'இலங்கை அரசை ஆளுகின்றவர்கள் தொடர்ச்சியாக எமது இனத்தை நசுக்குகின்றவர்களாகவே காணப்படுகின்றனர்.-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி
'இலங்கை அரசை ஆளுகின்றவர்கள் தொடர்ச்சியாக எமது இனத்தை நசுக்குகின்றவர்களாகவே காணப்படுகின்றனர். ஒருகாலத்தில் தரப்படுத்தல்; என்ற விதத்தின் அடிப்படையிலே மாணவர்களை நசுக்க நினைத்ததினால் புரட்சி வெடித்தது. இவ்வாறான நிலை காரணமாக எங்களுடைய இனம் கிளர்ந்தெழுந்து தமது எழுச்சியையும் போராட்டத்தையும் சிறப்பாக பல தியாகங்களுக்கு மத்தியில் செய்து முடித்துள்ளது.
செல்வம் அடைக்கலநாதன் எம்.பி உரையாற்றுகையில்,
இன்றைக்கு இந்த அரசு தமிழர்களுடைய சுய கௌரவத்தையும் சுயநிர்ணயத்தையும் தட்டிப்பார்க்கின்ற நிலைக்கு இறங்கியிருக்கின்றது. தமிழர்களை கிள்ளுக்கீரை என்று நினைக்கும் அளவிற்கும் அடிமைத்தனம் என்று நினைக்கும் தன்மையிலும் செயற்படுகின்றது. இதை நாம் உடைத்தெறியும் தன்மை கொண்டவர்களாக மாறவேண்டும்.
இந்த அரசாங்கம் செய்யும் அடாவடித்தனங்களுக்கு எதிராகவும் இராணுவம் செய்யும் அத்தனை கொடுமைகளுக்கும் தீர்வு காணப்படவேண்டும். எமது நிலத்தை அபகரிக்கின்ற எமது மதங்களை உடைத்தெறிகின்ற, எமது மாணவர்களை கைது செய்கின்ற தன்மைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லும் வகையில் எமது செயற்பாடுகள் இருக்கவேண்டும்.
இனியும் அரசு தமிழர்களை சீண்டிப்பார்க்கின்ற தன்மைக்கு அனுமதிக்க முடியாது. தமிழர்கள் சுயகௌரவத்துடனும் சுயநிர்ணயத்துடனும் வாழுகின்றனர் என்பதனை எமது ஜனநாயக போராட்டங்கள் மூலமாக உலக நாடுகளுக்கு காட்டுவதனூடாக நாம் சளைக்கமாட்டோம். எமது இனம் மீண்டு எழும் என்கின்ற செய்தி சென்றடைய வேண்டும்' என்றார்.
-----------------------
'மற்றவர்களை குடியேற்றுவதன் மூலம் தமிழர்களின் அடையாளத்தையே இல்லாமல் செய்யும் நடவடிக்கையை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. ஆகையால் தான் எமது போராட்டங்களை இன்னும் மிக பலமாகவும் பரந்தும் விரிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது' என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று வவுனியாவில் இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்குமாறு கோரிய ஆக்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் பொதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தம் உரையாற்றிய அவர்,
'கடந்த சில மாதங்களாக எமது தேசத்திலே இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்தும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்கள் அகற்றப்பட்டாலே மீள்குடியேற்றங்கள் இடம்பெறும் என்பதனை வலியுறுத்தி நாம் அஹிம்சை வழியிலான போராட்டங்களை நடத்திவருவதை உலகம் நன்கு அறியும்.
ஆயிரம் ஆயிரம் ஏக்கர் எமது நிலங்களையும் எமது வீடுகளையும் அழித்தது மட்டமல்லாது அதற்குமப்பால் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்திருப்பதை நாம் தீவிரமாக எதிர்த்து நிற்கின்றோம். இன்று அரசாங்கத்தை பார்த்தால் தமது பெரும்பான்மை பலம் என்பதை வைத்துக்கொண்டு எல்லாத் துறைகளிலும் ஆக்கிரமிப்பை நடத்தி வருகின்ற ஓர் உச்சக்கட்டத்தை நீதித்துறையில் ஆக்கிரமித்துள்ளதையும் நாம் இன்று காணக்கூடியதாக உள்ளது.
