2027 பட்ஜட்செலவு திட்ட முன்மொழிவுகள்
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரை சற்றுமுன்னர் பாராளுமன்றில் ஆரம்பமானது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட உரையை நிகழ்த்தி வருகின்றார்.
‘வறுமையை ஒழித்தல், நீதியான சமூகத்தைக் கட்டியெழுப்புதல், மோசடி மற்றும் ஊழலை இல்லாதொழித்தல், பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் ஆகியனவே இந்த வரவு-செலவுத் திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.
மத்திய கிழக்குப் போர் எமது வலுசக்திச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், அதற்காக நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க 147 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது.
பொருளாதார முகாமைத்துவத்தை மேற்கொள்வதுடன், கடந்த காலத்தைப் போன்று எதிர்காலச் சந்ததியினருக்கு இனிமேல் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படாதவாறு செயற்படுவதே எமது இலக்காகும்.
2025 ஆம் ஆண்டில் நடைமுறைக் கணக்கு (Current Account) வரலாற்றில் மிக உயர்ந்த அளவாக 1,719 மில்லியன் டொலர் மிகையைப் பதிவு செய்துள்ளது.
இந்த ஆண்டில் 9 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் (Remittances) எதிர்பார்க்கப்படுகின்றன.
2022 ஆம் ஆண்டின் இறுதியில் காணப்பட்ட கடன் அளவை 2025 ஆம் ஆண்டின் இறுதியாகும் போது 95% வரை குறைத்துக்கொள்ள முடிந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் அரச வருமானத்தில் 79.1% வட்டி செலுத்துவதற்காகச் செலவிடப்பட்டது. 2025 ஆம் ஆண்டாகும் போது அதனை 45.9% வரையும், 2026 செப்டெம்பர் மாதமாகும் போது 39.6% வரையும் மேலும் குறைத்துக்கொள்ள முடிந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் 52 அரச தொழில்முயற்சிகளுக்காகப் பதிவாகியிருந்த 744.6 பில்லியன் ரூபாய் மொத்த வரிக்கு முந்திய தேறிய நட்டமானது, 2025 ஆம் ஆண்டில் 44.4 பில்லியன் ரூபாய் இலாபமாக மாற்றப்பட்டு, திறைசேரிக்கு இருந்த அழுத்தம் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2026 ஆகஸ்ட் மாத இறுதியில் அரச நிறுவனங்கள் 367 பில்லியன் ரூபாய் வரிக்கு முந்திய இலாபத்தைப் பதிவு செய்துள்ளன.
2018 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மீண்டும் அரசினால் பொறுப்பேற்கப்பட்ட நாளிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரையிலான அதன் மொத்த திரண்ட நட்டம் 528 பில்லியன் ரூபாவாகும். இது திறைசேரிக்குப் பாரிய சுமையாக மாறியுள்ள நிலையில், இதற்குத் தீர்வு காண்பதற்காக அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஃபிட்ச் தரப்படுத்தல் (Fitch Ratings) நிறுவனத்தினால் இலங்கையின் இறையாண்மை கடன் தரப்படுத்தல் உயர்த்தப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் ஊழல் தொடர்பான தரப்படுத்தல்களில் இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது.
உலகளாவிய அமைதிச் சுட்டெண்ணில் (Global Peace Index) இலங்கையின் நிலை முன்னேற்றமடைந்துள்ளது. இத்தகைய மாற்றங்கள் பல்வேறு துறைகளில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்திற்கான சான்றுகள் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஏற்றுமதி போட்டித்தன்மை மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு பலப்படுத்தப்படும்.
2027 ஆம் ஆண்டில் அரச முதலீடு மொத்த தேசிய உற்பத்தியில் 14 சதவீதமாக இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்தில் மூலதன செலவுகளுக்காக ரூ. 2000 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டம் முன்மொழிவுகள்
நுண்நிதி முகாமைத்துவ அதிகாரசபையொன்று 2027 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்படும்.
