யாழில் “ஶ்ரீகுகன் 100” இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்வு..
ஈழத்தின் யாழ்.ஸப்தஸ்வரம் கலையகம் பெருமையுடன் வெளியீடு செய்த ஈழத்து இசையமைப்பாளர் தேனிசையாளன் ஸ்ரீகுகன் அவர்களின் *ஸ்ரீகுகன் 100* வார்த்ததில் கோர்த்தவை தெய்வீகப் பாடல்கள் இறுவட்டு வெளியீட்டு விழா ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் 17.10.2024 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது….
தாயக இசையமைப்பாளர்களுள் தனக்கென ஒரு முத்திரையை தனித்துவமாக நிறுவி வலம்வரும் “தேனிசையாளன் ஶ்ரீகுகன்” இதுவரை பலநூறு பாடல்களை தன் இசைவார்ப்பில் உயிரூட்டி காற்றலையில் தவளவிட்ட போற்றுதற்குரிய கலைஞர். அவர் வார்த்தவற்றுள் 100 பாடல்களை ஒன்றாக்கி “ஶ்ரீகுகன் 100” இசையுலகிற்கு அடையாளப்படுத்தி வெளியீடு செய்த நிகழ்வானது தாயக இசைத்துறையில் ஒரு புதிய தடம் எனலாம்.
அந்த வகையில் நிகழ்வானது
வடக்கு மாகாணசபை
அவைத் தலைவர்
திரு.சீ.வி.கே.சிவஞானம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினர்களாக முன்னாள் துணைவேந்தர்
என்.சண்முகலிங்கன் அவர்களும்,
தாயகத்தின் இசைத் தந்தை இசைவாணர் கண்ணண் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
நிகழ்விற்கான ஆசியுரையினை கல்வியங்காடு
சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயப் பிரதமகுரு சீனிவாசக் குருக்கள் வழங்கினார்.
திருமதி.பாலினி கண்ணதாசன் அவர்களின் ஏழிசைக் கலைக் கல்லூரி மாணவச் செல்வங்களின் மிகச் சிறப்பான வரவேற்பு நடனத்தை தொடர்ந்து வரவேற்புரையினை கவிஞர் வேலணையூர் சுரேஷ் அவர்கள் வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் உரையினை கிளி.பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் கவிஞர் த.ஜெயசீலன் அவர்கள் வழங்கினர்.
வெளியீட்டுரையை
திரு.இரத்தினசிங்கம் சர்வேஸ்வரா வழங்க..
இறுவட்டினை பிரதம விருந்தினர் வெளியிட்டு வைக்க
திரு.சண்முகலிங்கன் சஞ்சீவ்பாவு பெற்றுக் கொண்டார்.
இறுவட்டுத் தொடர்பான நயப்புரையினை கவிஞர் கு.வீரா அவர்கள் வழங்கினார். அவர் தனது உரையை மிகவும் சிறப்பாக ஆற்றி
உணர்வுகளைத் தெறிக்க விட்டதோடு சமகாலத்தில் ஈழக்கலை பற்றிய ஒப்பீடுகளை,ஏனைய நிகழ்கால விடையப்பரப்புகளை முன்னிறுத்தி தனது உரையை ஆற்றியமை பலரையும் உற்சாகப்படுத்தியதெனலாம்.
நிகழ்ச்சியினை மிக நேர்த்தியாக மூத்த அறிவிப்பாளரும், பாடகருமான திரு.கி.திருமாறன், திரு.க.சுடரவன் ஆகியோர் தொகுத்து வழங்கினார்.
ஸப்தஸ்வரம் கலையகத்தில் அதன் நிறுவுனரும் இசையமைப்பாளருமான ஶ்ரீகுகன் அவர்களுடன் நீண்ட காலமாக பயணித்த, பயணித்துவரும் கலைஞர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இதில் தாயக தேசத்தின் “இந்த மண் எங்களின் சொந்தமண்” புகழ் மறைந்த எஸ்.ஜீ.சாந்தன் அவர்களுக்குமான மதிப்பளிப்பும் வழங்கி நினைவுகூரப்பட்டது.
தாயக இசைக் கலைஞர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், வர்த்தகர்கள், இரசிகர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள், ஊர் உறவுகள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிறைவாக
ஸப்தஸ்வரம் இசைக்குழுவினரின் இசைக் கச்சேரி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து செல்வன் கண்ணதாசன் இசைநிலவன் அவர்களின்
நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவாகியது.

No comments:
Post a Comment