இன்று எமது கோரிக்கை இந்த வன்னி மாவட்டத்திலே எமது மக்கள் ஆயிரமாக திரண்டு நின்று ஜனநாயகத்திற்கு மதிப்பு கொடுக்கவேண்டும். ஜனநாயக சக்திகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும், கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோருகின்றோம். இதற்கு செவிசாய்க்காது விட்டால் தொடர்ந்தும் நாம் இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியும் தீவிரப்படுத்த வேண்டியும் இருக்கும்.
இதனையும் விட எமது இலட்சக்கணக்கான மக்களின் மீள்குடியேற்றத்தை இந்த இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். புதிதாக எமது தமிழ் நிலத்தை வேற்று இனத்தவர்களுக்கு விற்கின்றார்கள், அபகரிக்கின்றார்கள். எமது நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும், எமது நிலங்களில் எமது மக்கள் குடியேற்றப்பட வேண்டும்.
எமது மக்கள் தமது வீடுகளிலும் தமது மண்ணிலும் வாழ வேண்டும். தமது மண்ணிலே தமிழ் மக்கள் ஆள வேண்டும் என்பதற்காக ஜனநாயக ரீதியாகவும் அஹிம்சை ரீதியாகவும் எமது மக்களை அணிதிரட்டி பலமாகவும் பரந்துபட்டும் விரிவுபடுத்தி போராட வேண்டியவர்களாக இருக்கின்றோம்' என்றார்.
சிவசக்தி ஆனந்தன் எம்.பி உரையாற்றுகையில்,
'இலங்கை அரசாங்கத்தின் தமிழர் விரோத போக்கை சாவதேச சமூகம் கவனத்தில் எடுத்து எமக்கு நீதியை பெற்று தரவேண்டும். இவ்வாறான போராட்டத்தை வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் அரசியல் கட்சிகளும் தென்னிலங்கை முற்பொக்கு சிங்கள அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்றோம்.
குறிப்பாக வன்னி மாவட்டத்தில் அண்மையில் ஜனாதிபதியின் விசேட செயலணியின் செயலாளர் திவாரட்ன வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பகுதிகளில் 3,000 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகளை வெட்டி வெளி மாவட்டங்களை சேர்ந்த புதியவர்களை குடியேற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இதற்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு அரசாங்க அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிறைகளில் இருந்தும் புனர்வாழ்வு பெற்று வந்தவர்களும் மீண்டும் கைது செய்யப்படும் நிலைமைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இவற்றை கண்டித்தே நாம் போராட்டங்களை நடத்துகின்றோம்.
வடக்கு, கிழக்கில் இடம்பெறும் ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு இங்குள்ள இராணுவமே பொறுப்பாகவுள்ளது. அதுவே காரணமாகவுமுள்ளது. ஆகவே வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ மற்றைய கட்சிகள் உட்பட தமிழ் மக்களுக்கோ மாற்று கருத்தில்லை' என்றார்.
புளொட் தலைவர் சித்தார்த்தன் உரையாற்றுகையில்,
'இந்த அரசு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கொண்டுவருவதாக கூறிக்கொண்டு முரண்பாடுகளை தோற்றுவித்துக்கொண்டிருக்கின்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே மாணவர்கள் தமது உடன்பிறப்புகளை நினைத்து அந்நாளை அனுஸ்டிக்கும்போது பல்கலைக் கழகத்தினுள்ளே புகுந்து மாணவர்களை அடித்ததுடன் அவ்வாறான செயல்கள் மூலம் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவது மாத்திரமல்ல வடக்கு கிழக்கை தாம் ஆக்கிரமித்திருப்பதை சர்வதேசத்திற்கும் மக்களுக்கும் தமது சமூகத்திற்கும் காட்டும் செயற்பாட்டையே மேற்கொள்கின்றது.