அரச - தனியார் பங்காண்மை சட்டமூலம் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் கொண்டுவரப்படும்.
முதலீட்டுப் பாதுகாப்புச் சட்டமூலம் சட்டமா அதிபரின் அனுமதிக்காக (நெறிமுறை ஒப்புதலுக்காக) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய புள்ளிவிபரவியல் சட்டம் தற்போது வரையப்பட்டு வருகின்றது.
2027 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சுங்கக் கட்டளைச் சட்டம் திருத்தப்படும்.
பழைய தொழிலாளர் சட்டம் திருத்தப்பட்டு பதிய பரிந்துரைகள் முன்வைக்கப்படும்.
முதலீட்டு பிரதேசங்கள் அடையாளங் காணப்பட்டு. கொழும்புக்கு வௌியில் கொண்டு செல்ல விசேட நிவாரண பொதி. முதலீட்டு ஊக்குவிப்புக்காக புதிய விசேட நிறுவனம் ஸ்தாபிக்கப்படும்.
சூதாட்ட அதிகாரசபை சட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான நிபந்தனைகள் கொண்டுவரப்படும்
இலங்கை - ஐரோப்பா பொருளாதார ஒத்துழைப்புக்காக ரூ. 3430 மில்லியன் ஒதுக்கம்.
சீனாவுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றில் (FTA) கையெழுத்திடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தேசிய ஒற்றை முதலீட்டுச் சாளரத்தை உருவாக்குவதற்கான ஆலோசனை நிறுவனமொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. இதனை நிறுவுவதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பதிவாக நாடளாவிய திடீர் மின்தடைகளை கருத்திற் கொண்டு மின்சக்தி வலையமைப்பை பாதுகாக்க ரூ.26.5 பில்லியன் ஒதுக்கம்.
வீட்டுக்கூரையில் மின்சக்தி படலம் பொருத்தியுள்ள நுகர்வோருக்கு மின் சேமிப்புக்கான பெற்றரி கொள்வனவுக்கு நிவாரணம் வழங்க ரூ. 350 மில்லியன் ஒதுக்கீடு.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 30 மெகாாவொட் கொள்ளளவு கொண்ட மின்கலச் சேமிப்புத் தொகுதி நிறுவப்படவுள்ளது
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன், 180 அலகுகளுக்கு (Units) மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் 300,000 மின் நுகர்வோருக்கு இலவசமாகத் திறன்மிக்க மின்மானிகளை (Smart Meters) வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சியிலிருந்து ஹபரணை வரையிலான புதிய மின்சார விநியோகக் கட்டமைப்பு அமைக்கப்படவுள்ளது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவை ஒரு இலட்சம் பெரல்கள் வரை அதிகரிகரிப்பதற்கு அரச - தனியார் கூட்டு முதலீடு கொண்டுவரப்படவுள்ளது.
விஜேராம மாவத்தையில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான விசேட கேந்திர நிலையம் ஸ்தாபிக்கப்படும்.
தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக 750,000 இணைய ப்ரோட்பேண்ட் வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.
கல்வியியற் கல்லூரிகளில் பயிலும் ஆசிரியர் பயிலுநர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 2027 ஏப்ரல் 20,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அறநெறி பாடசாலை தொண்டர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு 12,500 ரூபாய் வரை 5000 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
கல்வியற் கல்லூரி மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்தி 35000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 2250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக தகுதி பெற்ற மாணவர்களுக்கு தனியார் உயர் கல்வி நிலையங்களின் பயில்வதற்காக அரச வங்கிகள் ஊடாக வட்டியில்லா கடன் தொகை அதிகரிக்கப்படவுள்ளது.
தொழிற்கல்வி துறையின் அபிவிருத்திக்காக 11,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வீதி வலையமைப்பு அபிவிருத்திக்காக 487 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருணாகல் - கலேவெல பகுதியின் நிர்மணப்பணிகளுக்காக 30, 000 மில்லியன் ரூபாய் ஒதுக்கம்.
