அண்மைய செய்திகள்

recent
-

பெண்கள் தங்களது பாதையினை தாங்களே உருவாக்கவேண்டும்....வினோதினி என்ற புனைபெயரில் எழுதிவரும் கவிதாயினி தி.சர்மிலா

 சர்வதேச மகளிர் தின சிறப்பு சந்திப்பாக புவியில் சிறப்பு பட்டதாரியும் மாவட்ட செயலக காணிப்பயன்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தரும் தேசிய ரீதியில் பரிசு பெற்றவருமாகிய வினோதினி என்னும் பெயரில் எழுதிவரும் கவிதாயினி சர்மிலா அவர்களின் அகத்திலிருந்து…..

தங்களைப்பற்றி----
கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பிரதேசத்தில் உள்ள வேரவில்லை கிராமத்தினை பிறப்பிடமாகவும் மன்னார் மண்ணே வாழிடமும் ஆகும்  எனது தந்தை திருநாவுக்கரசு தாயார் திருமதி செல்வரதி உறவுகளுடனும் கலையுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றேன்.

கல்விக்காலம் பற்றி----


எங்களின் கல்விக்காலம் சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது. வடக்கின் பல பாடசாலைகளில் கல்வி பயின்றேன். எனது ஆரம்பக்கல்வியை வேரவில் இந்து மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக்கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரி மற்றும் இலுப்பைக்கடவை மகாவித்தியாலயம் ஆகியவற்றிலும் உயர் தரத்தினை  மன்னார் சித்திவினாயகர் இந்துக்கல்லூரியிலும் கற்று பட்டப்படிப்பினை புவியற்துறையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தேன்.

தவிர காலத்தின் தேவைக்கேற்ப இடர்முகாமைத்துவம், சமூக உளவியலும் ஆற்றுப்படுத்தலும் மற்றும் ஊடகக்கற்கைகளும் அறிவுப்புத்துறைசார் நுட்பங்களும் ஆகியவற்றில் பட்டய நெறிக்கற்கைகளையும் நிறைவுசெய்துள்ளேன். தற்போது காட்டியலும் சுற்றுச்சூழல் முகாமைத்துவமும் துறையில் முது விஞ்ஞானமானி கற்கை நெறியினை ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் தொடர்ந்துவருகிறேன்.

கல்விக்கு கரையில்லை தானே. கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். கற்றுக்கொண்டே இறக்கவேண்டும்.

 கவிதை துறைக்கு வருகை பற்றி….
நான் கல்விகற்கும் காலத்திலே மேடைப்பேச்சு இசை கவிதை பாடலாக்கம் நாடகம் பேச்சு போட்டி போன்றவற்றில் ஆர்வமாக கலந்து கொள்வேன்  எனக்கு இயல்பாகவே கவிதையாற்றல்  உள்ளதாய் உணர்கின்றேன்.கவிதை மட்டுமன்றி சிறுகதையாக்கம், பாடலாக்கம், நாடகம், நிகழ்ச்சித்தொகுப்பு இப்படி கலைப்பாதையில் எப்பொழுதுமே எனக்கு அதீத மயக்கமுண்டு. கல்வி கற்கும் காலத்தில் இவற்றிலெல்லாம் ஆர்வமாக கலந்து கொள்வேன்.
  
உங்களது முதல் கவிதை என்றால்….
எனது முதல் கவிதை என்றால் நான் அப்பப்போது இயற்கை அழகையும் சில சமூகவிடையங்களையும் இரசித்து சிறு சிறு கவிதைகள் எழுதி வைப்பேன் அவ்வாறு நான் எழுதிய கவிதை ஒன்று
நம்பிக்கை நூல்
வெற்று மரத்தின் கீழ்
வேற்றுக்கிரக வாசிகளாய்
இன்னும்
ஏத்தனை நாட்களுக்கு…..


