வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் எதிர்வரும் 12 வரை விளக்கமறியல்
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று இன்று (09.03) உத்தரவிட்டுள்ளது.
சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது சப்பாத்துக் கால்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்த பொலிசார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.
குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிசார் இன்று (09.03) மாலை முன்னிலைப்படுத்தினர். இதன்போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பாக சட்டத்தரணிகளான க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
இது தொடர்பில் சட்டத்தரணி தி.திருஅருள் கருத்து தெரிவிக்கையில்,
வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தொடபில் மன்றுக்கு தெரிவித்தமையால் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காகவும் திகதியிடப்பட்டது எனத் தெரிவித்தார்.
குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்ற போது நீதிமன்றம் முன்பாக வேலன்சுவாமிகள், ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
        Reviewed by Author
        on 
        
March 09, 2024
 
        Rating: 


No comments:
Post a Comment