நகரங்கள் பலவற்றில் மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்காக 1900 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கிராமிய மட்டத்தில் புதிய பாலங்கள் அமைக்கும் பணிகளுக்காக 10,600 மில்லியன் ஒதுக்கீடு.
சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சியாளர்களுக்காக சலுகைக்கடன் வேலைத்திட்டத்துக்காக 67, 687 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
மத்திய அளவு மீன்பிடி படகு கொள்வனவுக்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேசிய பயணிகளுக்கான முனையம் அடுத்த வருடத்தில் ஸ்தாபிக்கப்படும்.
மத்தள விமான நிலையம் ஆரம்பித்தது முதல் 70,000 மில்லியன் ரூபாய் நட்டம். எனவே அதன் அபிவிருத்திக்காக அடுத்த வருடம் புதிய முதலீடுகள் கோரப்படுகின்றன.
பல்வேறு தொழிற்பேட்டைகளின் உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்திக்காக 4000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
சீகிரியாவை மையமாகக் கொண்ட சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக, சீகிரியா உள்நாட்டு விமான நிலையத்தின் பயணிகள் முனையம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவதற்காக 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதற்கு முன்மொழியப்படுகின்றது.
சீனக்குடா விமான நிலையத்தின் பயணிகள் முனையம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவதற்காக இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தினால் 2027 ஆம் ஆண்டில் தேவையான முதலீடுகள் மேற்கொள்ளப்படும்.
வடக்கில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன், குறஞ்சாதீவு உப்பளத்தை தேசிய உப்பு நிறுவனத்தின் நிதியைப் பயன்படுத்தி மீள ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக திறைசேரியினால் 236 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தின் கடற்றொழில் உள்கட்டமைப்பு, நங்கூரமிடும் துறை மற்றும் பேசாலை மீன்பிடித்துறைமுகத்தை மேம்படுத்த 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.
பயனற்ற அல்லது குறைந்த விளைச்சல் தரும் வயல் நிலங்களை உரிய மதிப்பீட்டின் மூலம் அடையாளம் கண்டு, தற்காலிகப் பயிர்களைச் செய்வதற்கு அல்லது நிரந்தரப் பயிர்களை நடுவதற்கு நில உரிமையாளர்களுக்குச் சுதந்திரம் வழங்குவதுடன், இதனை ஊக்குவிக்க 1,550 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெல் கொள்வனவு மற்றும் அரிசி உற்பத்தியை எளிதாக்குவதற்காக, ஏற்கனவே உணவுப் பாதுகாப்புக்கென ஒதுக்கப்பட்ட 700 மில்லியன் ரூபாவுடன் மேலதிகமாக 300 மில்லியன் ரூபா கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பகுதி மக்களின் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வெள்ள அபாயங்களைக் குறைக்கவும் முந்தனி ஆற்றுப் படுக்கை அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பிக்க 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளொன்றிற்கான ரூ. 200 ஊக்குவிப்புக் கொடுப்பனவு 2027 இலும் தொடரும்,
'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுகளுக்காக ரூ. 230 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது
சிறுநீரக நோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவு ரூ. 10,000 இலிருந்து ரூ. 12,500 ஆக உயர்த்தப்படும்.
