அண்மைய செய்திகள்

recent
-

மரணத்தை அணைத்துக்கொண்ட இறைமகன் ""தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனா?''

இன்று உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவ மக்களுக்கு ஒரு துக்ககரமான நாள். இன்றுதான் நம் இறை மகன் இயேசு, உலக மக்களின் மீட்புக்காகத் தம் உயிரையே தியாகம் செய்த நாள். கடந்த மூன்று வருட காலத்திலே மரித்தவர்களை உயிர்ப்பித்த இறை மகன், மரணத்தை அணைத்துக் கொண்ட நாள். இதனால்தான் இன்று கிறிஸ்தவர்கள் அனைவரும் அவர் மரணத்தை நினைவு கூர்ந்து துக்கிக்கிறார்கள்.

இதனால் இன்றைய நாளைப் புனித வெள்ளி என்றும் பெரிய வெள்ளி என்றும் கூறி அவரின் இறப்பை நினைவு கூருகின்றார்கள். நம் வானகத் தந்தை மானிட இனத்தின் மீது கொண்டிருந்த அளவில்லாத அன்பை எண்பிக்கும் நாள். பாவம், மரணம், சாபம் இவைகளின் பிடியிலிருந்து மானிட இனத்தை தம் மகன் இயேசுவின் சிலுவை மரணத்தின் வழியாக மீட்டுக் கொண்ட நாள். உண்மையில் இறை மகன் கிறிஸ்து சிலுவை மரத்தில் தொங்கி இறந்திரா விட்டால், இந்த மனுக் குலம் முழுவதும் முடிவில்லா வாழ்வை, நித்திய சீவியத்தை இழந்திருக்கும்.

இந்த மனுக் குலம் முழுவதின் பாவங்களுக்கும் பரிகாரப் பலியாக இயேசுவின் இரத்தம் முழுவதும் சிந்தப்படாதிருந்தால் சாவிற்குப் பின் நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பேரின்ப வாழ்வு, நிறை வாழ்வு உண்டு என்ற உறுதியும், எதிர்நோக்கும் இல்லாதொழிந்திருக்கும். பெரிய வெள்ளியாகிய இன்று மானிட இனம் முழுமையும் தந்தைக்கும் அவரது ஒரே மகன் இயேசுவுக்கும் தூய ஆவிக்கும் உள்ளார்ந்த வகையில் நன்றி செலுத்தும் நாள் ""பணிவிடை பெற அல்ல, பணிவிடை புரியவும் எல்லோருடைய மீட்புக்காகவும் என்னைப் பலியாக்கவும் வந்தேன்'' என்று கூறினார். இயேசு அவ்வாறே வாழ்வுக்குரிய வார்த்தைகளைப் போதித்தும், மீட்புக்குரிய அருஞ் செயல்களைப் புரிந்தும், இறுதியில் தன் பணி வாழ்வைப் பலி வாழ்வாக மாற்றிய நாள்.

தான் சென்ற இடமெல்லாம் யாவரும் நன்மைகளையே புரிந்த இயேசு இன்றைய முதல் வாசகம் கூறுவது போல துன்புறும் ஊழியனாக மனுக்குலத்தின் பாவங்கள் அனைத்தையும் தன் மேல் சுமந்து கொண்ட சுமைதாங்கிக் கல்லானார். இதனால்தான் நாமும் திருச்சிலுவைப் பாதையின் போது ""எல்லோரின் பாவங்களை ஏற்று வழிநடந்து எங்கே போகிறீர்'' என்று பாடுகிறோம். இகழப்படவும், சிறுமைப்படவும், வதைக்கப்படவும், நொறுக்கப்படவும், காயப்படுத்தப்படவும், முள்முடி சூட்டப்படவும், மூங்கில் தண்டு ஏந்தப்படவும், ""யூதர்களின் அரசே வாழ்க'' என்று நையப்புடைக்கப்படவும், சிலுவையிலே ஆணிகளால் அறையப்படவும், ஈட்டியால் குத்தி ஊடுருவப்படவும் கடைசி துளி இரத்தம் வரை சிந்தவும், தன்னையே பரிபூரணமாக ஒப்புக் கொடுத்த நாள். நம் தலைமைக் குருவான இயேசு பாவ நிழல் அணுகாத, பாவமே புரியாத இறை மகனாயிருந்தும், கொடுந்துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டார். இவ்வாறு நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணரானார். இவை அனைத்தையும் தாங்கிக் கொள்ள, அவருக்கு இத்தகைய ஆற்றலை தந்தையிடமிருந்து புறப்படும் தூய ஆவியேயாகும்.

