அண்மைய செய்திகள்

recent
-

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவு

 போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் ஓராண்டுக்கு முன்னர் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட வெகுஜன புதைகுழிகளில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் அகழ்வு பணிகள் நிறைவடைந்துள்ளன.


ஜூலை 4ஆம் திகதி ஆரம்பமான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஜூலை 15ஆம் திகதி வரை பத்து நாட்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், அந்தக் காலப்பகுதியில் மாத்திரம் 12 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.


பாரிய புதைகுழி அகழ்வின் பின்னர், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து இதுவரை 52 பேரின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் கனகசபாபதி வாசுதேவ வன்னியில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.


“கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியானது பத்தாவது நாளாக இடம்பெற்றது. இன்றுடன் (ஜூலை 15) அனேகமாக இந்த மனிதப் புதைகுழியில் இருந்த மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுவதும் மீட்கப்ப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இதுவரை 52 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்க்கப்பட்டுள்ளன. அத்துடன் இன்று துப்பாக்கிச் சன்னம் மற்றும் திறப்புக்  கோர்வையும் சான்றுப்பொருட்களாக மீட்ககப்பட்டுள்ளன,'' என அவர் குறிப்பிட்டார்.


கொக்கிளாய், முல்லைத்தீவு பிரதான வீதியில் பாரிய புதைகுழி பரவியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதன் அகழ்வை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட போது, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து குறைந்தது 40 பேரின் எச்சங்கள் தோண்டியெடுக்கப்பட்டதோடு, அந்த உடல்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் எனக் கருதுவதற்கு ஏதுவான சில சான்றுகள் கிடைக்கப்பெற்றன.


அவை, தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் சட்டவிரோதமாகப் புதைக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுடையது என கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணிகளுக்கு முன்னோடியாக செயற்படும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ, 2024 மார்ச் மாதம் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.


அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது அவரது அனுமானம்.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சடலங்கள் கொக்குத்தொடுவாய் வெகுஜன புதைகுழியில் புதைக்கப்பட்டதா என்பதை அறிய தேவையான உயிரியல் தரவுகளை சேகரித்து வைக்கப்பட்டுள்ளதாக, அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.


மேலும், ஜூலை முதல் வாரத்தில் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட மண்டை ஓடுகளில் இருந்து பற்கள் அகற்றப்பட்டு அவை டிஎன்ஏ (DNA) பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


2023 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில், கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில், நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய்களை அமைப்பதற்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது, தற்செயலாக மனித உடல் பாகங்களும் ஆடைத் துண்டுகளும் வெளிப்பட்டன.




கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவு Reviewed by Author on July 16, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.