அண்மைய செய்திகள்

recent
-

தரைவழியின்றி துண்டிக்கப்பட்டுள்ள குஞ்சுக்குளம் கிராமத்து மக்கள் (வீடியோ இணைப்பு)

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த குஞ்சுக்குளம் கிராமம் தொடர்ந்தும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றது. இந்த கிராமத்திற்குச் செல்லும் வீதி சீறிப்பாய்ந்த வெள்ளத்தினால் அள்ளுண்டு பாரிய கிடங்குகள் ஏற்பட்டுள்ளன. இந்த வீதியில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு பாலங்களைக் காணவில்லை. ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றுள்ளது. இதனால் இந்தக் கிராமத்திற்கான போக்குவரத்து மிகவும் கடினமானதாக மாறியுள்ளது.


அடித்துச் செல்லப்பட்ட பாலம் இருந்த இடத்திற்கு அருகில் கரையோரத்தில் இருந்த பெரிய மரம் ஒன்று ஓடும் நீருக்குக் குறுக்கே வீழ்ந்து கிடக்கின்றது. இந்த மரத்தின் மீதேறியே அத்தியாவசிய தேவைக்காகச் செல்பவர்கள் போய் வருகின்றார்கள் என இந்தப் பாதையின் ஊடாகக் குஞ்சுக்குளத்திற்குச் சென்று திரும்பியுள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மழை ஓய்ந்து வெயில் எறிக்கத் தொடங்கியுள்ள போதிலும், இந்தக் கிராமத்து மக்களுக்கு இன்னும் போக்குவரத்து சீராகவில்லை. அந்தக் கிராமத்திற்குச் செல்லும் வீதி மோசமாகப் பாதிக்கப்பட்டு பாலங்கள் உடைந்திருப்பதனால் இந்த வீதி உடனடியாகத் திருத்தப்படுமா என்பது சந்தேகமாக இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

எனினும் இந்தக் கிராமத்திற்கான வீதியைத் திருத்தி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பாதையின் ஊடாக 73 வயதுடைய மரிசீலியா என்ற வயோதிபப் பெண்மணி பிரயாணம் செய்ததைக் காணொளியில் காணலாம். தனது பிரயாணம் குறித்தும் தமது ஊராகிய குஞ்சுக்குளத்திற்கு நிரந்தரமான பாதுகாப்பான வீதி அமைக்குமாறு நீண்ட காலமாக ஊர் மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருவது பற்றியும் அவர் இந்தக் காணொளியில் விளக்குகின்றார்.
தரைவழியின்றி துண்டிக்கப்பட்டுள்ள குஞ்சுக்குளம் கிராமத்து மக்கள் (வீடியோ இணைப்பு) Reviewed by NEWMANNAR on February 15, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.