இவைகள் அனைத்தும் நிற்பாட்டப்பட வேண்டும். கடந்த காலங்களில் இப்படியான செயற்பாடுகள் இந்த நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்தியதை மறந்துவிடக்கூடாது. எனவே கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமல்ல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும்' என்றார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வி.ஆனந்தசங்கரி உரையாற்றுகையில்,
'எமது மத்தியில் ஒற்றுமையில்லை என்று சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக கூறியுள்ளார். எங்கள் மத்தியில் ஒற்றுமை வரும் வரைக்கும் எங்களால் ஒரு அடிகூட நகரமுடியாது என்பதனை நான் உணர்ந்துகொள்கின்றேன்.
இன்று இங்கு பல விதமான கோசங்கள் எழுப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறான கோசங்கள் இங்கு சிலருக்க புதுமையாக இருந்தாலும் இது 40 ஆண்டுகாலமாக திரும்பத்திரும்ப ஒலித்தகோசங்கள். ஆகவே 40 ஆண்டுகளாக இவ்வாறான கோசங்கள் எழுப்பப்படுவதாக இருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் நாற்பது ஐம்பது ஆண்டுகளாக உள்ள பிரச்சினை.
இது தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். கடந்த இரண்டாண்டு காலமாக நான் எனது கட்சி செயற்பாடுகளை ஒதுக்கி விட்டு ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்று செயற்பட்டு வருகின்றேன்.
அண்மையில் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது என்று எனக்கு தெரியாது. எனவே சிலர் சில குறிக்கோளை வைத்து அரசியல் செய்யமுடியாது. இன்று எமக்கு அரசியல் அல்ல ஜீவாதார பிரச்சனையே உள்ளது. யாழ்ப்பாணத்திலும் ஒரு நிகழ்வு இடம்பெற்றது. அதுவும் எனக்கு தெரியாது. நான் நூற்றுக்கு நூறு வீதம் வேறு எந்த தொழிலிலும் ஈடுபடாது 50 ஆண்டுகால அரசியலில் இருக்கின்றேன்.
அதனால் என்ன என்ன நடக்கின்றது. என்ன என்ன நடக்கபோகின்றது என்பதை அறிந்தவன். இன்று உங்களை உற்சாகமூட்டுவதால் மாலை உங்கள் வீடுகளுக்கு இராணுவம் வரலாம். ஏனெனில் இங்கு சிலர் மிக வேகமாக கோசம் எழுப்பினார்கள். அந்த வீரம் இந்த இடத்திலே நிற்கப்போவதில்லை. அதற்கு சோதனை வரப்போகின்றது.
அது இன்று மாலையோ, இரவோ அல்லது நாளையோ ஆக இருக்கலாம். அன்றில் இருந்து இதுதான் நடக்கின்றது. நான் எத்தனையோ இளைஞர்களின் மரண வீடுகளுக்கு சென்றிருக்கின்றேன். அவ்வாறானவர்கள் சிறிய குற்றம் செய்தவர்கள். உண்மையில் பெரிய குற்றம் செய்தவர்கள் தப்பி விடுவார்கள். மக்களை தூண்டிவிட்டு இப்படி சொல் அப்படி சொல் என்று கூறி முன்னின்று நடத்தியவர்கள் மறைந்து விடுவார்கள்.
இவ்விடத்தில் கைதட்டல் பெறுவது அல்ல சிறப்பு. நான் இவ்விடத்தில் நீங்கள் தொடர்ந்து கை தட்டிக்கொண்டிருக்கும் அளவிற்கு பேச முடியும். ஆனால் கைதட்டலுக்காக பேசுபவன் அல்ல நான். எங்களுக்கு பிரச்சனை இருக்கின்றது. நாம் அழிந்து கொண்டிருக்கின்றோம். தினம் தினம் நாம் அடிமைப்பட்டுகொண்டிருக்கின்றோம்.
