அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்யுமாறு உத்தரவு
களனிவெளி பிராந்திய பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலைத்தோட்டங்களில் அத்துமீறி நுழைந்து குழப்ப நிலையை ஏற்படுத்தியமைக்காக அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்து எதிர்வரும் 26.08.2024 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஜயமினி அம்பகாவத்த திங்கட்கிழமை (22) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் சிரேஷ்ட சட்டதரணி பாலித சுபசிங்ஹ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த மே மாதம் 30 ஆம் திகதி களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான நுவரெலியா பீட்று தோட்டத்துக்குள்ளும் அங்குள்ள தொழிற்சாலைக்குள்ளும், அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அத்துமீறி பிரவேசித்தமை அங்கு குழப்ப நிலைமைகளை உருவாக்கியமை உட்பட பல சம்பவங்கள் தொடர்பாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் அதிகாரிகளால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் நுவரெலியா பொலிஸார் மேற்கொண்ட விரிவான விசாரணையின் பின்பு இந்த அறிக்கை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் இன்றையதினம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை அவதானித்த பதில் நீதவான், அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட சந்தேக நபர்களை கைது செய்து 26.08.2024 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்' செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன் போது களனி வெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொட மற்றும் சட்டத்தரணி சுரேஸ் கயான் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அமைச்சர் தொண்டமான் மற்றும் ஏனைய சந்தேக நபர்களை இன்றையதினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு நுவரெலியா பொலிஸாரால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும் குறித்த குழுவினர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
July 22, 2024
Rating:


No comments:
Post a Comment