மன்னார் பேராலயத்தில் புனித அந்தோனியாரின் திருப்பண்டம்

மன்னாருக்கு எடுத்துவரப்பட்ட புனித அந்தோனியாரின் திருப்பண்டத்தைத் தொட்டு முத்தி செய்ய சமய வேறுபாடின்றி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மன்னார் பேராலயத்துக்கு வந்திருந்தனர்.
நேரம் போதாமையால் பலருக்குப் புனிதரின் திருப்பண்டத்தைத் தொடும் பாக்கியம் கிடைக்காது, கவலையுடன் வீடு திரும்பியதைக் காணக் கூடியதாக இருந்தது.
இத்தாலியிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள புனித அந்தோனியாரின் திருபண்டமான இருதயம் (14.3.2010) ஞாயிற்றுக் கிழமை காலை யாழ் மறை மாவட்டத்திலிருந்து மன்னாருக்கு ஹெலிகொப்டர் மூலம் தள்ளாடி இராணுவ முகாம் வரை கொண்டுவரப்பட்டது. பின் அது வாகனத்தில் மன்னார் மறை மாவட்ட புனித செபஸ்தியார் பேராலய செபக்கூட மண்டபத்தில் மக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது.
காலை 9.45 தொடக்கம் மாலை 3.00 வரை இந்த வழிபாடு இடம்பெற்றது.
பின் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இராயப்பு யோசேப் ஆண்டகை, புனிதரின் பண்டத்துடன் வருகை தந்திருந்த பசிலிக்கா புனித அந்தோனியார் சபை இயக்குனர் ஆகியோர் உரையாற்றினர். இயக்குநர் ஆயரிடம் மன்னார் மறைமாவட்ட மக்களுக்காகப் புனித அந்தோனியாரின் திருப்பண்டம் வைக்கப்பட்ட நினைவுச் சின்னம் ஒன்றையும் கையளித்தார்.
இதைத்தொடர்ந்து அருட்பணி பெனோ அலெக்சாண்டர் அடிகளாரால் புனித அந்தோனியாரின் செப வேண்டுதல் கேட்கப்பட்டதுடன் மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு யோசேப் ஆண்டகை அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு புனிதரின் திருப்பண்ட ஆசீர் வழங்கினார்.
மன்னார் பேராலயத்தில் புனித அந்தோனியாரின் திருப்பண்டம்
Reviewed by NEWMANNAR
on
September 20, 2009
Rating:

No comments:
Post a Comment