இன்று அரசாங்கம் 2500 பேருக்க வேலை கொடுத்துள்ளது. 18,000 ரூபா சம்பளம் யார்தான் விடுவான். 100 பிள்ளைகளை இராணுவத்தில் சேர்த்து இன்று 15 பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செய்யவேண்டிய போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் அங்கே இருக்கின்றது. அவ்வாறான நிலைகளுக்குதான் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்.
இன்று சிவசக்தி ஆனந்தனின் தலைமையில் நாம் கூடவில்லை. எமது இனத்திற்காக இடம்பெறும் இந்த போராட்டங்களில் கலந்துகொள்ளும் தலைவர்களில் அவர் ஒரு தலைவரே தவிர அவரது தலைமையில் இங்க கூடவில்லை. வேறு எவரது தலைமையிலும் கூடவில்லை. தலைமைப்பதவிகள் எல்லாம் போய்விட்டது. தலைவர்களாக இருந்தவர்கள் எல்லாம் மண் கவ்வி விட்டார்கள். இன்றைக்கு நாம் எல்லோரும் தலைவர்களாக உள்ளோம். எல்லாரும் மன்னர்கள் என்பதுபோல். எமக்கும் பொறுப்புகள் இருக்கின்றது.
இந்த போராட்டம் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்றது, படம் பிடித்தார்கள், பேசவிட்டார்கள், படம் பத்திரிகையில் வந்துவிட்டது. இது அல்ல போராட்டம். நான் கோட்பது எமக்குள்ள பிரச்சனை என்ன என்பதை நாம் இருந்து பேச வேண்டும். அத்தியாவசிய பிரச்சனைகள் தொடர்பில். கே.பி. என்பவரை அரசாங்கம் கொண்டு வந்து போட்டுள்ளது. யார் இந்த கே.பி.யாராவது கேள்வி கேட்டார்களா?. அரசாங்கத்தின் எடுபிடிகளாக பலர் இருக்கின்றார்கள் அவர்களே ஜென்ம விரோதிகள்' என்றார்.
கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா உரையாற்றுகையில்,
'இந்த அரசாங்கம் மிக மோசமான செயற்பாட்டை நிகழ்த்தி வருகின்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது அதுவும் தமது உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியவர்களை கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்பியுள்ளது. அவர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவதற்கு ஆயுதமா ஏந்தினார்கள்.
எதற்காக அப்பாவி மாணவர்கள் மீது புலி சாயம் பூசப்படுகின்றது. எமது மாணவர்கள் கற்றது குற்றமா? கற்றதனால் முன்னேறியது குற்றமா? முன்னாள் போராளிகளுக்கும் புனர்வாழ்வு, கல்வி கற்கும் மாணவர்களுக்கும் புனர்வாழ்வு. என்ன சொல்கின்றது இந்த அரசு.
இதேவேளை எமக்குள் உள்ள பொது பிரச்சினைகளை சந்தியில் வைத்து பேச வேண்டிய தேவையில்லை. ஜனநாயக மக்கள் முன்னணியினராகிய நாம் இன்று வடக்கு கிழக்கில் இடம்பெறும் எமது மக்களுக்கான பிரச்சனைகளுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுக்கின்றோம் என்றால் அது ஓரணியில் நாம் நிற்பதனால் தான்.
ஒவ்வொரு கட்சிக்கும் தனித்துவம் இருக்கும் அதனை இழக்கமுடியாது. எமது பிரச்சனைகளை மூடிய அறையில் இருந்து பேசி முடிவெடுப்போம். பொது இடத்தில் அவற்றை பேசி எம்மை நாமே தரம் குறைக்கும் செயற்பாடுகளை விடுத்து ஓரணியாக எமது போராட்டங்களை முன்னெடுப்போம்' என தெரிவித்தார்.
'இலங்கை அரசை ஆளுகின்றவர்கள் தொடர்ச்சியாக எமது இனத்தை நசுக்குகின்றவர்களாகவே காணப்படுகின்றனர்.-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி
Reviewed by NEWMANNAR
on
December 15, 2012
Rating:
No comments:
Post a Comment