதை தொடர்ந்து மீண்டும் நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸினால் எதிர்வரும் மே மாதம் 17, 18 திகதிக்கு குறித்த வழக்கு மறுதவணை இடப்பட்டுள்ளது.
அத்துடன் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு பிணை!
Reviewed by Author
on
March 15, 2023
Rating:
Reviewed by Author
on
March 15, 2023
Rating:


No comments:
Post a Comment