தீபாவளிக்கு புத்தாடை வாங்க கடும் காய்ச்சலில் மீன்பிடிக்கச் சென்ற மகனை மீட்டு தர தாய் கண்ணீருடன் கோரிக்கை:
தீபாவளிக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், பட்டாசு மற்றும் புத்தாடைகள் வாங்குவதற்காக கடும் காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் மீன்பிடிக்கச் சென்ற தனது மகனை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து உள்ளதாகவும், அவரை உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவரின் தாய்
கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று (சனிக்கிழமை) 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
மீனவர்கள் கச்சத்தீவுக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மன்னார் வடக்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தங்கச்சிமடத்தை சேர்ந்த எடிசன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகையும் அதிலிருந்து பிளாசியஸ், அழகுபாண்டி, அந்தோணி பிச்சை, ரபீன், நெல்சன், அருளானந்த சேவியர் மற்றும் சகாய ஆனந்த் ஆகிய ஏழு மீனவர்களையும் கைது செய்து விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
மீனவர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்ட பின்னர், படகுடன் அவர்களை மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
. இதையடுத்து, மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக, நடுக்கடலில் மீன் பிடிக்கும் காரைக்கால் மீனவர்கள், இலங்கையின் மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிறுதொழில் மீனவர்களின் நண்டு வலைகளைச் சேதப்படுத்தி வருவதாகக் கூறி, இலங்கை மீனவர்கள் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.
மேலும், தமிழக மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மீனவர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த நிலையில், இன்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு விசைப் படகையும் ஏழு மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளிக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், பண்டிகைக்காக பட்டாசு மற்றும் புத்தாடைகள் வாங்குவதற்காக தனது மகன் கடும் காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடலுக்குச் சென்ற தனது மகன் தற்போது இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு தீபாவளியை எவ்வாறு கொண்டாடுவது எனத் தெரியவில்லை.
மேலும், உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ள தனது மகனை உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வரவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்யவும் மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைபிடிக்கப்பட்ட மீனவரின் தாய் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்து தாயகம் அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
Reviewed by Vijithan
on
November 01, 2026
Rating:


No comments:
Post a Comment