அன்று விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டதனால் அந்த மரமே சபிக்கப்பட்டதாக இருந்தது. ஆனால் கடவுள் அந்த மரத்தை அத்துடன் விடவில்லை. கடவுளால் சபிக்கப்பட்ட அந்த மரத்தையே தன் மரணத்தின் மூலம் மீட்பின் அடையாளமாகக் காட்டினார். எனவேதான் சிலுவை என்பது இயேசுவின் மரணத்தை மட்டுமல்ல மாறாக அவரது மகிமையையும் குறிக்கின்றது. இந்த மாபெரும் மகிமையையிட்டு புனித பவுள் தனது திருமுகத்தில், ""சிலுவை பற்றிய செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால் மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை'' என்றார். இந்தச் சிலுவையில்தான் மரணம் ஏற்பட்டது. இயேசு மரித்தார். என்றாலும் இந்த மாபெரும் இழப்பினால்தான் உயிர்ப்பு என்ற ஆதாயம் நமக்கு ஏற்பட்டது. நம் ஆதிப் பெற்றோரின் கீழ்ப்படியாமையால் இவ்வுலகத்தினுள்ளே பாவமும் சாவும் நுழைந்தது. ஆனால் இரண்டாம் ஆதாமாகிய இயேசுவின் கீழ்ப்படிதலினால் ஆதிப் பெற்றோர் கட்டிக் கொண்ட பாவத்திற்கும் அதன் வழியாய் நுழைந்த சாவுக்கும் மன்னிப்பும் முடிவில்லா வாழ்வும் இறைவனால் அருளப்பட்டது. மேலும் அவர் நமக்குப் பெற்றுத் தந்த மீட்பை நாம் அனைவரும் பெற்றுக் கொள்ளும்படியாக அனுபவிக்கும்படியாக இயேசு தம் வலது பக்கத்தில் அமர்ந்திருந்து நமக்காகப் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். இயேசுவின் சிலுவையைப் பற்றிய செய்தி ஒன்று உண்டு. நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உரோமப் பேரரசர் கான்ஸ்டான்ஷனின் தாய் ஹெலனா, கிறிஸ்துவின் வாழ்க்கையோடு தொடர்புடைய புனித ஸ்தலங்களைத் தேடி ஜெருசலேமுக்குச் சென்றானாம். மீட்பரின் கல்லறையின் மேல் கட்டப்பட்டதென்று கருதப்பட்ட அபோரித்து என்னும் அஞ்ஞானக் கடவுளின் கோயிலை இடித்துத் தள்ளினான். அவளுடைய மகன் அதே இடத்தில் மீட்பரின் புனித கல்லறையைப் பேராலயமாகக் கட்டினான். இப்பேராலயத்தைக் கட்டும் போது பூமிக்கு அடியில் நடத்தப்பட்ட அகழ்வுகளில் மூன்று சிலுவைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் இம்மூன்றில் ஒன்றைத் தொட்ட நோயாளிகள் உடனே குணமானார்கள் என்றும் ஆகவே அந்தச் சிலுவைதான் இயேசு பாடுபட்டு மரித்த சிலுவையென்று நம்பப்பட்டதாகவும் ஒரு பாரம்பரியச் செய்தி நிலவியது. ஒரு பெரிய வெள்ளியன்று, எருசலேமில் நடந்த வழிபாட்டில் வெள்ளிப் பேழையிலிருந்த இந்தச் சிலுவையை வெளியே எடுத்து, பீடத்தில் நிறுத்தி கிறிஸ்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக அதன் முன் வந்து, வணங்கி முத்தி செய்து சென்றார்கள். நான்காம் நூற்றாண்டின் இறுதியிலே தொடங்கப்பட்ட இச்சிலுவை முத்தி செய்யும் வழக்கம், இன்று வரை பெரிய வெள்ளிக் கிழமைகளில் எல்லாக் கிறிஸ்தவ ஆலயங்களிலும் இன்றும் தொடர்ந்து நடந்து வருவதை நாம் அறிவோம்.

எமது எல்லாக் கோயில் கோபுரங்களிலும் இன்று நாம் காண்பது என்ன? திருச்சிலுவையே. மற்றும் மாடி வீட்டிலும், மண் குடிசைகளிலும் வீட்டு வாசல்களிலும் திருச்சிலுவையைக் காண்கிறோம். இச்சிலுவை அடையாளத்தை நாம் நம் நெற்றியிலும், நெஞ்சிலும் வரைந்து கொள்ளுகிறோம். கழுத்தில் அணியும் சங்கிலியிலும் சிலுவையையே அணிந்து கொள்ளுகிறோம். அனைத்து நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் வீட்டில் குடும்பச் செபமாலை ஆரம்பிக்கும் போது, வீட்டை விட்டு வெளியேறும் போதும் சிலுவை அடையாளத்துக்கே முதலிடம் கொடுக்கிறோம்.

அன்று அடிமைகளின் கொலைக் கருவியான சிலுவை, இன்று ஆராதனைக்குரிய அரும் பொருளானது. இறை மகன் அந்தச் சிலுவையில் மரித்து, உயிர்த்ததால்தான் ஆண்டவர் சிலுவையில் உயர்த்தப்பட்டார். அதனால் சிலுவையும் உயர்வு பெற்றது.

