அண்மைய செய்திகள்

recent
-

மடுமாதாவின் வருடாந்த ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

மடுத்திருத்தலத்தின் வருடாந்த ஆவணித் திருவிழா திட்டமிட்டபடி இம்மாதம் 6ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பித்திருக்கின்றது.

யுத்தம் முழுமையாக முடிவடைந்ததன் பின்னர் இடம்பெற்று வரும் மூன்றாவது வருடாந்த ஆவணித் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்திருப்பதாக மடுத்திருத்தலத்தின் நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது. 



இம்மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கும் மடு அன்னையின் வருடாந்தத் திருவிழாவானது நேற்று 06.08.2011 மாலை விசேட நற்கருணை வழிபாட்டுடன் ஆரம்பமாகியிருக்கின்றது. தினமும் மாலை நவநாள் ஆராதனைகள் இடம்பெற்று 14ஆம் திகதி மாலை வெஸ்பர் ஆராதனையும் மறுநாள் 15ஆம் திகதி காலை திருவிழாத் திருப்பலியும் இடம்பெற இருக்கின்றன.

இவ்வருட ஆவணித் திருவிழா திருப்பலியானது கர்தினால் பேரருட் திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நிறைவேற்றப்படுவதுடன் மட்டு.- திருமலை மறை மாவட்ட துணை ஆயர் பேரருட் திரு பொன்னையா ஜோசப் உட்பட ஆயர்கள், அருட்தந்தையர்களின் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அன்னையின் திருவிழாத் திருப்பலி லத்தீன், தமிழ், சிங்களம், மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெற இருப்பதாகவும் திருப்பலியினைத் தொடர்ந்து மடுமாதாவின் திருச்சொரூப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெறும்.

மடுத் திருத்தலத்திற்கு வரும் பக்த அடியார்கள் எவ்வித களியாட்டங்களும் இன்றி திருத்தலத்தின் புனிதத்தன்மையைப் பேணி நடக்குமாறு மடுத்திருத்தல நிர்வாகம் பக்தர்களைக் கேட்டிருக்கின்றது.

இதேவேளை அன்னையின் வருடாந்த ஆவணித் திருவிழாவிற்கு நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் சுமார் ஆறு இலட்சம் பக்தர்கள் வரலாம் என தாம் எதிர்பார்ப்பதாக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமிலியான்ஸ் பிள்ளை தெரிவித்திருக்கின்றார்.

திருத்தலத்திற்கு வரும் பக்தர்களின் வசதி கருதி தங்குமிடம், உணவு விடுதிகள் மற்றும் சுகாதார வசதிகளை மேற்கொண்டிருப்பதாகவும் இம்முறை போதிய அளவான நீர் வசதிகள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

இதே வேளை மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் மின்சாரப் பற் றாக்குறையின் காரணமாக திருவிழாவிற்கான விசேட மின்சார வேலைத்திட்டங்களை திருத்தலத்தின் நிர்வாகம் முன்னெடுக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கின்றது.

இதனிடையே மன்னாரில் இருந்து மடுத் திருத்தலத்திற்கான விசேட போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்ளவென அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மன்னார் அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் மேற்கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. _
மடுமாதாவின் வருடாந்த ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் Reviewed by NEWMANNAR on August 05, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.