மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள மக்களின் காணிகளை விடுவிக்க நாங்கள் சாதகமான முடிவுகளை எடுப்போம்-பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகதீஸ்வரன்.
மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள மக்களின் காணிகளை மக்களின் நலனை கருத்தில் கொண்டும்,பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
-மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (25) மாலை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
ஜனாதிபதியின் நேரடி உத்தரவின் பேரில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, மேலதிக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட்ட குழுவினரும், அத்தோடு மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் உட்பட்ட குழுவினர், பிரதேச செயலாளர்கள் உட்பட படையினர் மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் இருக்கின்ற காணிகளை விடுவிப்பது தொடர்பான நேரடி கள விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.
உண்மையிலேயே இந்த மக்கள் கடந்த காலத்திலே யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, தங்களது இடத்தை விட்டு வேறு இடங்களிலே குடிபெயர்ந்து இருக்கிறார்கள்.
யுத்தம் இடம்பெற்று முடிவடைந்து 17 வருடங்களுக்கு மேலாக இந்த மக்களுடைய தொடர்ச்சியான கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் கடந்து வந்த அரசாங்கங்கள் எவையுமே இவற்றை விடுவிப்பதற்காக எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
ஆனால் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியிலே பொது மக்களின் தொடர்ச்சியான வேண்டுகோள், அதேபோல் அரசியல் பிரமுகர்களின் வேண்டுகோள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதி கடந்த வருடம் இடம்பெற்ற சூறாவளியின் போது மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
அப்போது மக்களினுடைய கோரிக்கையை அடுத்து, ஜனாதிபதி அவர்கள் இதிலே மிகவும் கரிசனையுடன் இந்தக் காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கோடு இன்றைய தினம் இந்தக் குழுவினரை நேரடியாக விஜயம் செய்வதற்கு உத்தரவிட்டிருந்தார்.
மேற்படி நாங்கள் முதலாவதாக முள்ளிக்குளம், அதனைத் தொடர்ந்து சிலாவத்துறை கடற்படை முகாம், அதனைத் தொடர்ந்து தலைமன்னார், வங்காலைப்பாடு, பள்ளிமுனை போன்ற இடங்களிலே உள்ள கடற்படை முகாம்களைப் பார்வையிட்டோம்.
அங்கே மக்களினுடைய காணிகள் விடுவிக்கப்படவிருக்கின்றன. குறிப்பாக முள்ளிக்குளம் பகுதியில் பாடசாலை, தேவாலயம், பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், மக்களினுடைய குடியிருப்புகள் காணப்படுகின்றன. மக்கள் தொழிலுக்குச் செல்லக்கூடிய பாதைகளும் மூடப்பட்டிருக்கின்றன. மேற்படி இடங்களை விடுவிப்பதற்கு உரிய சாதகமான சூழ் நிலைகள் இருக்கிறது.
இன்றைய தினம் சேகரிக்கப்படும் தரவுகள் அனைத்தும் பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு ஜனாதிபதி முன்னிலையில் முன்வைக்கப்படும். அங்கு கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு, இந்த மக்களுக்கு நியாயமான தீர்வு அல்லது சாதகமான முறையிலே தீர்வு வழங்கப்படுகின்ற அதேவேளை, தேசிய பாதுகாப்பு தொடர்பாகவும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
உங்களுக்குத் தெரியும், தற்போது எங்களுடைய நாட்டிலே மிகவும் மோசமான நிலையிலே இந்த போதைப்பொருள் கடத்தல்கள், போதைப்பொருள் விற்பனைகள் போன்றன இடம்பெறுகின்றன.
அவற்றில் கணிசமானவை மன்னார் பகுதியிலிருந்தும் இடம்பெறுவது தெரிந்த விஷயம்.எனவே, அவற்றினையும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. அதேபோல் சட்டவிரோத செயல்பாடுகள், இதைவிட இந்திய மீனவர்களுடைய அத்துமீறல்கள், மேற்படி விடயங்களைக் கட்டுப்படுத்துவதற்கு நிச்சயமாக இந்த கடற்படையினரின் உதவி தேவை.
நாங்கள் சென்ற அனைத்து இடங்களிலேயும் மக்கள் கூறியிருக்கின்றார்கள். மேற்படி விடயங்களையும் நாங்கள் கருத்தில் கொண்டு, மக்களுடைய காணிகளையும் விடுவிக்கிறதைக் கருத்தில் கொண்டு, ஒரு பொதுவான ஒரு தீர்மானத்தை நாங்கள் நிச்சயமாக எதிர்காலத்திலே எடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எங்களுடைய அரசாங்கத்தைப் பொறுத்தவரையிலே, மக்கள் விரும்புகின்ற, மக்களால் தெரிவு செய்யப்பட்ட, குறிப்பாக வடக்கு மாகாணத்திலே தேசிய மக்கள் சக்தியைத் தெரிவு செய்த மக்களுக்கான அரசாங்கம் என்ற வரையிலே, அவர்களது நம்பிக்கை நிச்சயமாக வீண் போகப்போவதில்லை.
நாங்கள் ஒரு சாதகமான முடிவுகளை நிச்சயமாக இந்தப் பாதுகாப்பு கவுன்சிலில் எடுப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.அந்த வகையில் இன்றைய தினம் இங்கே வருகை தந்திருந்த அனைத்து பிரமுகர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்தோடு, நாங்கள் எங்களுடைய அரசாங்கம் தொடர்ச்சியாக இந்த மக்களுடைய குறைகளை படிப்படியாக எதிர்காலத்திலே தீர்த்து வைப்போம் என்ற விடயத்தையும் இவ்விடத்திலே கூறிக் கொள்ள விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
Reviewed by Vijithan
on
May 25, 2026
Rating:


No comments:
Post a Comment