தெய்வத் திருமகன் இயேசு, கொலைக் கருவியான சிலுவையைத் தமது மீட்பின் கருவியாக மாற்றியது எப்படி? ""கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாக இருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்கவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு கீழ்ப்படிந்தார். ஆகவே கடவுளும் அவரை மிகவும் உயர்த்தினார். ""(பிலி 2 : 6 8) நான் சாந்தமும் தாழ்ச்சியும் உடையவன் என்பதை என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள்'' என்றார். இயேசு நாம் கற்றுக் கொண்டோமா? நமக்கும் மனத் தாழ்ச்சி உண்டா? அல்லது தற்பெருமையும் ஆணவமும் அதிகமாக இருக்கிறதா?

இன்று அனைத்து ஆலயங்களிலும் இடம்பெறும் பெரிய வெள்ளி ஆராதனை மிக முக்கியமானவை. இன்றைய வழிபாடு இயேசு நமக்காக சுமந்து சென்ற சிலுவையை நம் மனக் கண்முன் கொண்டு வருகின்றது. உலகின் பார்வையிலே சிலுவை என்பது ஒரு மடமை எனக் கருதப்பட்டாலும், அந்த மீட்பின் பாதையில் சிலுவையானது கடவுளின் ஞானமாகும். இயேசு சிலுவையிலிருந்து இறங்கவில்லை. மாறாக சிலுவையில் இருந்தே இந்த உலகை மீட்டார். சிலுவை உலகக் கண்ணோட்டத்தில் தோல்வியின் சின்னமல்ல. அது ஒரு மாபெரும் மகிமையின் அடையாளமாகும். இயேசு சிலுவையில் இறக்கவில்லை. மாறாக உயர்த்தப்பட்டார். துன்பம் வழியே இன்பம். துன்பத்தின் வழியாகத்தான் நாம் துன்பத்தை வெல்ல வேண்டும். சாவின் வழியாகவே அவர் சாவை வென்று சாகõ வரம் பெற்றார். தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு வேறில்லை (யோவா. 15 : 13) கோதுமை மணி மண்ணில் மடிந்தால் மட்டும் பலன் உண்டு என்பதை நமக்கு இன்றைய நாளும் இன்றைய வழிபாடுகளும் நினைவூட்டுகின்றன.

எல்லாம் எதற்காக? ""நம் பாவங்களுக்காக அவர் காயப்பட்டார். நம் அக்கிரமங்களுக்காகவே அவர் நொறுக்கப்பட்டார்'' (ஏசா. 53 : 5) இயேசுவுக்கும் போதகர் என்றும் இறைவாக்கினர் என்றும் மீட்பர் என்றும் பல வகையான உருவங்கள் கொடுக்கப்பட்டாலும் நமது பாவங்களுக்காக துன்புற்றதினால் ""துன்புறும் ஊழியன்'' என்பதே அவரது வாழ்வின் இறுதியில் மிகவும் பொருத்தமாக அமைகிறது. அவரது மூன்றாண்டு காலப் பொதுப் பணிக்குக் கிடைத்த பரிசு சிலுவையாகும். தம்மைக் கொடுத்து இறுதியில் தன்னை அழிப்பதே அன்பு என்பதை தமது போதனையிலும் சிலுவையிலும் சாதித்துக் காட்டினார். அன்பின் ஊற்று நீதியின் இருப்பிடம் மூன்று ஆணிகளில் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தொங்கியது. கொடுத்துக் கொடுத்து சிவந்த கைகள், கூரிய ஆணிகளால் சிவந்து போனது. பிஞ்சு உள்ளம், நஞ்சு உள்ளங்களால் குத்தப்பட்டது. அன்பை, இரக்கத்தை மீட்பை மன்னிப்பை, மனித மாண்பை பேசிய நாவோ, தாகத்தால் வரண்டு போனது. பாவத்தின் கொடுமையும் அன்பின் ஆழமும் சந்தித்துக் கொண்டது. ஆனால் பாவத்தின் முடிவு புனிதத்தின் தொடக்கமானது. மரண வேதனையிலும் அறியாது செய்யும் இவர்களை மன்னியும் என்று மன்றாடியது. அந்த மனித குரல் மனித சமுதாயத்தின் புரையோடிப் போன சுயநலம் என்னும் புற்றுநோயைக் குணமாக்க தன்னையே மருந்தாகத் தியாகம் செய்தது. இவையெல்லாம் நம் பாவங்களுக்காகவும் இறைத் தந்தையின் மீதுள்ள அன்புக்காகவும் மட்டுமே. இதுவே நமக்குக் கல்வாரி கற்பிக்கும் பாடம். இதுவே சிலுவை சொல்லும் வார்த்தைகள். இன்றைய நாளிலே நாம் சிந்திப்போம். எம்மை நாம் நிந்திப்போம். இறை இயேசுவைச் சந்திப்போம். அவரை வந்திப்போம்.
மரணத்தை அணைத்துக்கொண்ட இறைமகன் ""தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனா?'' Reviewed by NEWMANNAR on November 04, 2009 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.