மன்னாரில் புற்றுநோய் தொடர்பான விசேட விழிப்புணர்வு நிகழ்வு
மன்னாரில் புற்றுநோயாளிகள் மற்றும் அவர்களைப் பராமரித்து வருபவர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்வு இன்று [14] இடம்பெற்றுள்ளது.
மன்னார் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில், மன்னார் பொது வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சை பிரிவு மற்றும் புற்றுநோய் சிகிச்சை பிரிவு வைத்தியர் சிசிலின் ஒழுங்கமைப்பில் வாழ்வுக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
புற்று நோயியல் வைத்திய நிபுணர் டொக்டர் கிருஷாந்தி தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவர்களுக்கும் அவர்களைப் பராமரித்து வருபவர்களுக்கும் தேவையான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல்களை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக, இலங்கையில் பெண்களை அதிகளவில் பாதிக்கும் மார்பகப் புற்றுநோய் தொடர்பாகவும், அதனை ஆரம்பத்திலேயே கண்டறியும் முறைகள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பொதுமக்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிப்பதுடன், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது
Reviewed by Vijithan
on
August 14, 2026
Rating:





No comments:
Post a Comment