அண்மைய செய்திகள்

recent
-

கனடாவில் சிறப்பாக இடம் பெற்ற 'ரொறன்ரோ தமிழ்ப் புத்தக அரங்கம்'

 'ரொறன்ரோ தமிழ்ப் புத்தக அரங்கம்'  தமிழ் பேசும் சமூகத்தினரின் பெருவரவேற்புடன் கனடாவின் ரொறன்ரோ மாநகரத்தில்  வெற்றிகரமாக நடந்தேறியிருக்கிறது. 2025 டிசம்பர் மாதம் 6ம், 7ம் திகதிகளில் கனடிய தமிழர் பேரவை (CTC) கனடா ஐக்கிய இலங்கை முஸ்லிம் கவுன்சில் (USLMCC) ஆகிய இரண்டு கனடிய அமைப்புக்களின் ஒருங்கமைப்பில் நடந்த இந்தப் புத்தகத் திருவிழாவில் வட அமெரிக்காவின் பல்வேறு பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள், தமிழ் மொழி பயிற்றுவிப்பாளர்கள், கல்வி நிலையங்கள், இலக்கிய அமைப்புக்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் பங்களித்திருந்தார்கள். ரொறன்ரோ, மொன்ரியால் நகரங்களில் வாழும் ஏராளமாகக் கலந்து கொண்டிருந்தார்கள்.


புத்தக கண்காட்சி அரங்கத்தோடு இணைந்திருந்த மேடையில் நூல் வெளியீடுகள் பலவும், அவற்றிற்கான அறிமுகங்களோடு நடைபெற்றன. வல்லிபுரம் சுகந்தன் எழுதிய 'கூழ்முட்டைக்குளிருந்து குஞ்சொன்று' கவிதைத் தொகுப்பு அவற்றில் ஒன்று. இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்ட பாதிப்புக்களை ஆவணப்படுத்தும்வகையில் அஷ்ரப் ஷிஹாப்தீன் எழுதிய 'டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்' நூலானது, வெளியீட்டு நிகழ்வுக்கு வந்திருந்த பார்வையாளர் அனைவரதும் கவனத்தையும்  ஒருங்கே ஈர்த்துக் கொண்டது.. இந்தியாவிலிருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் முகாமில் வாழ்பவர்களின் துயரத்தை விளக்கும் வகையில், தொ. பத்திரினாதன் எழுதிய 'அந்தரம்'  நாவல் குறித்த வெளியீட்டு உரைகள் நாவலின் பேசுபொருளை ஆழமாக விளக்கிச் சொல்லின. அவுஸ்த்ரேலியா எழுத்தாளரான ஆனா பரராஜசிங்கம் எழுதிய 'UPROOTED' என்ற ஆங்கில நூலும் ஆங்கில உரைகளுடன் வெளியிடப்பட்டது. இந்த நூல் உலகளவிய நிலையில் புகழ்பெற்று சமகால  உதாரணமாக வாழந்துகொண்டிருக்கும்  புலம்பெயர் ஈழத்தமிழர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வாழ்க்கையை ஆவணப்படுத்தியிருந்தது.


கனடாவில் வாழும் ஈழத்தமிழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களின் இலக்கியப் பணிகளை சிறப்பித்துச் சொல்லும் வகையில் இங்கிலாந்தில் வாழும் எழுத்தாளர் எம். பௌஸர் மற்றும் பால சபேசன் ஆகியோர் தொகுத்திருந்த 'அ.முத்துலிங்கத்தின் எழுத்துலகு' என்ற நூல், அரங்கம் நிறைந்த பார்வையாளர்களோடு சிறப்புற வெளியிட்டு வைக்கப்பட்டது. 


புத்தக அரங்க நிகழ்வுகளில் தமிழமுதம் வெளியிட்ட 'தமிழ்ப்பெயர்த்தொகுப்பு' என்ற நூல் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்ததையும் இவ்விடத்தில் குறிப்பிடலாம். புலம்பெயர் ஈழத்தமிழர் தமது பிள்ளைகளுக்கு நல்ல தமிழில் பெயர் வைப்பதை ஊக்குவிக்கும் வகையில் 46,000 தூய தமிழ் பெயர்களை அகரவரிசைப்படுத்திய தொகுப்பாக அந்த நூல் அமைந்திருந்தது. நூல் தொகுக்கப்பட்ட வரலாற்றுப் பின்னணியை இளைய தலைமுறை சமூகப்பணியாளர் வால்மேகம் ஜெயச்சந்திரன் வந்திருந்தோருக்கு விளக்கினார். கனடாவின் பாரளுமன்ற உறுப்பினரும், ஈழத் தமிழருமான செல்வி ஜொனிற்றா நாதன் சிறப்புப் பிரதியை பெற்று உரையாற்றியிருந்தார். மேலும், கண்காட்சிக்கூடங்களில் ஒன்றாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாதர் சுயமேம்பாட்டு முன்னெடுப்பு ஆதரவில் 'முல்லை' கைத்தறி சேலைகளும் விற்பனையாகிக் கொண்டிருந்தன.


ரொறன்ரோ நகரின் பல பகுதிகளிலும் கடும்குளிருடன் பனிப்பொழிவு இருந்திருந்தபோதும், இரு தினங்களும் ஏராளமான பொது மக்கள் வெளியீட்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன், தாராளமாகப் புத்தகங்களை வாங்கிச் சென்றிருந்தமையும் இந்த நிகழ்விற்கு தமிழ்க்கனடியர்கள் தந்திருந்த முக்கியத்துவத்தை உணர்த்தி நின்றது.













கனடாவில் சிறப்பாக இடம் பெற்ற 'ரொறன்ரோ தமிழ்ப் புத்தக அரங்கம்' Reviewed by Vijithan on December 10, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.