அண்மைய செய்திகள்

recent
-

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

 இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 23 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 

அவர்களில் நான்கு சிறுவர்களும் உள்ளடங்குவதாக அதன் சமூக வைத்திய  நிபுணர் பிரஷிலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன், கடந்த 6 மாத காலப்பகுதியில் 40,443 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் டெங்கு நோய் வேகமாக பரவும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் கடுமையான காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக வைத்திய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்தில் ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தை நடைமுறைப்படுத்த கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்பு குழு தீர்மானித்துள்ளது.

 

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நேற்று (12) கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 

நாடு முழுவதிலும் இருந்து பதிவாகும் டெங்கு நோயாளர்களில் 25.8 சதவீதமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். இதன் காரணமாக, அந்தப் பகுதியை 'அதி அவதானம்' மிக்க மாவட்டமாக பெயரிட தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

கடந்த காலங்களில் நிலவிய அதிக மழைவீழ்ச்சியுடனான காலநிலை காரணமாக டெங்கு பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

இம்முறை டெங்கு பரவலானது வீடுகளை விட, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களில் அதிகமாக பதிவாகியுள்ளமை விசேடமாக கண்டறியப்பட்டுள்ளது.

 

இதன்படி, டெங்கு ஒழிப்பு வாரத்தில் பொது இடங்கள் மற்றும் வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான சிரமதான வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்தல், அதி அவதானம் மிக்க வீடுகளைப் பரிசோதித்தல் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய பின்னர் சட்ட நடவடிக்கை எடுத்தல் போன்ற பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.










டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு Reviewed by Vijithan on June 13, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.