அனுராதபுரம் - ரம்பேவ விபத்து; சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி
அனுராதபுரம் - ரம்பேவ, வெலிஓயா சந்தியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற கோரப் பேருந்து விபத்தில் உயிரிழந்த கெப்பத்திகொல்லாவ டிப்போவைச் சேர்ந்த பேருந்துச் சாரதி, விபத்து நிகழ்ந்த வேளையில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ அறிக்கைகள் மூலம் அம்பலமாகியுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெப்பத்திகொல்லாவ டிப்போவைச் சேர்ந்த பேருந்துச் சாரதியின் கவனயீனமானதும், பொறுப்பற்றதுமான வாகனம் செலுத்துதலே இவ்விபத்து ஏற்படுவதற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் பொலிஸார் முன்னர் குறிப்பிட்டிருந்தனர்.
இவ்விபத்தில் கெப்பத்திகொல்லாவ - எடவீரகொல்லாவ, ஹிரல்லுகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய லங்கா ஜயநாத் என்ற இலங்கைப் போக்குவரத்துச் சபை (இ.போ.ச.) பேருந்துச் சாரதியே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, விபத்து நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் குறித்த பேருந்துச் சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ அறிக்கைகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
November 13, 2026
Rating:


No comments:
Post a Comment