Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

21-04-2019 உயிர்த்தஞாயிறு அன்று நடந்த குண்டுவெடிப்பு அனர்த்தங்களின் மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன?


மதிப்பிற்குரிய ஆயர்களே,
வணக்கத்திற்குரிய பங்குத்தந்தையர்களே,
வணக்கத்திற்குரிய பௌத்த பிக்குக்களே,
வணக்கத்திற்குரிய இந்துக் குருக்களே,
வணக்கத்திற்குரிய மௌலவிகளே,
வணக்கத்திற்குரிய கிறிஸ்தவ போதகர்களே,
மதிப்பிற்குரிய மத பிரதிநிதிகளே,


21-04-2019 உயிர்த்தஞாயிறு அன்று நடந்த குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட அனர்த்தங்களின் மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன?

நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு அனர்த்தத்தின் போதும், முரண்பாட்டின் போதும் நிலைமாற்றுக்காலநீதியின் (Transitional Justice) கீழ் உண்மையைக் கண்டறிதல், வழக்குத்தாக்கல் செய்தல், நஷ்டஈடு வழங்கல் மற்றும் இவ் அனர்த்தங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய எனது கருத்துக்களை தங்களுடன் தயவுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
1.    கடந்த 21-04-2019 ஞாயிற்றுக்கிழமை மூன்று தேவாலயங்களிலும், மூன்று உல்லாச விடுதிகளிலும் நடந்த குண்டுவெடிப்பினால் 200ற்க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிக்கப்பட்டும், 400ற்க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், 1000திற்கு மேற்பட்டோர் உளநலம் பாதிக்கப்பட்டும் (Mental Trauma) உள்ளதாக பத்திரிக்கை வாயிலான செய்திகள் தெரிவிக்கின்றன.
2.    இச் சமயத்தில் வரும்முன் காப்போம் எனும் நவீன முறையின் கீழ் இழப்புக்களை எவ்வாறு குறைக்கலாம் என்பதனை சிந்தித்து செயற்படுவது எமது கடமையாகும்.

3.    மூன்று தேவாலயங்களிலும் உள்ள உள்வாயிற்கதவுகள் சுமார் 3 x 6 அடி அகலமாக காணப்பட்டிருந்தது. கோயிலுக்குள் 600 மேற்பட்ட பக்தர்கள் புடை சூழ்ந்திருந்தனர். தேவாலயத்தின் உள்கதவருகில் வழிபாட்டிற்கு பிந்திவந்த பக்தர்கள் பாதையை தடை செய்து நெருக்கமாக காணப்பட்டனர். நிகழ்ந்த அனர்த்தத்தின் போது உள்ளிருந்தவர்கள் வெளியேறுவதற்கும் உதவி புரிவதற்காக வெளியிருந்து உள்நோக்கி வருபவர்களுக்கும் இது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. பக்தர்களின் நெரிசலினால் இருபது நிமிடங்களின் பின்புதான் காயம் பட்டவர்கள் வெளியே தூக்கிவரப்பட்டனர். இவ் இருபது நிமிட இடைவெளியில் பலர் கடும் இரத்தப்போக்கு ஏற்பட்டு மரணித்துள்ளனர். இதனை எவ்வாறு குறைக்கலாம்? தேவாலயங்களின் கதவுகள் அனைத்தும் திறந்துவிடப்பட்டிருத்தல் வேண்டும். கதவு வழியை தடை செய்யாது பார்த்துக்கொள்ளல் வேண்டும். மேலும் உல்லாச விடுதிகளில் காணப்படுவது போல் அவசர தேவையின் போது வெளியேறும் வழிகள் (Emergency doors with arrorw marks) அமைக்கப்படுவதுடன், அவை மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

4.    சில சமயங்களில் தேவாலயங்களின் வெளிக்கதவுகள் பல இருந்தும் ஒன்று அல்லது இரண்டு கதவுகள் மட்டும் திறந்தும் மற்றவை பூட்டப்பட்டும் காணப்படும். இதனால் அவசர தேவையின் போது ஆம்புலன்ஸ் வண்டிகளோ, தீயணைக்கும் படையினரோ, நீர்த்தாங்கி பௌசர்களோஅல்லது உதவிபுரிய வரும் வாகனங்களோ தேவாலய வளவிற்குள் வருவதற்கு அதிக நேரம் தேவைப்படுகின்றது.

