மன்னார் ஆக்காட்டிவெளி கிராமத்தில் கடை உரிமையாளர் வெட்டிப்படுகொலை!
மன்னார் மாவட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆட்காட்டிவெளி கிராமத்தில் நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் கடை உரிமையாளர் ஒருவர் இனம் தெரியாத நபர்களினால் அவரது கடைக்குள் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் ஆட்காட்டி வெளி கிராமத்தில் வசித்து வரும் குடும்பஸ்தரான கனகரத்தினம் மகேந்திரன் (வயது-42) என விடத்தல் தீவு பொலிஸார் தெரியவித்துள்ளனர்.
இவர் நேற்று இரவு 9 மணியளவில் தனது கடையில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று இரவு உணவை சாப்பிட்டு விட்டு மீண்டும் இரவு 9.30 மணியளவில் படுப்பதற்காக கடைக்குச் சென்றுள்ளார்.
இன்று வியாழக்கிழமை காலை 5.30 மணியாகியும் வீடு வராததன் காரணத்தினால் குறித்து அவரது தாயார் அவரை பார்ப்பதற்காக கடைக்குச் சென்றபோது அவர் கடைக்குள்ளேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டநிலையில் இரத்த வெள்ளத்தில்சடலமாக கிடப்பதை கண்டதும் தாயார் குழறி கூக்குரலிட்டதையடுத்து அயலில் உள்ளவர்கள் அவ்விடத்தில் குவிந்தனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து விடத்தல் தீவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர் மன்னார் பதில் நீதவான் எம்.எம்.சபூர்தின் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனைகளை மேற்கொண்டார். விசாரணையின் போது கொலையாளி கடைக்கு பின்புறமாக வந்து தகரத்தினை பிரித்துக்கொண்டு உள்ளே நுளைந்து சென்று கொலை செய்துள்ளமை தடயங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
கனகரத்தினம் மகேந்திரன் வீட்டில் இருந்து மீண்டும் கடைக்குச் சென்ற போது குறித்த நபர் கடைக்குள் பதுங்கியிருந்து அவரின் தலை மற்றும் கழுத்து பகுதியில் கண்மூடித்தனமாக கூரிய ஆயுதங்களால் வெட்டியுள்ளார்.
கொலையாளி கடைக்குள் இருந்த மிளகாய்த்தூளை கொலை நடைபெற்ற இடத்தில் கொட்டி விட்டு பின்புறமாக தப்பிச்சென்றுள்ளார். இதன் போது கொலையாளி தப்பிச்சென்ற இரத்த தடயங்கள் மற்றும் அவர் அணிந்திருந்ததாக கூறப்படும் செருப்பு என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
பின் காலை 10.30 மணியளவில் வவுனியாவில் இருந்து தடயம் கண்டறியும் நிபுணர் குழுவும் வருகை தந்து தடயங்களை பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து பதில் நீதவான் எம்.எம்.சபூர்தினின் உத்தரவிற்கமைவாக சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேற்படி சம்பவ இடத்திற்கு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் குறித்த கிராம மக்கள் மேற்படி சம்பவம் தொடர்பில் தாம் பெரிதும் அச்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம் பெற்ற இடத்தில் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் இராணுவத்தினரின் காவலரண் ஒன்றும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வர்த்தகரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உறவினர்களைப் பார்க்க யாழ்ப்பாணம் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
மன்னார் ஆக்காட்டிவெளி கிராமத்தில் கடை உரிமையாளர் வெட்டிப்படுகொலை!
Reviewed by NEWMANNAR
on
September 02, 2011
Rating:

No comments:
Post a Comment