அண்மைய செய்திகள்

recent
-

-மன்னார் மாவட்டத்தில் கடற்படையினர் வசமுள்ள காணிகளுக்கு பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான குழுவினர் நேரடி விஜயம்

 ஜனாதிபதியின் நேரடி உத்தரவின் பேரில்  பாதுகாப்பு  பிரதி  அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் திங்கட்கிழமை (25) காலை மன்னாரிற்கு வருகை தந்த நிலையில் கடற்படையினர் வசம் இருக்கின்ற தனியார் காணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டனர்.


இன்றைய தினம் காலை கடற் படையினர் வசம் உள்ள காணிகளுக்கு நேரடியாக பாதுகாப்பு  பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான குழுவினர் விஜயம் செய்தனர்.


முள்ளிக்குளம்,சிலாபத்துறை,தலைமன்னார்,வங்காலைப்பாடு,மற்றும் பள்ளிமுனை ஆகிய பகுதிகளில் உள்ள காணிகளை குறித்த குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.


மக்கள் கடந்த காலத்திலே யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, தங்களது இடத்தை விட்டு வேறு இடங்களில் குடிபெயர்ந்து இருக்கிறார்கள். யுத்தம் இடம்பெற்று முடிவடைந்து 17 வருடங்களுக்கு மேலாக இந்த மக்களுடைய தொடர்ச்சியான கோரிக்கையாக இருக்கிறது . 


இதன் போது பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களும் அங்கு அங்கு சென்றனர்.இதனை தொடர்ந்து இன்று மதியம் மன்னார் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது


மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில்  பாதுகாப்பு  பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர  ,  பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,காதர் மஸ்தான்,து.ரவிகரன்,எஸ்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டதோடு இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, மேலதிக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


இதன் போது குறித்த விஜயம் தொடர்பாக தெளிவுபடுத்தியது டன் குறித்த காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தனர்.


இதன் போது அங்கு கருத்து தெரிவித்த பாதுகாப்பு பிரதி  அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர


 நாங்கள் மன்னார் மாவட்ட செயலகத்தில் ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளோம். அதேபோல், இன்று காலை என்னுடன் எங்கள் கௌரவ உபாளி சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினரும், ஜெகதீஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினரும் இப்பிரதேசத்தில் உள்ள பிரதேச செயலாளர்களுடன் இணைந்து, முள்ளிக்குளம், பள்ளிமுனை, சிலாவத்துறை, வங்காலைப்பாடு மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் நிலங்கள் தொடர்பாக நிலவும் பிரச்சினைகள், விவாதங்கள் மற்றும் சிக்கல்கள் குறித்து, அந்தப் பகுதிகளில் வாழும் குடும்பங்கள், பொதுமக்கள் மற்றும் மதத் தலைவர்களுடன் அந்தந்த இடங்களுக்குச் சென்று கலந்துரையாடினோம்.


இது தொடர்பாக நாங்கள் ஒரு நல்ல புரிதலையும், தகவல்களையும் தற்போது பெற்றுள்ளோம். அதன்படி, இந்தத் தகவல்களை நாங்கள் தனித்தனியாக தொகுத்து, பாதுகாப்பு பேரவைக்கு சமர்ப்பித்து, இந்த காணிப் பிரச்சினை களையும் சிக்கல்களையும் எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.


விசேடமாக, இந்த மன்னார் மாவட்டத்தில் கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலுடன் தொடர்புடைய முகாம்களில், குறிப்பாக கடற்படை பிரதானமாக இப்பிரதேசத்தில் நிலைகொண்டுள்ளது.


 அங்கு பல சட்ட விரோதச் செயல்கள் இடம்பெறுகின்றன. கடல் மற்றும் கடற்கரை சார்ந்த பகுதிகளில், உள்நாட்டுப் பகுதிகளிலும் இவை நடப்பதால், தேசிய பாதுகாப்பு தொடர்பாக நாங்கள்  பெருமளவு கவனம் செலுத்த வேண்டும்.


அந்தக் கடற்படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ள இடங்கள், அவர்களால் ஆற்றப்படும். கடமைகள், அவர்கள் இரவும் பகலும் பாராது மக்கள் பாதுகாப்புக்காகவும், இப்பிரதேசத்தின் பாதுகாப்புக்காகவும், தேசிய பாதுகாப்புக்காகவும் செய்யும் சேவைகள் குறித்தும் நாங்கள் அறிவோம்.


நாங்கள் எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிடாமல், எமக்குக் கிடைக்கக்கூடிய நிலங்களில் உள்ள பிரச்சினைகளை எவ்வாறு சுமுகமாகத் தீர்ப்பது என்பது குறித்தே இந்த கலந்துரையாடியுள்ளோம்.

 

இங்கு பெற்றுக்கொண்ட தகவல்களை, அடுத்து வரவிருக்கும் பாதுகாப்பு பேரவை கூட்டங்களிலும், கௌரவ ஜனாதிபதி அவர்களிடமும், நாடாளுமன்றத்தில் உள்ள பாதுகாப்புக் குழுவிலும் சமர்ப்பித்து, மேலும் கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைக் காண்பதே எமது நோக்கமாகும்.


நாங்கள் கொழும்பில் இது குறித்துக் கலந்துரையாடினோம். அதன் காரணமாகவே, நடைமுறை ரீதியாக இந்த இடங்களுக்கு நேரடியாக வந்து பார்வையிடுவது எமது கடமையாக இருந்தது. 


அரசாங்கத்தின் பொறுப்பு என்னவென்றால், பொதுமக்கள் இந்த நிலங்களிலிருந்து வேறு இடங்களுக்கு சென்றிருந்தால், அவர்களை மீண்டும் குடியேற்றுவதற்கு குடியேற்ற அமைச்சு மற்றும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி, அதற்கான வசதிகளை செய்து கொடுப்பதாகும். 


அரசாங்கம் எப்போதும் எமது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்தப் பொறுப்புடன் நாங்கள் பிணைக்கப் பட்டுள்ளோம்.


தேசிய பாதுகாப்பு, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் இந்த கடற்கரையோரப் பகுதிகளில் பல சட்ட விரோதச் செயல்கள் நடைபெறுவதை நீங்கள் அறிவீர்கள். 


அவற்றை ஒழிப்பதுதான் எமது முதலாவது பொறுப்பாகும். அதன் மூலம் பொது மக்களின் வாழ்க்கை பாதுகாக்கப்படும். மீன்பிடி நடவடிக்கைகளின் மறைவில், பெரிய அளவில் சட்டவிரோத வியாபாரங்கள் மற்றும் கடத்தல்கள் இடம்பெறும் பகுதிகளாக  இந்த   மன்னாரிற்கு கீழேயுள்ள கடற்கரைப் பகுதிகள் காணப்படுகின்றன. 


எனவே  கடற்படையினர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற் கொள்கின்றனர். இது குறித்து நாங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துகிறோம்.


 ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, எமது மக்களுக்காக மிக விரைவில் ஒரு நல்ல தீர்வை நாங்கள் பெற்றுக்கொடுப்போம்என அவர் மேலும் தெரிவித்தார்.











-மன்னார் மாவட்டத்தில் கடற்படையினர் வசமுள்ள காணிகளுக்கு பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான குழுவினர் நேரடி விஜயம் Reviewed by Vijithan on May 25, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.