5.    குண்டுவெடிப்பின் போது கூரை ஓடுகள், கூரை மரங்கள் போன்றன தலையில் வீழ்ந்து கடும் இரத்தப்போக்கு ஏற்பட்டு பலர் மரணித்துள்ளனர். பலர் தண்ணீர்தண்ணீர் என கேட்டபடி உயிருக்கு போராடி பின் மரணித்துள்ளனர். தேவாலயங்களுக்கள் குடிநீர் வசதிகள் அமைக்கப்படுவது அவசியமாகும். தேவாலயத்தில் முதலுதவிப்பெட்டிகள், மருந்துகள் குறைந்த அளவாக காணப்பட்டது அல்லது முழுமையாக இருக்கவில்லை. ஒரு சில கன்னியாஸ்திரிகளை தவிர மற்றையவர்களுக்கு முதலுதவி அளிப்பதற்கு தெரிந்திருக்கவில்லை..எனவே மக்கள் கூடும் ஸ்தலங்களில் தேவையான அளவு முதலுதவிப்பெட்டிகள் மருந்துகளை சேமித்து வைக்கப்பட்டிருப்பின், பக்தர்களில் பல தொண்டர்களுக்கு (வழமையாக வரும் பக்தர்களுக்கு)முதலுதவி பயிற்சிகள் அளித்திருப்பின் பெறுமதிமிக்க உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.

6.    மக்கள் கூடும் இடங்களில் அவசர தேவையின் பொருட்டு தீயணைக்கும் கருவிகள் (Fire extinguish)முழுமையாக காணப்படவில்லை அல்லதுபோதியளவு இருக்கவில்லை. மேலும் தீயணைப்புக் கருவிகள் இருப்பினும் அவை ஆறு மாதத்திற்கு ஒரு தடவையாவது செயல்படுத்திப் பார்க்கப்படல் வேண்டும். பல மத வழிபாட்டு ஸ்தலங்களில்இக்கருவிகள் துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. தீயணைக்கும் போது நச்சுப்புகை வெளியேற்றத்தினை தடுப்பதற்காக நீர் மற்றும் மணல் என்பன வாளிகளில் சேமிக்கப்பட்டிருத்தல் அவசியமாகும். ஏனெனில் இவ் அனர்த்தத்தின் போது பலர் எரிகாயங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

7.    தொண்டர்களுக்கான அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகள் இலங்கையில் உள்ள முப்படையினரின் உதவியுடனும் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் உதவியுடனும் வருடத்தில் ஒரு தடவையாவது நடைபெறுவது அவசியமாகும். உதாரணமாக சுனாமியின் பின் வருடாந்தம் சுனாமி மக்கள்விழிப்புணர்வு பயிற்சிகள் நடைபெறுவது போன்று ( Tsunami Drill ) ஒத்திகைகள் நடைபெறுவது பயனுள்ள விடயமாகும்.

8.    அனர்த்தத்தின் பின் கடும் காயத்திற்கு உள்ளானவர்கள் 3௦ நிமிடங்களின் பின்னரே அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் மரணித்துள்ளனர்.  இருப்பினும் மூன்று தேவாலயங்களுக்கு அருகில் பல தனியார் வைத்தியசாலைகள் இருந்தும் ஏன் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. இலங்கை அரசாங்கம் இறந்தவர்களுக்கு தலாபத்து லட்சமும் காயமுற்றவர்களுக்கு மூன்று லட்சமும் வழங்குவதாக தற்போது அறிவித்துள்ளது. இருப்பினும் முன்பே அரசாங்கமும் தனியார் வைத்தியசாலை முகாமைத்துவமும் ஒரு உடன்படிக்கைக்கு வந்திருப்பின் நஷ்டஈட்டுத் தொகையில் ஒரு பகுதியை தனியார் வைத்தியசாலைகளுக்கு வழங்குவதன் மூலம் பெறுமதிமிக்க பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். சுகாதார அமைச்சரின் கனிவான கவனித்திற்கு இதனை சமர்ப்பிக்கிறேன்

9.    மேலும் மத ஸ்தலங்களின் நிர்வாகம் மரணித்தவர்களினதும் காயப்பட்டவர்களினதும் நஷ்டஈட்டுத் தொகையை உரியவர்களிடம் பெற்றுக்கொடுப்பதுடன், பெற்றோரை இழந்த சிறுவர்கள், கணவனை இழந்த மனைவியர், பிள்ளைகளை இழந்த முதியவர்கள் போன்றோர் நலனில் அக்கறை காட்டுவதுடன் குறைந்தது ஆறு மாதத்திற்காவது உளவியல் தாக்கம் ஏற்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த உளவியல் சிகிச்சைகளை, பயிற்சிகளை வழங்குவது அல்லது வழங்க செய்வது நிர்வாகத்தினரின் தலையாய கடமையாகும். ஊனமுற்றவர்களுக்கு போதிய நிவாரண உதவிகளை பெற்று கொடுத்தலும் அவசியமாகும்.

மேற்படி நேர்மறை காரணிகளை அறிந்துசகல சமயத்தலைவர்களும் இவற்றை கருத்தில் கொள்வதும் தமது பக்தர்களுக்காக செயலாற்றுவதும் மனிதநேய பணியாகும்.


திரு.சின்கிளயர் பீற்றர்-


21-04-2019 உயிர்த்தஞாயிறு அன்று நடந்த குண்டுவெடிப்பு அனர்த்தங்களின் மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன? Reviewed by Author on May 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.