அண்மைய செய்திகள்

recent
-

ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் முதியோர் இல்லம் - மன்னார்

மன்னாரில் தாழ்வுபாட்டு வீதியில் கீரி எனுமிடத்தில் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இலண்டன் ஸ்ரீகனகதுர்க்கை அம்மன் முதியோர் இல்லத்திற்கு 12-06-2009 அன்று 42 முதியோர்கள் செட்டிகுளம் இடைத்தங்கல் நிவாரணக் கிராமங்களில் ஒன்றான வலயம் 04ல் இருந்தும் அருணாசலம் முகாமிலிருந்தும் இராணுவத்தினரின் அனுமதியைப்பெற்ற பின்பு முதியோர்களுக்கான வடமாகாணப் பணிப்பாளர் திரு. கோணேஸ்வரன் அவர்களாலும், சமுக சேவை உத்தியோகத்தர் திரு. சிறீநிவாசன் அவர்களாலும் அனுப்பிவைக்கப்பட்டார்கள்.இந்த முதியோர் இல்லம் இலண்டன் ஸ்ரீகனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதி உதவியோடு அகில இலங்கை இந்துமாமன்றத்தாலும் மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினாலும் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இவர்களில் இரு முதியோர்களை வவுனியாவிலும் கொழும்பிலுமுள்ள அவர்களுடைய உறவினர்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கப்பட எந்த ஆதரவுமற்ற 40 முதியோர்கள் இந்த இல்லத்தில் தொடர்ந்து இருந்து வருகின்றார்கள்.இவர்களில்·
மனநோயினால் பீடிக்கப்பட்டவர்கள்,·
முற்றாகக் கண்பார்வையற்றவர்கள்,·
Cataract தாக்கத்தினால் கண்பார்வைக் குறைபாடுள்ளவர்கள்,·
காது கேளாதவர்கள்,·
இரத்த அழுத்த நோய் மற்றும் சலரோக நோயுள்ளவர்கள்,·
‘செல்’ காயங்களினால் உண்டான காயங்களிலிருந்து இன்னும் முற்றாகக் குணமடையாதோர்,·
காலிழந்தவர்கள்,·
அவயவங்கள் இயக்கமற்றவர்கள்,·
தோய்வு நோயால் பீடிக்கப்பட்டவர்கள்,·
rostate சுரப்பி வீங்கியதனால் சிறுநீர் கழிக்க முடியாமல் இறப்பர் Catheter உடனிருப்பவர்களும் அடங்குவர்.
மற்ற நிறுவனங்கள் சுயமாக எழுந்து நடக்கும் முதியோர்களைத் தரச்சொல்லிக் கேட்டுப் பெற்றுக் கொள்ள அப்பேற்பட்ட முதியோர்களைப் பராமரிப்பதற்கு முதியோர் இல்லமொன்று தேவையில்லை, அகதி முகாம்களிலேயே அவர்களும் மற்றோருடன் போடடி போட்டு உணவு, உடை, மருத்துவ வசதிகளைப் பெற முடியும் என்று நம்பியதால் எந்த நிறுவனமும் அழைத்துச் செல்ல விரும்பாத எல்லோராலும் கைவிடப்பட்டு அகதிமுகாமில் தவித்துக்கொண்டிருந்த முதியோர்களை நாங்கள் பொறுப்பெடுக்கிறோம் என்று பொறுப்பெடுத்ததனால் இம்முதியோருடன் அவர்களுடைய நோய்களையும், துன்பங்களையும், துயரங்களையும் சேர்த்தே பொறுப்பெடுத்தோம். நவீன நாகரீக தாக்கத்தினால் பாதிக்கப்படாத் கூட்டுக் குடும்ப வாழ்க்கையே இறுதிப் போர் முடியும்வரை நிலைபெற்றிருந்தது. பல்வேறு இடம்பெயர்வுகளுக்கும், அகதிவாழ்வின் மத்தியிலும் கூடப் பெரியோர்கள் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். வயது முதிர்ந்தவர்கள் குடும்பத்தில் பெரும் சொத்தாக எண்ணி அவர்களுக்குரிய கௌரவம் வீட்டிலும் சமூகத்திலும் வழங்கும் பண்பாடு வன்னிப் பெருநிலப் பரப்பில் நிலவி வந்தது.

