அண்மைய செய்திகள்

recent
-

வாகனங்களை பழுது பார்பதற்கு கோடிகணக்கில் செலவு செய்யும் மன்னார் நகரசபை மற்றும் மாவட்ட செயலகம்

கடந்த ஐந்து வருடங்களில் மன்னார் நகரசபையின் கீழ் காணப்படும் 12 வாகனங்களின் பழுபார்த்தலுக்காக 2கோடியே ஐந்து இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதோடு மன்னார் மாவட்ட செயலகத்தின் பயன்பாட்டில் உள்ள 16 வாகனங்களின் பழுதுபார்த்தலுக்காக ஒருகோடியே தொண்ணூறு இலட்சம் செலவிடப்பட்டுள்ளது' மன்னார் மாவட்டத்தில் உள்ள நகரசபையானது, மாவட்ட செயலகத்தினை விடவும் தனது எல்லைக்கு உட்பட்டதாக வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளையே கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், மாவட்ட செயலகத்தின் செலவீனங்களை விடவும், குறைந்த அளவிலேயே நகரசபையின் செலவீனங்கள் காணப்படும் என்பது பொதுப்படையான விடயமாகும். 

 ஆனால், இந்த இரு கட்டமைப்புக்களின் கீழ் பயன்பாட்டுக்காக காணப்படும் வாகனங்களின் திருத்தச் செலவுகளை உற்று நோக்குகின்றபோது யதார்த்ததிற்கு புறம்பானதொரு நிலைமை காணப்படுகின்றது. அவ்விதமான யதார்த்ததிற்கு புறம்பான நிலைமையானது ஓரிரு வருடங்கள் மட்டும் காணப்பட்டிருந்தால் பாரியளவில் கரிசனை கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால், தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக அவ்விதமான நிலைமை நீடிக்கின்றமையானது, பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் மன்னார் மாவட்ட செயலமும்(ஐந்து பிரதேச செயலகங்களும் உள்ளடங்களாக) , மன்னார் நகரசபையும் தமது கட்டமைப்புக்கு கீழாக உள்ள வாகனங்களுக்கான பழுபார்த்தல் செலவீனம் தொடர்பில் தகவல் அறியும் திருத்தச்சட்டத்தின் ஊடாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த யதார்த்தமற்ற நிலைமைகள் அம்பலமாகியுள்ளது. அதனடிப்படையில், மன்னார் மாவட்ட செயலக கட்டமைப்பின் கீழும் அதே நேரம் மன்னார் மாவட்ட செயலகத்தின் கீழ் பணியாற்றும் ஐந்து பிரதேச செயலகக்களையும் உள்ளடக்கி 16 வாகனங்கள் காணப்படுகின்றன. அவை, 2002 சதுரகிலோ மீற்றர் கொண்ட மன்னார் மாட்டம் முழுவதும் பயணங்களில் ஈடுபடுகின்றன. 

 அதேநேரம், மன்னார் நகர சபையானது 27.89 சதுரகிலோமீற்றர் கொண்டுள்ளது. இந்த வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் தான் மன்னார் நகரசபையின் கீழ் இருக்கும் 12 வாகனங்களும் பணிகளை ஆற்றுகின்றன. இவ்வாறான நிலையில் 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் வரையிலான காலப்பகுதியில் மன்னார் நகர சபையானது தன்னிடமுள்ள வாகனங்களுக்கான பழுதுபார்த்தல் செயற்பாடுகளுக்காக இரண்டு கோடியே ஐந்து இலட்சத்து நாற்பத்தொண்பதாயிரத்து ஐய்னூற்று ஏழு ரூபாவை செலவிட்டுள்ளது. அதேசமயம், மேற்படி காலப்பகுதியில் மன்னார் மாவட்ட செயலகமானது, தனது கட்டமைப்பின் கீழ் வாகனங்களுக்கான பழுதுபார்த்தல் செயற்பாடுகளுக்காக ஒரு கோடியே தொன்னூரு இலட்சத்தையே செலவிட்டுள்ளது. இதனைவிடவும், பழுபார்த்தலுக்கான செலவீனங்கள் மேற்கொள்ளப்பட்ட கடந்த ஐந்து வருட காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றுப்பரவலால் நாடு முழுமையாக முடங்கிய ஓராண்டும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

