அண்மைய செய்திகள்

recent
-

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணத்தை வெளியிட்ட த.தே. கூட்டமைப்பு -


2005ஆம் ஆண்டு தேர்தலை தமிழ் மக்கள் பகிஸ்கரித்ததன் காரணமாக தமிழ் மக்கள் பல்வேறு இழப்புகளை எதிர்கொண்டனர்.
அதன் காரணமாகவே மீண்டும் அதேநிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாமாங்கம் சிவபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மண்டபம் மற்றும் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

மத வழிபாட்டுத்தளங்களை புனரமைப்பு செய்யும் ஊரக எழுச்சி திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த மண்டபம் மற்றும் சுற்றுமதில் அமைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ரூபன் உட்பட ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வரவு செலவுத்திட்டத்திற்கு வாக்களிக்கும் போது எதிர்ப்பதா ஆதரவாக வாக்களிப்பதா என்ற நிலையொன்று ஏற்பட்டபோது கடந்த கால ஆட்சியாளர்களுக்கு சாதகமாக நடப்பதா? தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கி சில அபிவிருத்தி திட்டங்களையும் தொழில் வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்வதற்கு சிந்தித்தோம்.

இந்த நாட்டில் இரண்டு முக்கியமான தேசிய கட்சிகள் இருக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்ந்த மகிந்த அணியினர் மற்றையது ஐக்கிய தேசிய கட்சி
அணியினர். இந்த இரண்டு கட்சியினரையும் ஒப்பிட்டு பார்ப்பதன் மூலமே அடுத்த என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை தீர்மானிக்க முடியும்.
கடந்த காலத்தில் தமிழ் மக்கள் பல வழிகளிலும் துயரங்களை அனுபவித்தார்கள். கடத்தப்பட்டனர், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் கடந்தகால ஆட்சியில் அதிகளவில் இடம்பெற்றன.


இவ்வாறான கடத்தியவர்கள்,காணாமல்ஆக்கியவர்களுக்கு சாதகமான இந்த ஆட்சியை கவிழ்த்து அவர்களுக்கு ஆதரவு உதவிசெய்வதா? அல்லது தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கி தமிழ் மக்களுக்கு ஏதாவது பெற்றுக்கொடுப்பதா என்ற கேள்வியே எங்களிடம் இருந்தது. இதனைவிட மூன்றாவது தெரிவு எங்களிடம் இருக்கவில்லை.
அதனடிப்படையிலேயே இந்த ஆட்சியில் ஒரு அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என்று பலமாக முயற்சிசெய்தோம். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம். பல குழுக்கள் அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டன.
இந்த அரசியல் தீர்வு முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கணிசமான பங்களிப்பு வழங்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கணிசமான பங்களிப்பினை வழங்கியிருந்தது.


ஆனால் இவற்றினையெல்லாம் குழப்பியடிக்கும் வகையில் மகிந்த ராஜபக்ஸ சார்ந்த அணியினரும் இறுதியில் ஜனாதிபதியும் கூட இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நடவடிக்கையில் பின்னடிப்பு செய்தார்.
இந்தநிலையில் அரசியல் தீர்வு விடயத்தில் எங்களுக்கு சார்பான விடயங்களை முன்னெடுத்தவர்கள் யார்? பின்னடைவுக்கு கொண்டு சென்றவர்கள் யார் என்ற அடிப்படையில் பார்க்கும் போது வரவு செலவு திட்டத்திற்கு சாதகமாவா, பாதகமாவா வாக்களிப்பது என்பது தொடர்பில் சிந்தித்தோம்.

கடந்த காலத்தில் அபிவிருத்தி என்ற வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கோடி ரூபா வழங்கப்பட்டது. அதனை வாகரை தொடக்கம் துறைநீலாவணை வரையில் பகிரவேண்டிய நிலையிருந்தது.

ஆனால் இந்த ஆட்சியில் அபிவிருத்திக்கான சில சாதகமான விடயங்கள் தரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கம்பிரலிய திட்டத்தின் ஊடாக 10கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது இந்த ஆண்டு 18கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.
கடந்த முறை லக்ஸ்மன் கிரியெல்லா வீதி அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது வீதி அபிவிருத்திக்காக ஏழரைக்கோடி ரூபாவினை ஒதுக்கியிருந்தார். கம்பிரலிய திட்டம் ஊடாக இன்னும் 12 கோடி ரூபா கிடைக்ககூடிய சாதத்தியம் இருக்கின்றது.
நாங்கள் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தால் அபிவிருத்தி தொடர்பான விடயங்களும் தொழில் வாய்ப்புகள் தொடர்பான விடயங்களும் முடக்கப்படும் நிலையேற்பட்டிருக்கும்.

கடந்த கால ஆட்சியாளர்களை இக்கால ஆட்சியாளர்களுடன் ஒப்பிட்டுபார்க்கும்போது சில முன்னேற்றகரமான செயற்பாடுகள் இருந்தது.அந்த அடிப்படையில்தான் நாங்கள் வரவு செலவு திட்டத்திற்கு வாக்களிக்கவேண்டிய நிலையிருந்தது.

கடந்த காலத்தில் மக்களின் கருத்துகள் அறியப்படாமல் அரசியல் சதி நாடகங்கள் எல்லாம் அரங்கேற்றப்பட்டன. அந்தவேளையில் மக்கள் எங்களுக் வழங்கிய ஆணையின் அடிப்படையில் நீதிமன்றம் சென்று இந்த நாட்டில் ஜனநாயகத்தினை ஏற்படுத்தினோம்.
கடந்த காலத்தில் பல ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டிருந்தனர், கடத்தப்பட்டிருந்தனர், காணாமல்ஆக்கப்பட்டனர்.

எங்களுக்கு அநீதி இழைத்தவர்கள்,அராஜகம் செய்தவர்களுக்கு சார்பாகவிருந்து அவர்களுடன் இணைந்து ஆட்சி கவிழ்ப்பினை செய்து மீண்டும் நாங்கள் ஏமாற்றப்படுவதற்கு நாங்கள் தயாராகயில்லை.

2005ஆம் ஆண்டு வடகிழக்கு மக்கள் வாக்களிக்காத காரணத்தினால் வெற்றிபெற்றவர்தான் மகிந்த ராஜபக்ஸ் வடகிழக்கு மக்கள் வாக்களித்திருந்தால் அவர் தோல்வியடைந்திருப்பார். நாங்கள் வாக்களிக்காத காரணத்தினால் வந்தவர் எங்களுக்கு பல விபரிதமான நிலைமைகளை ஏற்படுத்தினார்.
அவர்களுடன் இணைந்து வரவு செலவு திட்டத்தினை தோற்கடித்துவிட்டு 2005ஆம் ஆண்டு நாங்கள் செய்த தவறினை நோக்கி செல்வதற்கு நாங்கள் விரும்பவில்லை.


அதன் காரணமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைவரும் இணைந்து அபிவிருத்தி மற்றும் தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் இணைந்து வாக்களித்தோம்.
கடந்த காலத்தில் அழிக்கப்பட்ட மக்களின் சார்பாக பேசுகின்றேன், ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக பேசுகின்றேன்,தமிழ் பேசும் மக்களுக்காக பேசுகின்றேன் என்று கூறிய குரல்கள் அழித்தவர்கள் பக்கமாக குரல் கொடுக்கும் வகையில் இருக்குமாயிருந்தால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது.
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணத்தை வெளியிட்ட த.தே. கூட்டமைப்பு - Reviewed by Author on April 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.