அங்கிருந்த அன்பு, ஆதரவு, அரவணைப்பு முதியோர் ஒருவரை நிறைவாக நூற்றாண்டு காலத்திற்கு மேல் வாழக்கூடிய வாழ்க்கைமுறை வன்னிப் பெருநிலப் பரப்பின் சிறப்பான சமூகக் கட்டமைப்பாக இருந்தது. இதன் நிமித்தம் இந்த முதியோர்கள் நீண்ட காலம் உடலாலும் உள்ளத்தாலும் ஆரோக்கியமாக இருந்ததாலேயே 90 வயதுக்கு மேற்பட்ட பல முதியோர்கள் இன்று வவுனியா, செட்டிகுளம் இடைத்தங்கல் நிவாரணக் கிராமங்களிலிருந்து இலண்டன் ஸ்ரீகனகதுர்க்கை அம்மன் முதியோர் இல்லத்திற்கு வந்திருப்பது உணர்த்துகின்றது.

வீட்டில் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுமாக கலகலப்பாக இருந்த நிலையில் பல்வேறு இடம்பெயர்வுகட்கு முகம் கொடுத்து, ஒவ்வொரு இடம்பெயர்விலும் ஒவ்வொரு சொந்த பந்தங்களைப் பறிகொடுத்து 24 மணிநேரக் குண்டுச்சத்தங்களையும், ஓய்வின்றி ஒலிக்கும் செத்து மடியும் மனிதக் கூக்குரலையும் கேட்டு, தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் தமது கண்முன்னே காயப்படவும், கொல்லப்படவும் இறுதியில் தனியாக விடப்பட்ட நிலையில் தப்பி வந்து இராணுவ உதவியுடன் நிருவகிக்கப்படும் பெரிய பெரிய மரங்களெல்லாம் தறிக்கப்பட்டுச் சுட்டெரிக்கும் வெயிலில் அமைக்கப்பட்டிருக்கும் சின்னஞ்சிறிய கூடாரங்களில் அஞ்சி, அடங்கி, ஒடுங்கிக் கிடந்து, பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் ஒருவேளைச் சாப்பாட்டிற்காகவும், ஒரு வாளித் தண்ணீருக்காகவும் கையேந்தி நின்றுகொண்டிருக்கும் இந்த அசாதாரண சூழ்நிலையில் அவர்களோடு போட்டி போட முடியாமல் உணவுமின்றித் தண்ணீருமின்றி எந்த ஆதரவுமில்லாத தனிமையை உணர்ந்த நிலையில் பதகளிப்பு, மனச்சோர்வு மெய்ப்படுத்தல் என்ற உளநலப் பாதிப்புகளுக்குள்ளாகி ஒரு வெறுமையை உணர்ந்தவர்களாக இருந்தார்கள்.உளவியல் மருத்துவத்தில் பறவை கட்டிய கூட்டில் கட்டிய கூடு வெறுமையடைந்து போவதுபோன்ற நிலையொன்றை (Empty Nest Syndrome) என்று அழைக்கப்படுகின்றது.

வன்னி முதியோர்களைப் பொறுத்தவரையில் பறவை கட்டிய கூட்டிலிருந்து இறக்கை முளைத்துக் குஞ்சுகள் பறந்து போகவில்லை, பறவையின் கண்முன்னாலேயே குஞ்சுகளின் சிறகுகள் பிய்த்தெறியப்பட்டு, உடல் சிதறி இறந்து போவதையும் கட்டிய கூடும் உடைத்தைறியப்படத் தான் மட்டும் தனித்து விடப்பட்டு வெறுமையில் நிற்கும் நிலையைக் காணக்கூடியதாகவுள்ளது. இந்த நிலையை என்ன பெயர்கொண்டு அழைக்கலாம் என்பது உளநல மருத்துவர்களால் தீர்மானிக்கப்பட வேண்டியதொன்று.

செட்டிகுளம் இடைத்தங்கல் நிவாரணக் கிராமங்களுக்கு பொறுப்பான மரண விசாரணை அதிகாரி ஜனாப் சாகுல் ஹமீட் அவர்களின் அறிக்கையின்படி ஆரம்ப காலங்களில் இந்த நிவாரண முகாம்களில் ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு முதியவர் இறந்து கொண்டிருக்கிறார். ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு உயிர் அழிந்துகொண்டிருக்கின்றது.