நமது பயணம் இந்த கவிதை நான் உயர்தரம் கற்கும் போது 11-2008 எழுதினேன் பின்பு எனது இராப்பாடிகளின் நாட்குறிப்பு கவிதை நூலில் 83 பக்கத்தில் முழுமையாக பார்க்கலாம். எனது முதலாவது கட்டுரை அக்கினிக்குஞ்சு பாடசாலை சஞ்சிகையில் வெளியானது. அதன் பின் தொடர்ச்சியாக எழுதி வருகின்றேன்.
நூலுருவாக்கம் எண்ணம் பற்றி 
நூலுருவாக்கம் என்பது பாரிய பணி அதனை சீர்பட செய்தல் வேண்டும். ஆரம்பத்தில் என்னுடைய கவிதைகளை நூலுருவாக்கும் எண்ணம் இருக்கவில்லை. அவ்வப்போது எழுதியவைகளை கணணியில் சேமித்து வைப்பேன். இந்நிலையில் மன்னார் தமிழ்ச்சங்கத்தின் அறிமுகமும் மகா தர்மகுமார குருக்கள், மன்னார் அமுதன், எஸ் ஏ உதயன், பார்கவி போன்றவர்களது ஆலோசனைகளும் ஊக்கமுமே நூலுருவாக்க சிந்தனையை தூண்டியது. குடும்பத்தினர் மற்றும் நல் நட்புக்களின் ஆதரவுடன்  இச்சிந்தனை வளர்ந்து இராப்பாடிகளின் நாட்குறிப்பாக மலர்ந்தது. மன்னார் தமிழ்சங்கத்தால் வெயியிடப்பட்ட இந்நூலில் இருந்து சில கவிதைகளை மன்னா பத்திரிகையில் வெளியிட்டு மன்னார் தமிழ்ச்சங்க நிறுவுனர் தமிழ்நேசன் அடிகளார் ஊக்கம் தந்தார். 
இப்படியாக பல நல் உள்ளங்களின் நற்சிந்தையினால் எனக்கும் நூலுருவாக்க எண்ணம் மனத்தில் பதிந்தது. அந்தவகையில் மன்னார் தமிழ்ச்சங்கத்தின் பணி அளப்பரியது. 

அடுத்த படைப்பு எதுவாக இருக்கும் 
அதுவும் கவிதைத்தொகுப்பாகத்தான் இருக்கும். காதல்,  வீரம், பெண்ணியம், சமூகம், இயற்கை சார்ந்த கலவையான கவிதைகளை தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பிப் படிக்கக்கூடிய நூலாக இருக்கவேண்டும்  என எதிர்பார்க்கிறேன்.

உயர் கல்வியும் பல்கலைக்கழகமும் பற்றி 
எங்களது பல்கலைக்கழக கல்விக்காலம் பற்றி கட்டாயம் சொல்லித்தான் ஆகவேண்டும். எதையுமே இலகுவாக பெற்று வளர்ந்தவர்களல்ல நாங்கள். பல போராட்டங்கள், சவால்கள் நிறைந்ததது எங்களின் கல்விக்காலம். எங்களது காலத்தில் கற்ற அனைவருக்குமே அது தெரியும். இரண்டு மணிநேரத்தில் அடைந்துவிடக்கூடிய யாழ்ப்பாணத்திற்கு திருகோணமலை சென்று பல நாட்கள் காத்திருந்து பல மணித்தியால கப்பற் பயணங்களை கடந்துசென்று அப்போதிருந்த சூழ்நிலையில் பல துன்பங்களையும், மன உளைச்சல்களையும், உறவிழப்புக்களையும் கடந்தே எங்கள் பட்டக்கல்வியை நிறைவு செய்தோம். அதன் பெறுமதி எல்லையற்றது. அப்போதிருந்த சூழலில் எங்களுக்கு கற்பித்து, வழிகாட்டி அனுப்பிய பேராசிரியர்களையும் யாழ் பல்கலைக்கழகத்தினையும் நன்றியோடு நினைவிற்கொள்கிறேன். 

பெண்களின் கல்வி வளர்ச்சி அன்று பெரிதாக இல்லை இன்று நல் வளர்ச்சி கண்டுள்ளது. அதுபற்றி 
முன்னைய காலங்களை விட இன்று சமூகத்தில் பெண்கள் தற்துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் முன்னேறிச்செல்கின்றார்கள். இது ஆரோக்கியமான விடயமே. இதற்கு மிக முக்கிய காரணம் அவர்களது கல்வி வளர்சியாகும். ஒரு பெண் கல்வியில் தன்னை முன்னேற்றுகின்றபோது அவளது சுயம் மட்டுமன்றி அப்பெண்சார்ந்த குடும்பம் மற்றும் சமூகமே முன்னேற்றப்பாதையில் பயணிக்க தொடங்குகிறது. இன்று அவ்வாறான ஒரு நிலமையை எமது சமூகத்தில் நாம் காணலாம். பெண் கல்வி பற்றிய தனிமனித, சமூக விழிப்புணர்வே இம்மாற்றத்திற்கான முக்கிய படிக்கல்லாகும்.