 அத்துடன், மன்னார் நகரசபையில் அதிகமான வேலைப்பளுக்கள் நிறைந்தவராக காணப்படும் தவிசாளர் பயன்படுத்தும் லாண்ட் குரோஸர் வாகனமானது இந்த ஐந்து ஆண்டுகளில் 49 தடவைகள் மாத்திரமே மாவட்ட எல்லையைத் தாண்டிப் பயணித்துள்ளது என்பதுடன் அதில் 6 தடவைகள் தவிசாளரின் சொந்த தேவைக்கான பயணமும் அவ்வாகணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது ஆனால், மாவட்ட செயலகத்தில் அதிகமான வேலைப்பளுக்கள் நிறைந்தவராக உள்ள மாவட்ட செயலளாரின் வாகனமானது குறிப்பிட்ட ஐந்து வருடத்தில் 100க்கு மேற்பட்ட தடவைகள் அரச சேவைக்கு என வெளிமாவட்டத்திற்குச் சென்றுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் நகரசபை தவிசாளரின் வாகனங்கள் கொள்வனவின் அடிப்படியில் ஒரே ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்களே அவ்வாறிருக்கையில், மன்னார் நகரசபைத் தவிசாளரின் வாகனத்திற்கு 41 இலட்சம் ரூபா பழுதுபார்த்தல் செலவீனமாக காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் நகரசபைத் தவிசாளரை விடவும், அதிகளவில் பயணங்களை மேற்கொண்ட மாவட்ட செயலாளரின் வாகனத்தின் செலவீனம் 2857212 ரூபாவாகவே உள்ளது. 

 மன்னார் நகர சபையில் மாவட்ட செயலகத்தினை விடவும் வாகன பழுது பார்த்தல் செலவீனம் அதிகரித்து காணப்படுவது தொடர்பில் நகரசபை தவிசாளர் ஞானபிரகாசம் அன்ரனி டேவிசனை தொடர்பு கொண்டு கேட்டபோது தன்னுடைய பராமரிப்பில் காணப்படும் லாண்ட்குரோஸர் வாகனம் ஜப்பான் நாட்டு உற்பத்தி என்பதனால் அவ்வாகனத்தின் உதிரிபாகங்களுக்கான திருத்த செலவீனம் அதிகமாக காணப்படுவதாகவும் குறித்த வாகனம் UNDPயினால் 6 வருடங்கள் பயன்படுத்தப்பட்டு மன்னார் நகரசபையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் நகரசபை இவ்வாகனத்தை 12 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்துவதாகவும் அதன் காரணமாகவே இவ்வாகனம் அதிக செலவீனத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார் அதே நேரம் மன்னார் நகர சபை வாகனத்தில் செலவை கருத்தில் கொண்டு 2018 ஆண்டு மூன்று புதிய வாகனங்களுக்கான கொள்வனவுக்கு செய்வதற்கு என நிதி ஒதுக்கப்பட்ட போதிலும் திறை சேரியினால் புதிய வாகனங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அதன் காரணமாகவே பழைய வாகனங்களை பயன்படுத்தவதால் பெரிய தொகை ஆண்டு தோறும் திருத்தத்திற்கு விரயமாவதாக பதிலளித்தார். 

 மாவட்ட அரசாங்க அதிபரின் வாகனமும் 15 வருடங்கள் பாவனையில் காணப்படுகின்ற போதும் ஜப்பான் நாட்டு உற்பத்தியாக காணப்படுகின்ற போதும் ஒப்பீட்டு ரீதியில் மாவட்ட செயலகத்தின் பாவனையைவிட நகரசபையின் பயன்பாடு குறைவாக காணப்படுகின்ற போது நகரசபை தவிசாளரின் வாகனத்திற்கான செலவீனம் மாத்திரம் சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமாக அதிகரித்து காணப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது அதேநேரம்,வாகன பயன்பாடு தொடர்பான தொழில்நுட்ப பகுதியில் இவ்விடயம் தொடர்பில் வினவியபோது நாட்டில் உள்ள உள்ளூர் ஆட்சி அமைப்புக்களின் கீழ் காணப்படும் பெரும்பாலான வாகனங்கள் அழிக்கப்பட வேண்டிய நிலையில் காணப்படுவதாகவும் அவற்றை அழிக்காது பயன்பாட்டில் வைத்திருப்பதன் காரணமாகவே இவ்வாறான வீண் விரய செலவுகள் இடம் பெறுவதாகவும் தெரிவிக்கின்றனர்

