அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் - கொழும்பு நேரடிப் போக்குவரத்தை ஆரம்பிக்குமாறு கோரிக்கை


மன்னார் - கொழும்பு இடையேயான போக்குவரத்து சேவைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மன்னார் மக்கள் சார்பாக போக்குவரத்து அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்றுவந்த கொடிய யுத்தத்தினால் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில்க் கொண்டு வட பகுதியில் இருந்து தென்பகுதிக்கான நேரடி போக்குவரத்து சேவைகள் மதவாச்சி சோதனைச்சாவடியுடன் மட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றது.

இந்நிலையில் தற்போது யுத்தம் முடிவிற்கு வந்திருக்கும் நிலையில் கிளிநொச்சி ஊடான யாழ் - கொழும்பிற்கிடையிலான ஏ9 நேரடி பேரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பியிருக்கின்ற போதும் மன்னார் – கொழும்பிற்கான நேரடி பேரூந்து சேவைகள் இது வரையிலும் ஆரம்பிக்கப்படவில்லை.

இந்நிலையில் மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணிப்பவர்கள் பல கஸ்டங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரியவருகின்றது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று மன்னார் – புத்தளம் - கொழும்பு, மற்றும் மன்னார் – கற்பிட்டி, சேவைகளையும் விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மன்னார் அரச ஊடகவியலாளர்கள் சார்பாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப் பொருமாளிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்னாரில் இருந்து வெளி இடங்களுக்குச் செல்லும் பயணிகள் மதவாச்சி சோதனைச்சாவடியில் இறங்கி தமது பரிசோதனை நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு கால்நடையாகவும் முச்சக்கர வண்டிகளிலும் மதவாச்சி பேரூந்து நிலையத்திற்குச் சென்றே தென் பகுதிக்கான தங்களது பயணத்தைத் தொடர்கின்றனர். இவ்வாறு பயணிப்பவர்கள் மதவாச்சி பேரூந்து தரிப்பிட நிலையத்தில் பலத்த அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரியவருகின்றது.

இதன் காரணமாக சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள், நோயாளிகள், ஊனமுற்றோர் என அனைவரும் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால் பல வலது குறைந்தவர்கள் வெளி இடங்களுக்குச் செல்லாமலும் போதிய சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள முடியாமலும் அவதியுறுகின்றனர்.

இது இவ்வாறிருக்க மதவாச்சி பேரூந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்துகள் அனைத்தும் மதவாச்சியில் இருந்து புத்தளம் வரைக்குமான பயணத்திற்குரித்தான பயணச் சீட்டுக்களை பிரயாணிகளுக்கு வழங்குவதில்லை எனவும் அதே வேளை புத்தளத்திற்கு அப்பால் பயணம் செல்லும் பிரயாணிகளுக்கு மட்டுமே பிரயாணச் சீட்டுக்களும் ஆசனங்களும் வழங்கப்படுவதாகவும், புத்தளம் வரை பயணம் செய்பவர்களுக்கு ஆசனங்கள் மறுக்கப்படுவதாகவும் இதன் காரணமாக அவர்கள் நீண்ட தூரத்திற்கு நின்று கொண்டே தமது பயணத்தைத் தொடர்வதாகவும் கவலை வெளியிடப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க மதவாச்சி சோதனைச்சாவடியில் இருந்து மதவாச்சி பேரூந்து நிலையம்வரைக்குமான குறுகிய தூரத்திற்கு முச்சக்கர வண்டியில் செல்லும் பிரயாணிகளிடம் ரூபா 80 முதல் 100 ரூபாவரை கட்டணமாக அறவிடப்படுவதாகவும் தெரியவருகின்றது.

எனவே மேற்குறித்த காரணங்களைக் கருத்தில்க் கொண்டு மன்னார் – கொழும்பிற்கிடையேயான நேரடி போக்குவரத்து சேவையினை ஆரம்பித்து மக்களின் இயல்பான போக்குவரத்திற்கு ஆவன செய்ய வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக மன்னார் அரச ஊடகவியலாளர்கள் சார்பாக போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
-Mannar Net
மன்னார் - கொழும்பு நேரடிப் போக்குவரத்தை ஆரம்பிக்குமாறு கோரிக்கை Reviewed by NEWMANNAR on October 18, 2009 Rating: 5

1 comment:

Anonymous said...

Kannan

Unmaithaan

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.