வெற்றி வாய்ப்புக் குறித்து உறுதியான நம்பிக்கையில் பிரதான கட்சிகள்
3 மாநகர சபைகள், 30 நகரசபைகள், 202 பிரதேச சபைகளை உள்ளடக்கிய 235 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வியாழக்கிழமை (17-03-2011) தேர்தல் இடம் பெற்ற நிலையில் வெற்றிவாய்ப்பு தத்தமக்கே என்று ஆளும் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
7,362 வாக்களிப்பு நிலையங்களில் இன்று வாக்குப்பதிவு இடம்பெறுகிறது. 9,813,375 வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் வாக்களிக்கும் தகைமையை பெற்றுள்ளனர்.
இடம்பெறும் உள்ளூராட்சித் தேர்தலில் தத்தமக்கே வெற்றிவாய்ப்பு இருப்பதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி.யும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றன. அதேசமயம் மக்கள் தமது வாக்குரிமையை உரிய முறையில் பயன்படுத்த முன்வர வேண்டுமெனவும் அக்கட்சிகள் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றன.
புதன்கிழமை ஆளும் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி.யும் கொழும்பில் செய்தியாளர் மாநாடுகளை நடத்தி தேர்தல் தொடர்பாக விளக்கமளித்தன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் மாநாடு மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, டாக்டர் ராஜித சேனாரத்ன, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;
இன்றைய தேர்தலின் போது சகல மக்களும் காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும். அமைதியான வாக்களிப்புக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். இத்தேர்தல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தலொன்றல்ல என்பதை அனைவரும் மனதில் பதிய வைத்துச் செயற்படவேண்டும்.
நாட்டில் பலமுள்ள அரசாங்கம் அதிகாரத்திலுள்ளது. இந்த நிலையில் உள்ளூராட்சிச் சபைகளின் அதிகாரம் ஆளும் கட்சிக்கு வந்தால்தான் கிராமப்புறங்களின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும். எதிரணியினரின் தவறான பிரசாரங்களில் மயங்கி மக்கள் தவறான முடிவுகளை எடுக்கக் கூடாது. தேர்தலில் ஆளும் கட்சியே பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ளும்.
எதிரணியினரான ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி.யும் இத்தேர்தலில் படுதோல்வியைச் சந்திப்பது தவிர்க்க முடியாததாகும். அந்த இரண்டு கட்சிகள் மீதும் நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். ஆளும் கட்சியின் வெற்றியை எந்தவொரு கட்சியாலும் தடுத்துவிட முடியாது எனத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் செய்தியாளர் மாநாடு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தி கொண்டுள்ளனர். அந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் தேர்தலாகவே இன்றைய தேர்தல் அமையப்போகின்றது. தேர்தல் நடைபெறும் உள்ளூராட்சிச் சபைகளில் 90 சதவீதத்துக்கும் கூடுதலான சபைகளை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றும். அத்தகைய தீர்ப்பொன்றை வழங்குவதற்கு மக்கள் முடிவு செய்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி இத்தேர்தலில் ஈட்டப்போகும் வெற்றியானது இந்த அரசாங்கத்தினை வீட்டுக்கனுப்பும் செயல்திட்டத்தின் ஆரம்பமாகவே அமையப்போகின்றது. இது சின்னத் தேர்தல் என்று ஆரம்பத்தில் எள்ளி நகையாடிய அரசாங்கம் இறுதிக் கட்டப்பிரசாரத்தின் போது நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தல் களமாக மாற்றிக் கொண்டதை அவதானிக்க முடிந்தது. வெற்றியின் மீது நம்பிக்கை கொண்ட அரசு பெரும் போராட்டமொன்றையே நடத்தியது. தேர்தல் பிரசாரம் முடிந்த பின்னரும் கூட அரச ஊடகங்கள் மூலம் முறைகேடான பிரசாரங்களில் ஆளும் தரப்பு ஈடுபட்டு வருகின்றது. தேர்தல் ஆணையாளர் இதனைக் கண்டுகொள்ளத் தவறியுள்ளார்.
நீதியான, நேர்மையான முறையில் தேர்தலை நடத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் சுதந்திரமாக அச்சம் பீதியின்றி வாக்களிக்கக் கூடிய சூழலை உருவாக்குமாறும் தேர்தல் ஆணையாளரையும் பொலிஸ் மா அதிபரிடமும் நாம் கேட்டுக் கொள்கிறோம் என்று கோரிக்கை விடுத்தார்.
ஜே.வி.பி. கோரிக்கை
ஜே.வி.பி. விடுத்திருக்கும் அறிக்கையில் களநிலைமைகளை அவதானிக்கும் போது தேர்தல் நேர்மையாக நடக்குமா என்பது சந்தேகமானது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் ஆணையாளர் தமக்கிருக்கும் அதிகாரத்தை சரியான முறையில் பயன்படுத்தி பக்கச்சார்பற்ற வகையில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த காலத் தேர்தல்களில் நாம் பல படிப்பினைகளைக் கற்றுக் கொண்டோம். ஜனநாயகத் தேர்தல் குறித்து எம்மிடையே கேள்வி உருவாகியுள்ளது. மோசடியும் ஊழலும் பெருமளவில் இடம்பெற்றும் கூட அவை கண்டு கொள்ளப்படவில்லை.
இந்தத் தேர்தலையாவது நீதியாக நியாயமாக நடத்துமாறு கோருகின்றோம் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெற்றி வாய்ப்புக் குறித்து உறுதியான நம்பிக்கையில் பிரதான கட்சிகள்
Reviewed by NEWMANNAR
on
March 18, 2011
Rating:

No comments:
Post a Comment