 மேலும் பயன்படுத்த முடியாமல் உள்ள வாகனங்களை திருத்த வேலைக்கு அனுமதிப்பதை தவிர்த்து அதற்கு பதிலாக வாகனங்களை வாடகைக்கு அமர்த்துவது பெரும்பாலும் செலவுகளை கட்டுப்படுத்தும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கும் அப்பால் இவ்விதமான செலவீனம் குறித்து மாவட்ட செயலகத்துடன் பணியாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் உள்ளூராட்சி கட்டமைப்புக்கள் மற்றும் அரச கட்டமைப்புக்களின் கீழ் காணப்படும் வாகனங்கள் GPS தொழில் நுட்பத்தின் ஊடாக இணைப்பதன் மூலம் சட்ட அனுமதி அற்ற பயனங்கள் வாகன பாவனைகள் மற்றும் வீண் வாகன செலவுகள் தவிர்கப்படும் எனவும் இதுவரை அரசாங்கத்தினால் மாவட்ட அனர்த்த முகாமைதுவ பிரிவு வாகனங்கள் மாத்திரமே GPS தொழில் நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

 இவ்வாறான நிலையில், தகவலறியும் சட்டத்தின் மூலம் மன்னார் நகரசபையின் வாகன பழுதுபார்த்தல் செலவீனமான ஐந்து வருடகால தகவல்களும் பெறப்பட்டுள்ளன. அதில், பாவனையில் உள்ள லாண்ட் குரோஸர் மற்றும் டபிள் கெப் ரக வாகனங்களின் பழுதுபார்த்தல் செயற்பாடுகளுக்காக மேற்படி ஐந்து வருடத்தில் நாற்பத்தொரு இலட்சத்து ஆயிரத்து மூன்று ரூபா நாற்பத்தேழு சதம் (4,101,003.47) செலவீனமாக காண்பிக்கப்பட்டுள்ளது. இந்தவாகனங்களை பெரும்பாலும் மன்னார் நகரசபை தவிசாளர் மற்றும் சில சமயங்களில் மாத்திரம் நகரசபை செயலாளர் ஆகியோர் பயன்படுத்தி வருகின்றனர். 

 மேலும் கடந்த ஐந்து வருடத்தில் நகரசபையின் கீழ் உள்ள ஏனைய வாகனங்களான ஜே.சி.பி.,ரோட் ரோலர், மேட்டார் வண்டிகள் ஆகியவற்றைப் பழுதுபார்ப்பதற்காக அறுபத்தைந்து லட்சத்து நாலாயிரத்து முன்னூற்று தொண்ணூற்று ஏழு ரூபாவும் தண்ணி வழங்கல் வாகனத்திற்காக பதினொரு இலட்சத்து ஏழாயிரத்து நானூற்று எழுபத்து நான்கு ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது மேலும் மன்னார் நகரசபையின் பயன்பாட்டில் உள்ள டிராக்டர் மற்றும் குப்பை கூழங்களைச் சேகரிப்பதற்கான டிராக்டர் வண்டிகளுக்கான பழுது பார்த்தல் செலவாக என்பத்தி எட்டு இலட்சத்தி முப்பத்தாராயிரத்து அறுநூற்று முப்பத்து மூன்று ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது ஒட்டு மொத்தமாக மன்னார் நகர சபையின் கீழ் காணப்படும் 12 வாகனங்களுக்கான பழுதுபார்த்தல் செலவீனமாக கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு கோடியே ஐந்து லட்சத்து நாற்பத்தொண்பதாயிரத்து ஐநூற்று ஏழு ரூபா (20,549,507) செலவு செய்யப்பட்டுள்ளது இவ்வாகனங்கள் அனைத்துக்கும், கடந்த 60 மாதங்களில் 10 மாதங்கள் மாத்திரமே எந்தவொரு பழுதுபார்த்தல் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை. என்பதோடு, ஏனைய 50 மாதங்களிலும் வாகன பழுதுபார்த்தல் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. அதிலும் வருடாந்தம் சராசரியாக, 6 இலட்சத்துக்கு குறையாத அளவிற்கு செலவீனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