சமய, சமூகப் பணிகளை செய்துகொண்டிருக்கும் நாம் இதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம் என்ற குற்ற உணர்வு குத்திக்காட்ட அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை அவர்களிடமும் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் அவர்களிடமும், இலண்டனிளுள்ள ஸ்ரீகனகதுர்க்கை அம்மன் ஆலய நிர்வாக சபைத் தலைவர் திரு. ளு. கருணைலிங்கம் அவர்களிடமும், இலண்டன் ஸ்ரீகனகதுர்க்கை அம்மன் நம்பிக்கைப் பொறுப்பாளர் திரு. ளு. பிறேமச்சந்திரன் அவர்களுடன் தொடர்புகொள்ள, இந்த நான்கு நல்ல உள்ளங்களும் செத்துக்கொண்டிருக்கும் மூத்தோர்களை சாவிலிருந்து பாதுகாப்பதென்பது சமுதாய நலன் சம்பந்தப்பட்டது என்பதை உணர்ந்து அவர்கள் தந்த ஆக்கத்தினாலும், ஊக்கத்தினாலும் முதியோர்களைப் பராமரிக்கும் பணியில் சேவை மனப்பான்மையுடனும், அர்ப்பணிப்புடனும் களத்திலிறங்கிச் செயற்பட வேண்டிய தருணம் இதுவென்று மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியம் இந்தப் பாரிய பணியை ஏற்றுக் கொண்டது. சென்ற மாதக் கணக்கின் படி ஒரு முதியவரைப் பராமரிப்பதற்கு எல்லாச் செலவகளும் உட்பட ரூ. 385 ஒரு நாளைக்குத் தேவைப்படுகின்றது. செட்டிகுளம் முகாமிலிருந்து காலில்லாமல் வந்த ஒருவருக்குச் செயற்கைக் கால் பூட்டப்பட்டிருக்கின்றது. எழும்பி நடக்க முடியாமல் இருந்த முதியோர்கள் இயன் மருத்துவத்திற் உலக சைவப் பேரவையின் அனுசணையில் பயிற்சி பெற்ற சிவதொண்டர்களால் இன்று எழுந்து நடக்கின்றார்கள்.

உலக சைவப் பேரவையினால் பயிற்றப்பட்ட உளவள ஆற்றுப்படுத்தும் தொண்டர்களும் இந்த முதியோர் இல்லத்தில் சேவையாற்றுகிறார்கள். செட்டிகுளம் முகாமிலிருந்து 92 வயது நிரம்பிய முதியவர் ஒருவர் போதிய உணவு இல்லாததனாலும், மருத்துவக் கவனிப்பு இல்லாமையாலும் மிகவும் கவலைக்கிடமான நிலையில் நான்கு பேர் பிடிக்கப் பேரூந்திற் தூக்கி ஏற்றப்பட்டார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த சமூக சேவை உத்தியோகத்தர் செட்டிகுளத்திலிருந்து மன்னாருக்குப் போவதற்கிடையில் பேரூந்திலேயே காலமாகிவிடுவார். நீங்கள் அங்கு போனவுடன் முதற் காரியமாக அவருடைய ஈமச் சடங்குகளைத்தான் செய்ய வேண்டும் என்று கூறினார். இவருடைய கூற்றுப் பொய்யாகிப் போக, ஆரம்பத்தில் இந்த முதியவருடன் பல பிரச்சினைகளை நாங்கள் எதிர்நோக்கி மூக்கால் இறப்பர் குழாய் மூலம் பால் பருக்கி இன்று அவர் எழுந்து நடக்கவும், தன்னுடைய உணவைத் தானே கேட்டு வாங்கி உண்ணுவதோடு மட்டுமின்றி நாங்கள் போகும் போது “வாறீங்களா ஓடிப் பார்ப்போம்” என்று சவால் விட்டு ஓடிக் கொண்டிருப்பது ஒரு சந்தோசமான குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் முதியோர் இல்லம் - மன்னார் Reviewed by NEWMANNAR on September 15, 2009 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.