அண்மைய செய்திகள்

recent
-

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸவரர் ஆலயத்தின் திருவேட்டைத்திருவிழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

 இலங்கையிலுள்ள இரு தான்தோன்றீஸவரங்களில் ஒன்றான, வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின், பதின்மூன்றாம்நாள் உற்சவமான திருவேட்டைத்திருவிழா 18.07.2024 வியாழக்கிழமை நேற்று மிகச் சிறப்பாக இடம்பெற்றது.


குறிப்பாக வியாழக்கிழமை நேற்று, பிற்பகல் 03.30மணியளவில் ஆலயத்தின் மூல மூர்த்தியாக அமர்ந்துள்ள சுயம்புலிங்கப்பெருமானுக்கு விசேட பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து இறைவன் வேகாவனேஸ்வரர் பக்தர்கள் புடைசூழா வேட்டைத்திருவிழாவிற்காகப் பவனிவந்தார்.


பாரம்பரியமாக தொன்றுதொட்டு வேட்டைத்திருவிழா இடம்பெறும் வயல்வெளியில், பெருந்திராளான வேடுவர்கள் புடைசூழ வேகாவனேஸ்வரருக்கு பாரம்பரிய முறையிலான பூசைவழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.


தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் நோக்கில் பெருந்திரளான பக்தர்கள் வாகைமரக் குலைகளால் உடையும், தொப்பியும் அணிந்து, உடல் முழுவதும் கரிபூசி வேடர்கள் போலக் கோலஞ் செய்து, தடிநுனி ஒன்றில் வாகைகுழையினைக்கட்டி அதனைக் கையில் வைத்துக்கொண்டு வேட்டைத்திருவிழாவில் பங்கேற்றிருந்தனர்.

இந் நிலையில் இறைவன் வேகாவனேஸ்வரர் பெரிய வேடனாக அமர்ந்து பவனிவர, வேகாவனேஸ்வரரைச் சுமந்தும், அவரைச் சூழ ஆயிரக்கணக்கான வேடுவப் படையணியினரும், பக்தர்களும் இந்த பவனியில் கலந்துகொண்டனர்.


இவ்வாறு வீதி வலம் வந்து இறைவன் வேகாவனேஸ்வரர் கோயில் வாயிலையடைந்ததும், கோயிலின் இறைவி சுவாமியுடன் கோபித்துக் கொண்டு வாயிற் கதவைப் பூட்டிக்கொள்ளுவார். அவ்வேளையில் கோயில் மணியகாரர் அவர்களுடைய பிணக்கை விசாரித்துத் தீர்த்து வைக்கும் பாங்கிலான நிகழ்ச்சி ஒன்றும் இடம்பெற்றது.


அதனையடுத்து கோவில் வாயில் கதவு திறந்ததும் இறைவன் வேகாவனேஸ்வரர், இறைவி பூலோகநாயகி சமேதராக பக்தர்கள் புடைசூழ உள்வீதி வலம்வந்தனர்.


தொடர்ந்து மூலமூர்த்தியான சுயம்புலிங்கப் பெருமானுக்கு விசேட பூசைகளும், அர்ச்சனைகளும் இடம்பெற்றிருந்ததுடன், இறைவன் வேகாவனேஸ்வரர் மற்றும் இறைவி பூலோகநாயகிக்கு விசேட அபிஷேக வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வேட்டைத் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸவரர் ஆலயத்தின் திருவேட்டைத்திருவிழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது. Reviewed by Author on July 19, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.