போதைப்பொருள் கடத்தல் - 15 வயது பாடசாலை மாணவன் கைது
சமன் கொல்லா' என்ற பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரின் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தியதாகக் கூறப்படும் 15 வயது பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவன் நேற்று (15) இரவு அம்பலங்கொடை, மாதம்பே - சுதுவெல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபரின் கைபேசியை ஆய்வு செய்தபோது, சமன் கொல்லாவுடன் அவர் நடத்திய உரையாடல்கள் மற்றும் அவசியமான நேரங்களில் போதைப்பொருள் பொட்டலங்களை மறைத்து வைப்பதற்காகப் பயன்படுத்திய பல்வேறு வழிகள் குறித்த தகவல்கள் கண்டறியப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் அந்தப் பாடசாலை மாணவனிடம் விசாரணை நடத்தப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சமன் கொல்லாவின் அறிவுறுத்தல்களின்படி, சந்தேகநபர் போதைப்பொருட்களைத் தன்வசம் வைத்திருந்ததாகவும், ஆங்காங்கே வீதிகளில் அவற்றை மறைத்து வைத்து விநியோகித்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.
அம்பலங்கொடை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர் இன்று (16) பிற்பகல் பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்ததுடன், எல்பிட்டிய பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
June 16, 2026
Rating:


No comments:
Post a Comment