 குறிப்பாக இவ்வாகனங்களின் 2017 ஆண்டுக்கான திருத்தங்களுக்குரிய செலவீனமாக 834,791 ரூபாவும் 2018 ஆண்டுக்கான திருத்தங்களுக்குரிய செலவீனமாக 910,821 ரூபாவும்2019 ஆம் ஆண்டுக்கான செலவீனம் 805,119.35 ரூபாவாகவும் 2020 ஆண்டுக்கான செலவீனம் 639,036 ரூபாவாகவும் 2021 ஆண்டுக்கான செலவீனம் 911,235.32 ரூபாவாகவும் கணக்குகாட்டப்பட்டுள்ளது இவ்வாறான நிலையில், இவ்விதமான செலவீனங்கள் மிக கூடிய செலவீனம் எனவும் மாவட்டத்திற்கு செலவு செய்ய வேண்டிய நிதி வீண் விரயம் செய்யப்பட்டுள்ளது எனவும் மன்னார் மாவட்ட மீனவர் சங்க சமாச செயலார் என்.எம் ஆலம் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் தற்போது தீவிரமடைவதற்கு இத்தகைய மிகைப்படுத்தப்பட்ட செலவீனங்களும் அடிப்படையாக அமைவதாகவும் எனி வரும் காலங்களில் ஆண்டு தோறும் இவ்வாறான செலவுகளை பொது வெளியில் நகரசபை மாத்திரம் இல்லாமல் ஒவ்வொரு அரச திணைக்களங்களும் மக்களுக்கு வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் . 

 மேலும் இவ் விடயம் தொடர்பாக பொறுப்பு கூற கடமைப்பட்டவர்களான மன்னார் நகரசபை உப தவிசாளரிடம் தொடர்புகொண்டு வினவிய போது தனக்கு இவ்விடயம் பற்றி தெரியாது என தெரிவித்திருந்தார் அதனை தொடர்ந்து ஆதார பூர்வமாக விடயத்தை தெரியபடுத்திய நிலையில் இவ்விடயம் தொடர்பாக நகரசபை அலுவலகத்தில் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார் இன்னும் சில நகரசபை உறுப்பினர்களிடம் இவ்விடயம் தொடர்பாக வினவிய போது நகரசபை தவிசாளருடன் முரண்பட தான் விரும்பவில்லை என ஒரு உறுப்பினரும் அதே நேரம் இவ்விடயைத்தை மன்னார் நகரசபை அமர்வில் கலந்தாலோசித்த பின்னரே கருத்து தெரிவிக்க முடியும் என மன்னார் நகரசபை எதிர்கட்சி மற்றுமொரு உறுப்பினரும் தெரிவித்திருந்தனர் 

 இவ்வாறான நிலையில் பயன்பாட்டுக்கு பொருத்தமற்ற வாகனங்களை பயன்படுத்துவதாலும், வீண்விரய பயணங்களை மேற்கொள்வதாலும், அரச வாகனங்களை சொந்த வேலைக்காக பயன்படுத்துவதாலும் மக்களுக்காக பயன்படுத்த வேண்டிய பாரிய நிதி தொடர்சியாக திருத்த செலவுக்கு என செலவாகி கொண்டிருக்கின்றது எனவே பயன்பாட்டுக்கு உதவாத வாகனங்களுக்கான திருத்த செலவுகள் தவிர்க்கப்படவேண்டும் என்பதுடன் அரச வாகனங்கள் சொந்த பாவனைக்கு பயன்படுத்தப்படுவது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும் அவ்வாறான வகன பயன்பாட்டை தவிர்த்து மாற்றீட்டு வழிகளை நடைமுறைப்படுத்துவதனால் வீண் செலவீனம் கட்டுப்படுத்தப்படும் என்பதுடன் மக்களுக்கான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அவ் நிதியை பயன்படுத்த முடியும் என்பது நிதர்சனம் ஆகும் .











வாகனங்களை பழுது பார்பதற்கு கோடிகணக்கில் செலவு செய்யும் மன்னார் நகரசபை மற்றும் மாவட்ட செயலகம் Reviewed by Author on July 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.