இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா விலையில் மாற்றமில்லை
இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகள் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்பட மாட்டாது என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை மா நிறுவனங்கள் இன்று (23) வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவைச் சந்தித்த போதே இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளன.
தற்போதைய போர்ச் சூழல் காரணமாக விநியோக வலையமைப்பிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் தொடர்ச்சியான விநியோகத்தைப் பேணுதல் குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இதன்போதே இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் டொலரின் மதிப்பு உற்பத்திச் செலவில் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், இந்த இக்கட்டான தருணத்தில் அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே தமது நோக்கம் என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவையான இறக்குமதி செய்யப்பட்ட பால்மா மற்றும் கோதுமை மா கையிருப்பு உள்ளதை உறுதிப்படுத்த முடியும் என்றும், வரவிருக்கும் புத்தாண்டு காலம் முடியும் வரை எவ்வித விலையேற்றமும் செய்யப்பட மாட்டாது என்றும் அந்த நிறுவனங்கள் அமைச்சரிடம் உறுதி அளித்துள்ளன.
அதேவேளை, எரிபொருள் ஒதுக்கீடு (Quota) காரணமாக விநியோக நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை நிறுவனங்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றன.
உணவு விநியோகத் துறையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து வழங்குநர்களின் எரிபொருள் தேவைகளை அடையாளம் கண்டு, அந்தப் பிரிவின் திட்டமிடலை முறைப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட விசேட தரவு சேகரிப்புத் திட்டத்தில் பதிவு செய்யுமாறு அமைச்சர் இதன்போது நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினார்.
இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா விலையில் மாற்றமில்லை
Reviewed by Vijithan
on
March 23, 2026
Rating:
Reviewed by Vijithan
on
March 23, 2026
Rating:


No comments:
Post a Comment