அண்மைய செய்திகள்

recent
-

ராஜ் சோமதேவவின் அறிக்கையில் பாரிய சந்தேகம் - நீதிமன்றில் மனு!

 செம்மணிப் புதைகுழி தொடர்பான அறிக்கையில் 'பெரும் மனிதப் புதைகுழி' என்ற சொற்றொடரைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ திட்டமிட்டு நீக்கியுள்ளார் எனச் சந்தேகிப்பதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பில் சட்டத்தரணிகள் குழுவொன்று நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.


செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகளின்போது பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சட்டத்தரணிகள் சிலர் தொடர்ச்சியாக முன்னிலையாகி வரும் நிலையில், அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த நகர்த்தல் பத்திரத்தில் பல முக்கியமான விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.


பாதிக்கப்பட்ட தரப்பினர் தாக்கல் செய்துள்ள நகர்த்தல் பத்திரத்தில், பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில் 'பெரும் புதைகுழி' என்ற சொல் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதற்கு முன்னர் அவரால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளில் அந்தச் சொற்றொடர் உள்ளடங்கியிருந்த நிலையில், தற்போதைய அறிக்கையில் அந்தச் சொல் விடுபட்டுள்ளமையானது தீவிரமான சந்தேகங்களை எழுப்புவதாகவும், இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகக் கருத வேண்டியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த அகழ்வுப் பகுதியை வழக்கமான அடக்க இடமாகக் கருதுவதற்கான அடிப்படை ஏதேனும் இருந்தால், அது தொடர்பான மயானப் பதிவுகள், நிலப் பயன்பாட்டின் வரலாறு, சட்ட ஏற்பாடுகள் மற்றும் நம்பகமான சான்றுகள் மூலம் அறிக்கை தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.


மேலும், எச்சங்களின் ஆழம், பரவல், மண் அடுக்குகளில் அவற்றின் அமைவிடம் மற்றும் அவற்றின் நிலை ஆகியவை தடயவியல் மற்றும் தொல்லியல் ஆய்வுகளில் மிக முக்கியமான அம்சங்கள் என்பதால், இந்த அம்சங்கள் வழக்கமான அடக்கம் என்ற முன்வைக்கப்பட்ட விளக்கத்துடன் பொருந்துகின்றனவா என்பதை அறிக்கை விளக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அத்துடன், குறித்த முடிவுகளுக்கு வருவதற்குப் பயன்படுத்தப்பட்ட அறிவியல் அவதானிப்புகளையும் ஒப்பீட்டுச் சான்றுகளையும் அறிக்கையில் முறையாக அடையாளப்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில், செம்மணிப் புதைகுழியின் பின்னணியில் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு காரணமாக இருக்கலாம் எனக் கருதுவதற்குப் போதிய சான்றுகள் இல்லை என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.


செம்மணிப் புதைகுழிக்குத் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு காரணமாக இருந்திருக்கலாம் என்று பேராசிரியர் ராஜ் சோமதேவ தனது இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கருத்தை அவர்கள் கடுமையாக மறுத்துள்ளனர்.


அடையாளம் காணக்கூடியதும் சரிபார்க்கக் கூடியதுமான அறிவியல் சான்றுகள் ஆதரிக்காத வரை இத்தகைய கருதுகோளுக்கு ஆதரவாகப் பயன்படுத்தப்பட்ட உண்மைநிலை மற்றும் அறிவியல் அடிப்படைகளைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெளிவுபடுத்த வேண்டும் எனவும், போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் செம்மணிப் புதைகுழிக்கான காரணமாகத் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவைக் கருத முடியாது எனவும் சட்டத்தரணிகள் தாக்கல் செய்துள்ள நகர்த்தல் பத்திரத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





ராஜ் சோமதேவவின் அறிக்கையில் பாரிய சந்தேகம் - நீதிமன்றில் மனு! Reviewed by Vijithan on October 23, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.