'பிரஜா சக்தி' தேசிய செயற்பாட்டின் கீழ் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்திக்கு ரூ. 25,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது
புலம்பெயர் பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் வரை சலுகை வீடமைப்புக் கடன்களை வழங்க ரூ. 1,000 மில்லியன் வட்டி மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது
பொதுச் சுகாதார சேவைகளுக்காக ரூ. 131 பில்லியன் மூலதனச் செலவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
பழைய அம்புலன்ஸ்களுக்குப் பதிலாக புதிய அம்புலன்ஸ்களைச் சேர்க்க ரூ. 3,000 மில்லியனும், 1990 சுவ செரிய ஆம்புலன்ஸ் சேவைக்கு 100 புதிய அம்புலன்ஸ்களைச் சேர்க்க ரூ. 1,725 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்க ரூ. 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது
அநுராதபுரம் - நுவரகம் வனப்பகுதியில் புதிய கால்நடை வைத்தியசாலையொன்றை நிறுவ 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்க ரூ. 95,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் புள்ளி குறைப்பு (Demerit Points) டிஜிட்டல் முறைமைக்கு ரூ. 1,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவைக்கு 5 புதிய ரயில்களைக் கொள்வனவு செய்ய ரூ. 5,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுத்தமான குடிநீர் திட்டங்களுக்காக ரூ. 77,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, நயினாதீவு, வாழைச்சேனை உட்பட 13 புதிய குடிநீர் திட்டங்களுக்கு ரூ. 5,190 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானத்தினருக்கு 70,000 வீடுகள் திட்டத்தில் 2027 இல் 10,000 புதிய வீடுகள் (வீட்டிற்கான உதவி ரூ. 15 லட்சமாக உயர்வு / ரூ. 15,000 மில்லியன் ஒதுக்கீடு) கட்டப்படும்.
வடகிழக்கில் இடம்பெயர்ந்த 13,000 குடும்பங்களை 2 ஆண்டுகளில் மீள்குடியேற்ற ரூ. 10,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட சமூகத்தினரின் வீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இந்திய அரசாங்கத்தின் கூட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட 10,000 வீடுகளை அமைக்கும் திட்டம் மேலும் துரிதப்படுத்தப்படும்.
2027 ஜூன் முதல் பொலிஸ் அதிகாரிகளுக்கு நாட்டின் காலநிலைக்கு ஏற்ற வகையிலான புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படும்.
கொழும்பு சிறைச்சாலைகளை மில்லேவ பகுதிக்கு மாற்ற ரூ. 300 மில்லியனும், காலி சிறைச்சாலையை பூஸ்ஸ பகுதிக்கு மாற்ற ரூ. 500 மில்லியனும், மாத்தறை சிறைச்சாலையை கொட்டவிலவத்தை பகுதிக்கு மாற்ற ரூ. 500 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது
'டித்வா' புயலினால் சேதமடைந்த 1,328 மத வழிபாட்டுத் தலங்களை (758 பௌத்த விகாரைகள், 272 இந்து கோவில்கள், 199 இஸ்லாமிய பள்ளிவாசல்கள், 99 கிறிஸ்தவ தேவாலயங்கள்) புனரமைக்க ரூ. 722 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் புனித நகர அபிவிருத்திக்கு ரூ. 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
'பிவிதுரு புரவர' கழிவு முகாமைத்துவ திட்டத்துக்கு 100 உள்ளூராட்சி மன்றங்களுக்கு ரூ. 5,000 மில்லியன்; நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மாதிரித் தீவுகளாக மாற்றப்படும்.
நிதி ரீதியாக பலவீனமான 46 உள்ளூராட்சி மன்றங்களின் ஊழியர் சம்பளத்தை 100% அரசாங்கமே ஏற்கும் புதிய முறைமை 2027 முதல் அறிமுகமாகும்.
அரச பணியாளர்களுக்கான கொடுப்பனவு சலுகை
அரச ஊழியர்களுக்கு 2025 இல் தொடங்கப்பட்ட அடிப்படைச் சம்பள உயர்வின் 3-வது மற்றும் இறுதிச் சுற்று 2027 இல் (ரூ. 110 பில்லியன் ஒதுக்கீட்டில்) நடைமுறைப்படுத்தப்படும்.
முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தும், உத்தியோகபூர்வ வாகனம் பெறத்தகுதியுடைய உத்தியோகத்தர்களுக்கு மின்சாரத்தால் இயங்குகின்ற வாகனத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில், செலுத்தப்படுகின்ற மாதாந்தக் கொடுப்பனவை 2027 ஜூலை முதல் 150% இனால் அதிகரிக்க முன்மொழிவு
மருத்துவர்களுக்கான DAT கொடுப்பனவு ரூ. 70,000 இலிருந்து ரூ. 95,000 ஆக (ரூ. 25,000 உயர்வு) உயர்த்தப்படும்.