உங்களை மிகவும் கவர்ந்த கவிஞர் பற்றி---
பாடலாசிரியர் தாமரை அவர்களை பிடிக்கும் நல்ல தமிழில் பழைய தமிழ்சொற்களை புதிய முறையில் எளிதாக தருகின்றார் அதுபோல குட்டிரேவதி சுகிர்தா ராணி மனுஷி இவர்களோடு இன்னும் பலர் உள்ளார்கள் மன்னாரிலும் பலர் உள்ளார்கள் மூத்த கலைஞர் S.A.உதயன் அண்ணாவைபிடிக்கும் அவரது நாவல் அருமையானது.

கவிதாயினிகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றி---
தகுதிகள் என்று சொல்வதைவிட அவரவர்களின் தனித்திறமையும் இருக்கும் 16வயது பெண் தனது சூழலில் தனது எண்ண ஆற்றலிலும் அதேபோல் வயதுக்கேற்ப எண்ணமும் சிந்தனையும் கற்பனையும் மாறுபடும் ஆற்றல் வெளிப்படும் அவை மாறுபட்ட ஆற்றலாக தகுதியாக இருக்கும.;

சமகாலத்தில் பெண்ணடிமை பெண்கொடுமைகள் பற்றி---

பெண்ணடிமை பெண்கொடுமை பற்றி பேசிக்கொண்டு இருப்பதில் ஒருபோதும் பயனில்லை பெண்கள் தங்களது பாதையினை தாங்களே உருவாக்கவேண்டும் அதற்கு பெண்கள் தங்களின் கல்வியறிவினை மேம்படுத்த வேண்டும் தொழில் வாய்ப்பினையும் அப்போது ஆளுமைவிருத்தியடையும் இவ்வாறான தருணத்தில் சுயமாக பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் முறையான கல்வியாற்றலால் என்பது எனது உறுதியான கருத்து.

எழுத்துலகில் இவரைப்போல் வரவேண்டும் என்று எண்ணியதுண்டா….
அப்படி இதுவரை நான் எண்ணவில்லை கையில் உள்ள 05விரல்களும் ஓரேமாதிரி இல்லை தானே அதே போல் அவரவர்களுக்கு தனிச்சிறப்புக்கள் இருக்கும் சிந்தனையும் செயலும் அமையும் என்னைப்பொறுத்தவரையில்  கவிதையும் சிறுகதையினையும் நான் ஒரு ஆவணமாகவே ஆக்கிக்கொள்ளவிரும்புகின்றேன் அதற்காகவே எழுதிவருகின்றேன்.

சமூக அநிதீகளை கண்டு ஊடகவியலாளன் செய்தி ஆக்குவார்கள் எழுத்தாளர்கள் தமது கவிதையிலோ சிறுகதையிலோ நாவலிலோ வெளிப்படுத்துவார்கள் அவை பற்றி----
ஆம் உண்மைதான் தீபச்செல்வன் கவிஞர் ஒரு நேர்காணலில் சொன்னார் சமூகத்தில் ஏற்படும் தாக்கங்கள் அழுத்தங்கள் மனதினைப்பாதிக்கும் பொழுது அது எழுத்தில் வெளிப்படும் அது உண்மைதான் இயல்பாகவே ஈழத்தில் உள்ளவர்களின்  படைப்புக்களில் யுத்தம் தமிழ்மக்களின் பிரச்சினை எனபன பிறதாக்கத்தினால் வெளிவரும். நீங்கள் சொன்னது போல எனது கவிதைகளிலும் வெளிவந்துள்ளது எழுத்தாளர்களின் ஆயுதம் எழுத்துதான்.

மன்னாரில் உள்ள கலைஞர்கள் கௌரவிக்கப்படுவதில்லை ஊக்குவிக்கப்படுவதில்லை என்பது பற்றி----
இலை மறைகாயக இருப்பவர்கள் என்பதை விட கலைஞர்கள் கவிஞர்கள் திறமையுள்ளவர்கள் தங்களுக்கான இடத்தினை தாங்களே உருவாக்க வேண்டும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். எனது இலக்கினை நான்தானே தீர்மானிக்க வேண்டும் அதற்கான முதற்படியினை நான்தானே எடுத்து வைக்கவேண்டும் எடுத்தவுடன் பறக்க முடியாது முதலில் தவழ்ந்து நடந்து பின்பு ஓடி அதன் பின்புதானே பறக்கலாம்.எங்களின் திறமையயை நாம் தான் இணங்கண்டு வெளிக்கொணரந்து முன்னேற வேண்டும் எதுவுமே செய்யாமல் இருந்து விட்டு பிறரை குறைசொல்வதில் பயணில்லைதானே…

தங்களின் படிப்பினையில் இருந்து இளைஞர்யுவதிகளுக்கு கருத்து…..
எனது படிப்பினையில் இருந்து படிப்பவர்கள் விளையாட்டில் உள்ளவர்கள் இப்படியாக எந்ததுறையாக இருந்தாலும் எந்தத்துறையில் நாம் இருக்கின்றோமோ… அந்த துறையில் முன்னேறுவதற்கான வழிமுறைகளை கையாளவேண்டும் நமக்கான பாதையை உருவாக்கவேண்டும் வெற்றிபெறவேண்டும்.

