அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் வேட்பாளர் மூலம் தமிழ் மக்கள் அடையப்போகும் பலாபலன் என்ன...

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தாலோ தமது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினாலோ தமிழ் மக்கள் விரும்பாத ஒருவர் இந்த நாட்டில் ஜனாதிபதியாக வரக்கூடிய சூழ்நிலை உருவாகும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில்   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தற்போது இலங்கையில் மீண்டுமொரு தேர்தல் களம் சூடுபிடித்திருக்கின்றது. பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தங்களது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களை அறிமுகம் செய்துகொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் மக்களை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தலானது தங்களுக்கு வேண்டாத தேர்தலாக கருதக்கூடிய நிலையில் இருக்கின்றது. தமிழ் மக்களின் போராட்டம் அரசியல் அபிலாஷைகள் போன்றவற்றிற்கு தீனிபோடக்கூடிய தேர்தலாகத்தான் நாங்கள் இதனை பார்க்கின்றோம்.
இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு சம்பந்தமாக பலரும் பல கருத்துகளை பகிர்ந்துகொண்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து ஒரு பொதுவான வேட்பாளர் வரவேண்டும் என்ற கருத்தும் தமிழ் மக்கள் இந்த தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கருத்தும் பரவலாக நிலவிவருகின்றது.
இந்த அடிப்படையில் நாங்கள் இந்த தேர்தலை நோக்குவோமானால் 2005ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்ததன் விளைவை தமிழ் மக்கள் அனுபவித்திருக்கின்றனர்.
அதே நேரத்தில் தமிழ் மக்கள் தங்களுக்கான தனியான ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தினால் அதன் மூலம் தமிழ் மக்கள் அடையப்போகும் பலாபலன் என்ன?
எங்களது இலக்கை நாங்கள் நிறைவேற்றப்போகின்றோமா என்ற கேள்விக் கணைகளுக்கு முன்னால் தங்களது எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் தமிழ் மக்கள் ஒரு இக்கட்டான நிலையில் நிற்பதாக நான் அறிகின்றேன்.

தங்களுக்கென ஒரு வேட்பாளரை நிறுத்தி கடந்த காலத்தில் பெற்ற வாக்ககளின் எண்ணிக்கையும் எமக்குத் தெரியும். 1982ஆம் ஆண்டு மறைந்த குமார் பொன்னம்பலம் அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் நின்று ஒரு இலட்சத்து எழுபத்து மூவாயிரம் வாக்குகள் பெற்றிருந்தார்.
2009ஆம் ஆண்டு எமது ஆயுதப் போராட்டம் மௌனித்ததன் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளராக என்.கே.சிவாஜிலிங்கம் போட்டியிட்டு பத்தாயிரம் வாக்குகளை தாண்டவில்லை.
இந்த நிலையில் தமிழ் மக்கள் தங்களது வாக்குகளை பயன்படுத்தி எமது கடந்தகால போராட்டத்திற்கு ஒரு தீர்வை பெற்றுக்கொள்ளப் போகின்றோமா அல்லது இந்த ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரின் வெற்றியிலும் எமக்கு பங்கில்லை என்று இந்த பிரதேசத்தில் வாழப்போகின்றோமா என்ற நிலையை உணரவேண்டும்.

என்னைப் பொறுத்தவரை பொதுவான ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தினாலோ அல்லது தேர்தலை பகிஷ்கரித்தாலோ எங்களுக்கு விருப்பமில்லாத ஒரு ஜனாதிபதி இந்த நாட்டிலே தெரிவாகுவதற்குரிய சூழ்நிலை உருவாகும். அதே நேரத்தில் வடக்கு கிழக்கை பொறுத்தமட்டில் தமிழ் மக்கள் ஓரளவிற்கு ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர்.
2015ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் தற்போதிருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைத்த வாக்குகள் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து விழாது என்றாலும் கோத்தபாயவிற்கு எதிராக வாக்களிக்கக்கூடிய மனோநிலையில் தான் பெரும்பாலான தமிழ் மக்கள் இருக்கின்றனர்.
அதேநேரத்தில் தமிழ் மக்கள் தங்களது வாக்குகளை சரியாக பயன்படுத்தத்தவறினால் தெரிவு செய்யப்படப்போகின்ற ஒரு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த வேட்பாளர் இந்த வெற்றியில் தமிழ் மக்களின் பங்கு எதுவுமில்லை என நினைத்து இந்த ஆட்சியை நடத்தினால் கூட ஆச்சரியப்படப்போவதில்லை.

அனைத்து விடயங்களையும் கருத்தில்கொண்டு அனைத்து வேட்பாளர்களினதும் நிலைப்பாட்டை அறிந்து வெல்லக்கூடிய வேட்பாளருடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அந்த வெற்றியில் பங்குகொள்ளக்கூடிய ராஜதந்திர நிலையை உருவாக்க வேண்டும்.
ஒரு பொதுவான வேட்பாளரை நாங்கள் நிறுத்தப்போகின்றோம் என பயமுறுத்தியாவது.... தற்போது 21 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்.
இந்த நிலையில் பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்தினால் இரண்டாவது வாக்கை நாங்கள் யாருக்கு பயன்படுத்தப்போகின்றோம். அல்லது தமிழ் வேட்பாளரை நிறுத்தி பிரசார காலகட்டத்தில் எந்த வேட்பாளருடன் நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை செய்து; தேர்தலிலிருந்து பின்வாங்கி அவருக்கு ஆதரவு அளிக்கப்போகின்றோமா அல்லது இரண்டாவது வாக்கை கொடுத்து அவரை வெற்றிபெறச் செய்து எமது இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வை பெற்று எமது மக்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக்கப்போகின்றோமா என்ற நிலைப்பாட்டிலே நாங்கள் முடிவெடுக்க வேண்டும்.

தமிழர்கள் அனைவரும் எமது மக்களின் சுபீட்சமான வாழ்விற்காக கட்சி பேதங்களை மறந்து ஒரு நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்.
தனிமனித சுயலாபம், கட்சி சுயலாபம், தங்களது கூட்டுக்கள் சம்பந்தமான சுயலாபங்களை எதிர்வரவிருக்கின்ற நாடாளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் நிரூபித்து தங்களது செல்வாக்கை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்லலாம். ஜனாதிபதி தேர்தலில் எமது இலக்கை அடைவதற்காக அனைவரும் ஒரு குடையின் கீழ் பயணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் வேட்பாளர் மூலம் தமிழ் மக்கள் அடையப்போகும் பலாபலன் என்ன... Reviewed by Author on October 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.