தாதியர், துணை மருத்துவப் பணியாளர்களின் மாதாந்த விசேட பணிக் கொடுப்பனவு ரூ. 12,000 ஆகவும், ஏனையோருக்கு ரூ. 4,000 ஆகவும் உயர்த்தப்படும்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கல்விசார் கொடுப்பனவு மாதாந்தம் ரூ. 25,000 இனால் உயர்த்தப்படும்.
முப்படைகளிலுள்ள உத்தியோகத்தர்களுக்கு செலுத்தப்படுகின்ற நாளாந்த உணவுப் கொடுப்பனவுகளை 2027 ஜூலை மாதம் முதல் ரூபா 315 இினாலும், ஏனைய உத்தியோகத்தர்களுக்கு செலுத்தப்படுகின்ற நாளாந்த உணவுப் கொடுப்பனவை ரூபா 332 இனாலும் அதிகரிப்பதற்கு முன்மொழிவு.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு செலுத்தப்படுகின்ற மாதாந்த உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவை ரூபா 10,000 இனால் அதிகரிப்பதற்கு முன்மொழிவு.
சிறைச்சாலை அதிகாரிகள் தங்கள் கடமையை ஆற்றும் போது எதிர்கொள்ளும் கடினமான மற்றும் அதிக ஆபத்து நிறைந்த பணிச் சூழல்களைக் கருத்திற்கொண்டு, தற்போதைய மாதாந்த இடர் கொடுப்பனவை ரூ. 8,000 இலிருந்து ரூ. 16,000 ஆக, அதாவது 100% இனால் அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சிறைச்சாலைசார் சேவையில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவை ரூ. 2,250 இலிருந்து ரூ. 10,000 ஆக உயர்த்த முன்மொழிவு.
சிறைச்சாலை துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு முன்மொழியப்பட்ட இந்தக் கொடுப்பனவுகளை 2027 ஜூலை மாதம் முதல் வழங்க முன்மொழிவு.
கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்த பிரயாணக் கொடுப்பனவை ரூ. 1,600 இலிருந்து ரூ. 4,000 ஆகவும், மாதாந்த அலுவலக வாடகைக் கொடுப்பனவை நகர சபை எல்லைக்குள் ரூ. 3,000 இலிருந்து ரூ. 6,000 ஆகவும், பிரதேச சபை எல்லைக்குள் ரூ. 2,000 இலிருந்து ரூ. 4,000 ஆகவும் அதிகரிப்பதற்கு முன்மொழிவு.
வரி தொடர்பான முன்மொழிவுகள்
மாதாந்திர வருமான வரி விலக்கு வரம்பு முன்பு ரூ. 100,000 ஆக இருந்தது, பின்னர் ரூ. 150,000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது புதிய திருத்தங்களின்படி இது ரூ. 162,500 ஆக மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கமைய, மாதச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் ரூ. 162,500 வரை பெறுபவர்கள் எவரும் தமது சம்பளத்திற்கு வரி செலுத்தத் தேவையில்லை.
இறக்குமதி செய்யப்படும் நெத்தலிக்கான விசேட பண்ட வரியை கிலோ ஒன்றுக்கு ரூ. 100 இலிருந்து ரூ. 10 ஆகவும், மாசிக்கான வரியை கிலோ ஒன்றுக்கு ரூ. 302 இலிருந்து ரூ. 10 ஆகவும், தூள் செய்த மற்றும் தூள் செய்யாத காய்ந்த மிளகாய்க்கான வரியை கிலோ ஒன்றுக்கு ரூ. 50 இனாலும் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன், இந்த வரித் திருத்தங்கள் 2026 நவம்பர் 13 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன
Reviewed by Vijithan
on
November 12, 2026
Rating:


No comments:
Post a Comment