மன்னாரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பாடசாலைகளிலிருந்து இடை விலகிய மாணவர்கள் 784பேர்
மன்னார் மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 784 சிறுவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
மன்னாரிலுள்ள நன்னடத்தைப் பிரிவு மேற்கொண்ட ஆய்வின் மூலம் இத் தகவல்கள் தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பாடசாலைகளிலிருந்து இடைவிலகியவர்களில் 16 வயது முதல் 18 வயது வரையான சிறுவர்களே அதிகமாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறுவர்கள் பாடசாலைகளை விட்டு இடைவிலகி நீண்டகாலமாகியுள்ளதால் அவர்களை மீண்டும் பாடசாலையில் சேர்த்துக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
இவ்வாறானவர்களுக்கு சுயதொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அல்லது தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் மன்னார் சிறுவர் தொடர்பாக பணியாற்றும் அலுவலர்களால் வழங்கப்பட்டு வருகின்றன.
வறுமை, பெற்றோர்களின் கவனயீனம், கல்வி கற்பதில் நாட்டமின்மை போன்ற காரணங்களால் இந்த சிறுவர்கள் பாடசாலைகளை விட்டு இடைவிலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு மாதாந்தம் உதவித்தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு மாதாந்தம் தலா 750 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக கடந்த வாரம் இந்த உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அத்துடன், பாடசாலை செல்லும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள சிறுவர்களுக்கும் தாய் அல்லது தந்தையை இழந்த பாடசாலை செல்லும் சிறுவர்களுக்கும் வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் கூடிய விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மன்னாரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பாடசாலைகளிலிருந்து இடை விலகிய மாணவர்கள் 784பேர்
Reviewed by NEWMANNAR
on
August 07, 2011
Rating:

No comments:
Post a Comment