மன்னார் வைத்தியசாலையில் இளம் பட்டதாரி குடும்ப பெண் மரணம்-சம்பவ தினம் வைத்தியசாலையின் குறித்த விடுதிக்கு பொறுப்பான வைத்தியரின் அசமந்த போக்கே காரணம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி பட்டதாரி இளம் குடும்ப பெண் திருமதி மரியராஜ் சிந்துஜா (வயது-27 ) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவத்திற்கு அன்றைய தினம் விடுதிக்கு பொறுப்பாக இருந்த வைத்தியரின் பொறுப்பற்ற செயற் பாட்டால் குறித்த பட்டதாரி இளம் குடும்ப பெண்ணை கொலை செய்து விட்டனர்.
அவர்கள் இந்தப் பெண்ணின் மரணத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் இன்றைய தினம்(4) சுகாதார அமைச்சின் (மத்தி) செயலாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடித்த மேலும் குறிப்பிடுகையில்,,,
திருமதி மரியராஜ் சிந்துஜா வயது 27 என்பவர் கடந்த மாதம் ஒன்பதாம் திகதி மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுள்ளார். 11 ஆம் திகதி தாயும் சேயும் நலமாக வீடு சென்றுள்ளார்.
ஏழு நாட்களின் பின்னர் தையல் வெட்டுவதற்காக 16 அன்று முருங்கன் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். பின்னர் 27 இரவு குருதி பெருக்கு காரணமாக அன்று இரவு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சேர்ந்துள்ளார்.
மறுநாள் 28 காலை 7 மணி வரை எந்த வைத்தியர்களும் பார்வையிடவில்லை. விடுதிக்கு பொறுப்பான வைத்தியர்கள் தங்கும் விடுதியில் இருந்துள்ளனர். தாதிய உத்தியோகத்தர் வைத்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டும் கூட அவர்கள் வரவில்லை.
ஆகவே வைத்தியர்களின் பொறுப்பற்ற செயல் பட்டால் அவர் மரணம் அடைந்துள்ளார்.அரச வைத்தியசாலைகளில் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. அதுவும் இரவு நேரங்களில் இந்த நிலை தொடர்கின்றது.
உயிருடன் விளையாடும் அசட்டையீனங்கள் தொடர்கின்றது. மருத்துவ தவறு எனும் சட்ட பாதுகாப்பு கவசத்தினால் தினந்தோறும் நாடு முழுவதும் பலர் இறந்து விடுகின்றனர்.
இந்த விடுதிக்கு பொறுப்பாக இருந்த வைத்தியரின் பொறுப்பற்ற செயற்பாட்டால் ஒரு பட்டதாரி இளம் குடும்ப பெண்ணை கொலை செய்து விட்டனர். அவர்கள் இந்தப் பெண்ணின் மரணத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் பொறுப்பேற்றல், பொறுப்பு கூறுதல் பகிர்ந்து கொள்ளுதல் இம் மூன்றும் வைத்திய துறையின் அணிகலன்களாக இருக்க வேண்டும்.
உயிரோடு உறவாடும் உன்னத பணியை செய்பவர்கள் இப்படி பொறுப்பற்று நடந்து கொள்ளலாமா? ஏலவேயும் இவ் வைத்தியசாலையில் இவ்விதமான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவரின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை நீதியாக வெளிவருமா என்னும் சந்தேகம் எழுகிறது.
எனவே இச் சம்பவத்தினை திட்டமிட்ட குற்ற மனம் உள்ள கொலையாக கருதுகிறோம். பொறுப்பற்ற உத்தியோகத்தர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான் ஏனைய நோயாளர்களாவது பாதிக்கப் படுவதில் இருந்து தவிர்த்துக் கொள்ள முடியும். இறந்தவரை மீட்டு விட முடியாது தண்டனை ஒரு பொருட்டல்ல. ஆனால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி 'இவ் விதமானவர்களை இந்த மருத்துவ துறையில் இருந்து அகற்ற வேண்டும்.
குற்றவாளியை குற்றவாளியே விசாரிக்க முடியாது. கங்காரு நீதிமன்ற பொறிமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது.
இதை விசாரணை செய்வதற்கு வைத்தியத்துறை கடந்து சட்டத்துறை சார்ந்தவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.' இந்த விசாரணையை மூடி மறைக்காமல் நீதி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். என கேட்டுக்கொள்கிறோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment