குடிநீரை மாசுபடுத்திய நிறுவனத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம்
ரத்துபஸ்வல பிரதேசத்தில் குடிநீரை மாசுபடுத்தியமைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டம் காரணமாக அங்கிருந்து அகற்றப்பட்ட DPL நிறுவனத்திற்கும் அதன் தொழிற்சங்கத்திற்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
உற்பத்தி செயல்முறையின் காரணமாக நீர் ஆதாரங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து, 2013ஆம் ஆண்டில், ரதுபஸ்வல பகுதியில் இருந்து குறித்த நிறுவனத்தை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய உள்ளூர் மக்களுக்கு, ராஜபக்ச அரசாங்கம் தோட்டாக்களால் பதிலளித்த நிலையில், மூன்று எதிர்ப்பாளர்கள் உயிரிழந்ததோடு மேலும் பலர் காயமடைந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவுக்குச் சொந்தமான நிறுவனங்களில் ஒன்றான ”வெனிக்ரோஸ்” என்ற பெயரில் இறப்பர் கையுறைகளை உற்பத்தி செய்த இந்த நிறுவனம், பின்னர் பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் `DPL Gloves' (DPL PREMIER GLOVES LIMITED) என்ற பெயரில் நிறுவப்பட்டது.
ஒப்பந்த இணக்கம்
“2022ஆம் ஆண்டுக்கான சம்பள அதிகரிப்பு ரூபா 7000. (இதற்கமைய ஓகஸ்ட் 2022 முதல் நிலுவைத் தொகை ஒரே தடவையில் வழங்கப்படும்) , 2023ஆம் ஆண்டுக்காக ரூபா 6000 சம்பள உயர்வும், 2024ஆம் ஆண்டுக்கு ரூபா 5000 சம்பள உயர்வும் வழங்கப்பம். தற்போதுள்ள 21 நாட்கள் விடுமுறைக்கு மேலதிகமாக 7 நட்கள் சுகயீன விடுமுறை, அனைத்து ஊழியர்களுக்கும் புத்தாண்டுக்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்னதாக சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறைத் திட்டத்தை அறிவித்தல், ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் மூன்று சீருடைகள், சங்கத்தின் கிளைக்கு அலமாரி மற்றும் அறிவிப்பு பலகை, சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்கள் மற்றும் கல்விப் பயிற்சிகளில் கலந்துகொள்வதற்காக கிளை பிரதிநிதிகளுக்கு கடமை விடுப்பு, கிளைத் தலைவர் மற்றும் கிளைச் செயலாருக்கு கைத்தொலைபேசியை பயன்படுத்த அனுமதி, மற்றும் கிளைக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்கு சங்கத்தின் கிளைக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டு மணிநேரத்தை வழங்கல் உள்ளிட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையில், சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம் மற்றும் டிபிஎல் கையுறை முகாமைத்துவத்திற்கு இடையில் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.“
தொழிற்சங்கத் தலைவர் அன்டன் மார்கஸ் தலைமையிலான சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம், தற்போது சபுகஸ்கந்த மற்றும் பியகம சுதந்திர வர்த்தக வலயங்களில் அமைந்துள்ள ``டெலிபோ' நிறுவனம், களுத்துறை AMW நிறுவனம் மற்றும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள் ``நெக்ஸ்ட்" நிறுவனம் ஆகியவற்றுடன் ஏற்கனவே கூட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடிநீரை மாசுபடுத்திய நிறுவனத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம்
Reviewed by Author
on
June 05, 2023
Rating:

No comments:
Post a Comment