36 பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக அறிவிப்பு
நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்களும், 46-க்கும் அதிகமான நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.
மாவட்ட ரீதியாக வான் பாயும் நீர்த்தேக்கங்களின் விபரம் பின்வருமாறு:
அநுராதபுரம்: அனைத்துப் பிரதான நீர்த்தேக்கங்களும் வான் பாய்கின்றன.
அம்பாறை: 9 இல் 3 நீர்த்தேக்கங்கள்.
பதுளை: 7 இல் 3 நீர்த்தேக்கங்கள்.
மட்டக்களப்பு: 4 இல் 3 நீர்த்தேக்கங்கள்.
ஹம்பாந்தோட்டை: 10 இல் 4 நீர்த்தேக்கங்கள்.
கண்டி: 3 இல் 2 நீர்த்தேக்கங்கள்.
குருநாகல்: 10 இல் 4 நீர்த்தேக்கங்கள்.
மொனராகலை: 3 இல் 1 நீர்த்தேக்கம்.
பொலன்னறுவை: 4 இல் 2 நீர்த்தேக்கங்கள்.
திருகோணமலை: 5 இல் 3 நீர்த்தேக்கங்கள்.
மன்னார்: 4 இல் 1 நீர்த்தேக்கம்.
நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளைத் திறப்பதன் மூலம் தற்போது வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்தபட்ச மட்டத்திலேயே காணப்படுவதாகப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
எனினும், எதிர்காலத்தில் கிடைக்கும் மழைவீழ்ச்சிக்கு ஏற்ப வான் கதவுகளைத் திறக்கும் அளவு மாறுபடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது வெளியேற்றப்படும் நீரினால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயமோ அல்லது நீர் மட்டம் அதிகரிப்பதோ அவதானிக்கப்படவில்லை என்றாலும், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீர் வெளியேற்றப்படுவது தொடர்பான அறிவிப்புகள் குறித்துத் தீவிர அவதானத்துடன் இருப்பது மிக முக்கியம் என எச்.பி.எஸ்.டி. ஹேரத் மேலும் சுட்டிக்காட்டினார்.
Reviewed by Vijithan
on
December 13, 2025
Rating:


No comments:
Post a Comment