அண்மைய செய்திகள்

recent
-

சம்பந்தன் தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார் ; அவருடைய பார்வை வித்தியாசமானது.......

சம்பந்தன் என்னுடைய நண்பர். அவர் தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார். ஆனால் அவருடைய பார்வை வித்தியாசமாக இருந்தது. அதனை நான் முன்பே கண்டுகொள்ளவில்லை. பின்னர் தான் கண்டுகொண்டேன் என்று முன்னாள் வடமாகண முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று 03 நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்...

முன்னாள் வடமாகண முலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் மட்டக்களப்பு கொம்மாதுறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், வட கிழக்கு மாகாணத்தின் ஏகோபித்த தலைவர் என்ற வகையில் சம்பந்தன், கிழக்கு மாகாணத்தில் இருந்து வந்த ஒரு தலைவர் இவ்வாறானதொரு விடயம் நடைபெற இடம் கொடுத்துவிட்டார் என்பது மனதுக்கு பெரும் வேதனையாக உள்ளது.

சம்பந்தன் என்னுடைய நண்பர். அவர் தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார். ஆனால் அவருடைய பார்வை வித்தியாசமாக இருந்தது. அதனை நான் முன்பே கண்டுகொள்ளவில்லை. பின்னர் தான் கண்டுகொண்டேன்.

நான் 2013 ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தேன். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய நல்லாட்சி அரசாங்கம் வந்தது. அப்பொழுது பெப்ரவரி 3 ஆம் திகதி கொழும்பிலுள்ள என்னுடைய வீட்டிற்கு சம்பந்தன் அவர்களும் சுமந்திரனும் வந்தார்கள். கதைத்துவிட்டுச் செல்லும் போது தம்பி நாளைக்கு பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திரதின விழா. நான் அதிலே கலந்து கொள்கிறேன் நீங்களும் வருவீர்களா? என்று கேட்டார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் சொன்னேன். நான் வரவில்லை. நீங்கள் போவதாக இருந்தால் செல்லுங்கள் என்றேன். இல்லை இல்லை. நாங்கள் இந்தக் காலகட்டத்தில் அவர்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டிய ஒரு அவசியம் இருக்கின்றது. ஆகவே இந்தச் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்கிறோம் என்று.

நான் அவர்களுக்குச் சொன்னேன். 1958 ஆம் ஆண்டு கெடக் (சாரணர் ஆரம்ப நிலை) என்ற முறையிலே சுதந்திர தினவிழாவில் பங்குபற்றினேன்´ அதற்குப் பின்னர் எந்தக் காலத்திலும் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் பொது கூட நான் போகவில்லை. காரணம், எங்களுடைய சுதந்திரம் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று அன்றே சொன்னேன்.

இல்லை இல்லை. எங்களுக்கு இனி எல்லாம் கிடைக்கும். இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எல்லாம் கிடைக்கும் என்று சொன்னார். அவருடைய மனதில் நம்பிக்கை இருந்தது, நான் அவரைக் குறை கூறவில்லை. அவருடைய பார்வையைச் சொன்னேன். தம்பி சுமந்திரனை வருவீர்களா என்று கேட்டவுடன் அவர் சரி என்றார். இரண்டு பேரும் மறுநாள் சென்றார்கள். நான் போகவில்லை.

இதனை எதற்காகக் கூறுகின்றேன். அவர்களுடைய பார்வை சற்று வித்தியாசம். அவர்களுடன் சேர்ந்து பயணித்தால் சிங்களத் தலைவர்கள் நாங்கள் கேட்பதைக் கொடுப்பார்கள் என்ற ஒரு எண்ணம் அவர்களிடம் இருந்தது. அது ஒருபோதும் நடக்காது என்பது ஏற்கனவே நான் தெரிந்து கொண்டு வைத்திருந்த விடயம். ஏனென்றால் அவர்கள் கடந்த 100 வருடங்களாகத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வந்த விடயங்களை அவர்கள் எவ்வாறு நாங்கள் நன்றாகப் பேசி பல் இழித்ததுடன் விட்டுக் கொடுக்கப் போகின்றார்கள். கொடுக்க மாட்டார்கள்.

ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனுடைய பார்வையினால், நோக்கினால், அவர்கள் என்ன விதமாகப் பிரச்சினையை அணுகியிருக்கிறார்கள் என்ற வழியிலேயே சென்று இதுவரை காலமும், கடந்த 5 வருடங்களாக எங்களுடைய மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்திவிட்டார்கள். வருங்காலப் பிரச்சினைகளை மிகைப்படுத்தி விட்டார்கள்.....

எனவே, அவர்களுக்கு நீங்கள் வாக்களிப்பதால் எந்த வித நன்மையையும் கொண்டு வராது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட கட்சியை கடந்த 5 வருடங்களாக சுயநல அரசியலில் நுழைத்து விட்டார்கள்.

கிழக்கு மாகாணத்தில் அதிகாரத்தினையும் கைவிட்டு 11 பேர் இருக்கும் போது 7 பேர் இருந்த முஸ்லிம் காங்கிரஸூக்கு அதிகாரத்தினைக் கொடுத்து அவர்கள் என்ன செய்தார்கள். தங்களுக்குத் தனிப்பட்ட வகையில் நன்மைகளைப் பெற்றுக் கொண்டு, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிவதை செயற்படுவதை மறந்துவிட்டார்கள். தங்களுக்கு நன்மைகள் கிடைத்தது என்றவுடன் அவர்களுக்கு வாக்களித்த மக்களை மறந்துவிட்டார்கள். அதிகாரங்களைக் கொடுக்கும் போது. பரவாயில்லை. எங்களுக்குக் கிடைக்க வேண்டியவைகள் தான் கிடைக்கப்போகின்றன என்ற அந்த எண்ணத்தில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

ஆகவே, கடந்த 5 வருடங்களில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் நிலை மிகவும் மோசமாக மாறிவிட்டது. நாங்கள் அதற்குரிய நடவடிக்கைகளை அப்போதே எடுத்திருக்க வேண்டும். ஆனால் காலம் தாழ்த்தி விட்டோம் என தெரவித்துள்ளார்...


சம்பந்தன் தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார் ; அவருடைய பார்வை வித்தியாசமானது....... Reviewed by Author on July 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.