பொகவந்தலாவயில் 10 வயது சிறுவன் ஆற்றில் விழுந்து உயிரிழப்பு!
பொகவந்தலாவ பகுதியில் 10 வயது சிறுவன் ஒருவன் ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொகவந்தலாவ, லின்பொட் தோட்டப் பகுதியில் வசித்து வந்த 5 ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவரொருவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று (31) மதிய வேளையில் குறித்த மாணவன் தனது பாட்டனாருடன் கெசெல்கமுஓயா ஆற்றுக்கு அருகில் புல் வெட்டுவதற்காகச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து உடன் வந்த பாட்டனார் அவரை தேடியுள்ளார். எனினும், அவரை தேடிக் கண்டுபிடிக்க முடியாததால் இது குறித்து அயலவர்களுக்கு அறிவித்துள்ளார்.
இதற்கமைய, அயலவர்களின் உதவியுடன் கெசெல்கமுஓயா ஆற்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவனின் சடலம் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் விசேட சட்ட மருத்துவ அதிகாரியிடம் சடலம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
November 01, 2026
Rating:


No comments:
Post a Comment