ஹரீனின் வெற்றிடத்துக்கு ஹிருணிகா?: தொடரும் கலந்துரையாடல்கள்
நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த ஹரீன் பெர்ணாண்டோவின் வெற்றிடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை நியமிக்க இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டமை சரியானதென உயர்நீதிமன்றம் இன்று (09) வழங்கிய தீர்ப்பின் பிரகாரம், மனுஷ நாணயக்கார மற்றும் ஹரீன் பெர்ணாண்டோ ஆகியோர் தமது எம்.பி பதவிகளை இழந்தனர்.
இதனால் இருவரின் எம்.பி பதவிகளுக்கும் வெற்றிடம் ஏற்பட்டது. இந்த நிலையில், மனூஷ நாணயக்காரவின் வெற்றிடத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்ப்பில் காலி மாவட்டத்தில் மனூஷவுக்கு அடுத்தப்படியாக விருப்ப வாக்குகளை பெற்றுக்கொண்ட பந்துல லால் பண்டாரிகொடவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஐ.ம.சவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
இதேவேளை, தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்ட ஹரீன் பெர்ணாண்டோவின் வெற்றிடத்துக்கு நியமிக்கப்படும் உறுப்பினர் குறித்து கலந்துரையாடியே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் தேசியப் பட்டியல் எம்.பி பதவிகளுக்கு திஸ்ஸ அத்தநாயக்க, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், மயந்த திஸாநாயக்க, எரான் விக்கிரமரத்ன, ரஞ்சித் மத்தும பண்டார, டயானா கமகே மற்றும் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் டயானா கமகேவின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதுடன், அவரது வெற்றிடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஹரீன் பெர்னாண்டோவின் வெற்றிடத்திற்கு ஹிருணிகா பிரேமச்சந்திரை நியமிக்க கட்சிக்குள் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள பின்புலத்திலேயே ரஞ்சித் மத்துமபண்டார அதனை நிராகரித்துள்ளார்.
இளைஞர் ஒருவரை கடத்திச் சென்ற வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர, தற்போது பிணையில் விடுதலையாகியுள்ளார். இதன் காரணமாக இவருக்கு தேசியப் பட்டியல் வாய்ப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவே கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

No comments:
Post a Comment