உங்களுடைய வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் என்றால்--
ஆம் உள்ளது  நான் எனது 06வயதில் கிளிநொச்சியில் கல்வி கற்கும் போது  பேச்சுப்போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இருக்கின்றேன் என்னை அழைக்கின்றார்கள் பயத்துடன் மேடையில்  ஏறிவிட்டேன் நிமிர்ந்து பார்க்கின்றேன் நிறையப்பேர் இருக்கின்றார்கள் பதற்றம் இவ்வளவு பேருக்கு முன்னாள் சொல்வதா…. ஒருவாறாக பேச்சுப்போட்டியினை முடித்துவிட்டு இறங்கி வருகின்றேன். நிகழ்ச்சியினை ஒழுங்கு செய்திருந்த ஆசிரியர் என்னை தூக்கி தலைக்கு மேல் உயர்த்துகின்றார் காதைப்பிளக்கும் அளவுக்கு கரவொலிகள் அன்றைய நாள் இன்னும் எனது மனதில் அப்படியே பதிந்துள்ளது இப்போது மேடையேறி நிகழ்ச்சிகளை செய்யும் போது அதை நான் இப்பவும் உணர்கின்றேன்.  
  
சமூகத்திற்கு சொல்ல விரும்பும் கருத்து பற்றி—
கண்ணுக்கு முன் நடக்கின்ற சின்ன சின்ன தவறுகளை பிரச்சினைகளை கண்டும் காணமல் நமக்கென்ன என்று போய்விடுகின்றோம் அதுவே பெரும் பிரச்சினையாகி விடும்  அப்படியில்லாமல் இந்த உலகில் இயற்கையோடு இணைந்து வாழப்பழகிக்கொள்ள வேண்டும் இயற்கையை அனுபவிக்கவேண்டும் நம்மை சுற்றியுள்ள பிரச்சினைகளுக்கு இயல்பாக தீர்வுகாண வேண்டும் அனுபவரீதியாக கண்டுணரவேண்டும் அன்பாக வாழப்பழகவேண்டும்.

உங்களின் இலக்கு பற்றி---
இன்னும் நிறையக்கற்க வேண்டும் கல்விக்கு கரையில்லை தானே நிறைய நூல்களை வாசிக்கவேண்டும் எழுத்துப்புலமை பெறவேண்டும்.


அன்று மரபுக்கவிதை இன்று புதுக்கவிதை இரண்டிணையும் பற்றி----
கவிதையானது தமிழிழ் பாரம்பரியமாகவுள்ளது அன்று எழுதியதுபோல் இன்னும் மரபுக்கவிதை எழுதிக்கொணடு இருந்தால் தற்போது உள்ள சூழலில் இயல்புக்கு ஏற்றால் போல் புதுக்கவிதைக்கு மாறாவிட்டால் எதுவும் தாக்குபிடிக்கமுடியாது
சாதாரண பாமரன்புரியும் படி அமைவது புதுக்கவிதை
படித்தவர்களுக்கும் புலமைவாதிகளுக்கும் புரியும் படி அமைவதுதான் மரபுக்கவிதை.
புதுக்கவிதை எழுதுபவர்கள் மரபுக்கவிதை எழுத மாட்டார்கள் என்றில்லை
மரபுக்கவிதை எழுதுபவர்கள் புதுக்கவிதை எழுத மாட்டார்கள் என்றில்லை

பாரதியார் சொன்னது போல சொல் புதிது சுவை புதிது…. காலத்தின் தேவையாக இருப்பது நிலைக்கும்.

புதிய சிந்தனைகள் முயற்சிகள் ஏதும் பற்றி---
புலம்பெயர்நாடுகளில் உள்ள எமது உறவுகளின் பிள்ளைகள் அங்கு தமிழ்கற்றுக்கொள்வதற்கு பெரும் சிரமப்படுகின்றார்கள் அவ்வாறான பிள்ளைகளுக்காக சிறுவர் கதைகள் பாட்டுக்கள் துணுக்குகள் போன்றவற்றினையும் எமது பழக்கவழக்கம்  சமய விடையங்கள் கலைகலாச்சாரத்தினையும் கொண்டதாக நூல்களினை வெளியிட்டு இங்கும் அங்கும் வெளியிட எண்ணம் உள்ளது அதுவும் பொருளாதாரம் பலரின் உதவியுடன் தான் செயலாற்ற முடியும் சாத்தியமானால் வெற்றிதான்.

