பிரமாண்டமாக நிறைவடைந்தது DU Legends Premier League!
மன்னாரில் DU Sports நிறுவனம் மற்றும் Dreams united club ஏற்பாட்டில் நடைபெற்ற DU Legends Premier League கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நேற்று (26) மன்னார் நகரசபை பொது விளையாட்டு மைதானத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
Dream Sports நிறுவனத்தின் தலைவர் நித்திய சீலன் யெஜமன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களின் பெருமளவான பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் நகரசபை மற்றும் மாந்தை பிரதேச சபை தலைவர்கள், மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் முன்னாள் அதிபர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
40 வயதுக்கு மேற்பட்ட வீரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்றிருந்தன.
இறுதிப் போட்டியில் DU Legend அணியும் PKK Legend அணியும் மோதின. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் பெற்று 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
இதனையடுத்து நடைபெற்ற பெனால்டி உதைகள் மூலம் DU Legend அணி வெற்றியைப் பதிவு செய்து, DU Legends Premier League தொடரின் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.
சம்பியனான DU Legend அணிக்கு ரூ.5 இலட்சம் பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டன.
மேலும், கடந்த மாதம் தேசிய ரீதியில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களும் இந்நிகழ்வில் பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விளையாட்டுத் துறையில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வரும் DU Sports நிறுவனம், பல்வேறு வயதுப் பிரிவினரையும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இவ்வாறான போட்டிகளை ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, 40 வயதுக்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்த வீரர்களை மீண்டும் போட்டி மைதானத்திற்கு அழைத்து வந்து, அவர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளமை இந்தத் தொடரின் சிறப்பம்சமாக அமைந்தது.
மன்னாரின் விளையாட்டுத்துறையை மேலும் ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான தொடரின் இறுதிப் போட்டி, வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியதுடன் சிறப்பாக நிறைவடைந்தது.
Reviewed by Vijithan
on
September 27, 2026
Rating:







No comments:
Post a Comment