மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதம் இன்றி நிவாரணம், இழப்பீடுகளை வழங்க பணிப்பு.
மன்னார் மாவட்டத்தில் அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (13) சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கலந்து கொண்டதோடு அமைச்சின் செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உடனடி நிவாரணங்கள், உலர் உணவு விநியோகம், மருத்துவ வசதிகள் மற்றும் இடம் பெயர்ந்தோருக்கான தங்குமிட ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், அனர்த்தத்தின் காரணமாக ஏற்பட்ட விவசாய மற்றும் கால்நடை சேதங்களை மதிப்பீடு செய்து, அவற்றிற்கான இழப்பீடுகளை துரிதமாக வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, "பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
நிவாரணப் பணிகளில் எந்தவித தாமதமும் இருக்கக் கூடாது. மாவட்டச் செயலகம், உரிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்," என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
வெள்ள அனர்த்தம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் நிவாரண உதவிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.மேலும் மாவட்டத்தில் உள்ள கல்வி வலய மாணவர்களின் நிலை,பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவித் திட்டங்கள்,விவசாயம்,மீன்பிடி உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் துரித நிவாரண மற்றும் இழப்பீடு நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஜனாதிபதி அரச அதிபர் ஊடாக உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
-மாவட்டத்தில் அனர்த்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட மற்றும் வாழ முடியாத வீடுகளில் வசிக்கும் 70 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு புதிய காணியை பெற்றுக்கொள்ள அல்லது வீடு கட்டுவதற்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Reviewed by Vijithan
on
December 13, 2025
Rating:


No comments:
Post a Comment