தாங்கள் பெற்ற பரிசுகள்
  • உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசாரஅலுவல்கள் திணைக்களம் - தேசிய இலக்கிய போட்டிகள் 2017-2018 - சிறுகதையாக்கம் மூன்றாம் தேசிய பரிசு
  •  
  • மாவட்ட இலக்கிய விழா -2017 மன்னார் மாவட்டம் - சிறுகதை மற்றும் பாடலாக்கம் முதலாம் இரண்டாம் பரிசுகள்
  •  
  • பிரதேச இலக்கிய விழா -2017 மன்னார் நகர பிரதேச செயலகம் சிறுகதை பாடலாக்கம் முதலாம் பரிசு மற்றும் சிறுவர் கதையாக்கம் - இரண்டாம் பரிசு.
  •  
  • உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு – அரசஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டி சிறுகதை மற்றும் பாடலாக்கம் -சாதாரண தேசிய பரிசு
  •  
  • உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு – அரசஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டி 201சிறுகதை மற்றும் கவிதையாக்கம் - சாதாரண தேசிய பரிசு
  •  
  • உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு – அரசஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டி சிறுகதை மற்றும் கவிதையாக்கம் - மூன்றாம் மற்றும் சாதாரண தேசிய பரிசு
  •  வருடாந்த உள்ளக கலாச்சார போட்டிகள் கலைப்பீடம் யாழ் பல்கலைக்கழகம் -தமிழ் நாடகம்-கட்டுரையாக்கம்மற்றும் இசையாற்றுகை முதலாம் மற்றும் இரண்டாம் பரிசுகள்
  • இந்துசமய விவகார அலுவல்கள் அமைச்சு இரண்டாவது உலக இந்து மகாநாடு 2003 - மாவட்ட மட்ட பேச்சுப்போட்டி முதலாம் பரிசு
  •  


தங்களின்சிறுகதை மற்றும் கவிதை ஆக்கங்கள் வெளிவந்துள்ள
நூல்கள் சஞ்சிகைகள் மற்றும் இணையத்தளங்கள்


  • அக்கினிக்குஞ்சு சஞ்சிகை
  • பொக்கிசம் நூற் திரட்டு
  • பிரதேச மற்றும் தேசிய இலக்கிய மலர்கள்
  • ஆயிரம் கவிஞர்கள் பெருநூல் 
  • குடதிசை முழக்கம்
  • மன்னா பத்திரிகை
  •  இனிய நந்தவனம் சஞ்சிகை – தமிழ்நாடு
  • தழிழ் நெஞ்சம் - இணைய இதழ் பிரான்ஸ்
  • மனம் இணைய இதழ் - தழிழ்நாடு
  •  யாவரும் இணையம்
  • குளோபல் தமிழ் செய்திகள் இணையம்
  • ஊடறு இணையம்
உலக மகளிர் தினம் பற்றி---
பெண்கள் முதலில் விழிப்புணர்வு பெறவேண்டும் எப்போதும் பெண் தனக்கான பாதையினை சுயமுன்னேற்றத்துடன் தன்னம்பிக்கையுடன் தொடங்குவாளானால் ஒவ்வொருநாளும் மகளிர் தினம் தான் மகத்தான நாள் தான்….

மன்னார் மக்களின் பிரதிநிதியாக இருக்கும் நியூமன்னார் இணையம் பற்றி----
நியூ மன்னார் இணையத்திணை தொடர்ச்சியாக பார்த்து வருகின்றேன்  மன்னாரின் எந்தவொரு நிகழ்வானாலும் அது செய்தியாகட்டும் கலைகலாச்சார நிகழ்வுகளாகட்டும் உடனுக்குடன் வெளிப்படுத்துவதில் சிறப்பான சேவையினை ஆற்றிவருகின்றது.
எனது முதலாவது நேர்காணல் இதுதான் அத்தோடு மன்னாரின் வெளிச்சம் இந்த நியூமன்னார் இணையம் என்றால் அது மிகையல்ல….

சர்வதேச பெண்கள் தினத்தின் சிறப்பு நேர்காணல்
சந்திப்பு- வை-கஜேந்திரன்-











பெண்கள் தங்களது பாதையினை தாங்களே உருவாக்கவேண்டும்....வினோதினி என்ற புனைபெயரில் எழுதிவரும் கவிதாயினி தி.சர்மிலா Reviewed by Author on March 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.